சுறுசுறுப்பாக இயங்கிய ஜப்பான்!… விறுவிறுப்பாக தொடர்ந்த பயணம்!!… தொடர்- 16….. சங்கர சுப்பிரமணியன்


எல்லாம் கடந்து போகும், இதுவும் கடந்து போகும் என்ற மனநிலயை மனித இனம் வளர்த்திருப்பதால் மட்டுமே இழப்புகளையும் துயரங்களையும் தாண்டி மனித இனம் முன்றேறிச் சென்று கொண்டிருக்க முடிகிறது. நம் இனம் அடைந்த பேரழிவை எண்ணிப்பார்த்தேன். அன்றிருந்த மனநிலை இன்று மாறவில்லையா? இருந்தாலும் பெற்ற அனுபவம் புதிய பாதை வகுக்க வழிசெய்யும் என்றுதான் இயங்க வேண்டியுள்ளது.
செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட பேரழிவில் இருந்து விடுபட மாற்று வழிகள் உள்ளன. இயற்கை பேரழிவுகளான ஆழிப்பேரலை, நிலநடுக்கம், நிலச்சரிவு என்று எதிர்பாராது நிகழும் இடர்களையும் ஏற்று மனித இனம் வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறது. என்றெல்லாம் பலவாறு எண்ணியபடி வந்ததால் ஹிரோஷிமா ரயில் நிலையம் வந்ததே தெரியவில்லை.
இப்போது பயணத்தில் ஓரளவு வந்தழி பழகியிருந்ததாலும் ஒப்பீட்டு அளவில் டோக்கியோ மற்றும் ஒஸாகா ரயில் நிலயங்களைவிட ஹிரோஷிமா மலைப்பை அதிகம் ஏற்படுத்தவில்லை. அதனால் அனிச்சை செயலாக ரயில் நிலையத்தில் நுழைந்து ஒஸாகா செல்லும் ரயிலைக் கண்டுபிடித்து இருக்கைகளில் அமரும்வரை எவ்வித பிரச்சினைகளையும் இல்லாமல் இருந்தது.

ஒஸாக வந்து சேர்ந்தோம். ஹிரோஷிமா பயணம் ஒரு நாள் பயணமாக இருந்ததாலும் நிறைய இடங்களை பார்வையிட வேண்டியிருந்ததால் நடந்து கொண்டே இருந்தோம். எதையும் அளவோடு செய்யவேண்டும். ஆற்றில் எவ்வளவு நீர் ஓடினாலும் குடிக்கமுடிந்த அளவுதான நீரைக் குடிக்கமுடியும். எல்லா இடங்களையும் பார்த்துவிட வேண்டும் என்றதால் நடந்து கொண்டே இருந்தோம்.
அதனால் வந்தபின் விளைவு கால் முழுக்க வலி. வயதுபோன காலத்தில் வாக்கிங்
போனோமா வந்து வீட்டில் அமர்ந்தோமா என்றில்லாமல் இருந்தால் இப்படித்தான். இதில் என் மனைவி ஊரைச்சுற்றிப் பார்க்க வந்தோமா ஓய்வெடுக்க வந்தோமா என்று ஏற்படுத்திய உற்சாகம் இருவருக்கும் அதன் பலனைத் தந்தது. இருந்தாலும் நம் பழமொழி சோர்விலும் மனத்தளர்ச்சிக்கு விடை தரத்தான் செய்கிறது.
பரம ரகசியமான அந்த பழமொழி நீங்கள் அறிந்திராவிட்டால் சொல்கிறேன் பரமரகசியமாக வைத்துக் கொள்ளுங்கள்? நோவில்லாமல் நோம்பிருக்க முடியுமா? என்பதுதான் அப்பழமொழி. ஏன் அப்படிச் சொன்னேன் என்றால் பாடுபட்டால்தான் பலன் உண்டு என்பதை நம்மில் பலர் உணராமல் இருப்பதால் பரமரகசியம் என்றேன். மாடசாமி அண்ணாச்சி வந்து வேலையைப்பார் வந்த வேலையைப் பார் என அறிவுரை வழங்குகிறார்.
தங்கும் விடுதிக்கு வந்ததும் ஏற்கனவே வாங்கி வந்திருந்த அவசர உணவை உண்டு காதுகேளாத அனுபவத்தை சோபாவில் சாய்ந்தபடி தொலைக் காட்சி மூலமாக பெற்றோம். தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே என்று வேண்டிக் கொள்ளாமலே தூக்கம் கண்களைத் தழுவியது.
குயில் கூவித் துயிலெழுப்ப கொடி அரும்ப கண்விழிக்க என்ற பாடலைப்போல கைபேசி மணி ஒலிக்க காலையிலே கண் விழித்தோம். பயணத்தின் இறுதிக் கட்டமாக இன்னும் இரண்டு நாட்களே இருந்தன. மீதமுள்ள விடுபட்ட இடங்களைப் பார்த்துவிட்டு ஷாப்பிங் செய்யவேண்டும். தமிழ்நாட்டில் பேருந்து என்றால் ஏற இறங்க பார்ப்பார்கள்.
அதுபோல் பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் அண்ணாச்சியும் எங்களை நாங்கள் சங்க காலத்தில் வாழ்வதைப்போல் வினோதமாகப் பார்ப்பார் என்பதால் ஷாப்பிங் என்றேன். அத்தோடு ஊரோடு ஒத்து வாழ் என்ற பழமொழியையும் சொல்வார். இப்போது அவனுக்கென்ன தூங்கிவிட்டான் அகப்பட்டவன் நானல்லவோ என்றதிரைப்படப் பாடல் நினைவு வருகிறது. இப்போது ஏன் அப்பாடல் நினைவுக்கு வருகிறது?
பழக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு எனக்கும் பழமொழி தொற்றிக் கொண்டது. அதன் விளைவு ஒரு மேடையில் பேசும்போது ஆர்வக்கோளாறில் இரண்டொரு பழமொழிகளை அதிகம் சொல்ல அதனால் கடுப்படைந்த அண்ணாச்சி ஒருவர் எங்களுக்கு பழமொழி தெரியாதா? அதை எங்களுக்கும் சொல்லத் தெரியாதா என்று சொல்லி என்னை வானலியில் போட்டு வறுத்தெடுக்காத குறையாக வறுத்தெடுத்து விட்டாராம் என்பது செவி வழிச்செய்தி.
அதைக் கேள்விப்பட்ட நான் பொது வாழ்க்கையில் இதுவெல்லாம் சகஜமப்பா என்று கவுண்டமணி பாணியில் எடுத்துக் கொண்டேன். இதை எழுதும்போது இன்னொன்றும் என் தலையில் ஓடியது. இந்த பாணியில் மூன்று சுழி வருமா இரட்டைச்சுழி வருமா? அதற்கு முதலில் இது தமிழ்ச் சொல்லா அல்லது வடமொழி சொல்லா என்ற மொழி ஆய்வுக்குள் செல்லவேண்டும்.
ஏனென்றால் இது வடமொழிச் சொல்லிலும் வருகிறது. கவுண்டமணி பாணியில்
என்று வருவதால் மூன்று சுழிபோட்டு தப்பித்து பிழைத்தேன். பாணி என்றால் வழி மற்றும் முறையாகும். ஒருவேளை சொல்லே தமிழ்ச் சொல்லாய் இல்லாதிருந்தால் எத்தனை சுழி என்று எவ்வாறு சொல்ல முடியும்? கோதண்டத்தை கையில் வைத்திருப்பவரை வடமொழியில் எத்தனை சுழிபோட்டு அழைப்பது?
எத்தனை பட்டும் புத்திவரவில்லை என்பதுபோல் நானும் தடம் புரண்டு கொண்டே இருக்கிறேன். சரி எங்கு விட்டேன்? ஓம்…ஷாப்பிங். ஒஸாகாவில் ஷாப்பிங் செய்ய சிறந்த இடம் ஷின்சய்பஷிசுஜி. நகைச்சுவை என்ற ஒன்றுமட்டும் இல்லாவிட்டால் நாம் கற்கால மனிதர்களைப் போன்றுதான் வாழ்ந்திருப்போம்.
என் மனைவி என்னைப் பார்த்த்து ஜப்பான் வந்ததிலிருந்து நீங்கள் ஜின்ஜினுக்கான் ஜினுக்கு ஜிக்கான் என்று பாட ஆரம்பித்து விட்டீர்கள் என்று பகடி பண்ண ஆரம்பித்து விட்டாள். நான் என்ன செய்வது? ஷின்ஜுகு ஹியோயன் என்பது டோக்கியோவிலுள்ள தேசிய பூங்கா. ஷின்சய்பஷிசுஜி என்றால் ஒஸாகாவிலுள்ள ஷாப்பிங் செய்ய பிரபலமான தெரு என்றேன்.
என்னவோ தெரியவில்லை? நான் சிறுவனாக இருந்தபோது ஷாப்பிங் என்பதைப் பற்ற அறிந்திருக்வில்லை. இப்போதெல்லாம் ஷாப்பிங் செய்யாவிட்டால் ஒரு மாதிரியாக பார்க்கிறார்கள். ஜப்பான் போய் வந்தானாம் ஷாப்பிங் செய்யலையாம் என்ற பேச்சில் இருந்து விடுபட ஒரு தொகையை செலவுசெய்ய வேண்டியுள்ளது. கோவிலுக்கு வந்திருக்கோம் ஒரு அர்ச்சணை பண்ணிட்டு போவோம் என்பது போல்தான் இதுவும்.
ஆதலால் ஷின்சய்பஷிசுஜி சென்றோம். என்ன அங்கு பஜ்ஜியெல்லாம் போடுகிறார்களா? நல்லா இருக்குமா என்று மாடசாமி அண்ணாச்சி மைண்ட் வாய்ஸில் பேசுவது எனக்கு கேட்கிறது? அண்ணாச்சி அது ஜப்பானில் மத்திய ஒஸாகாவில் உள்ள புகழ்பெற்ற கடைவீதியாகும். இங்கு கிடைக்கத பொருட்கள் இல்லை என்று கூறும் அளவுக்கு எல்லாவிதமான பொருட்களும் கிடைக்கும்.
இதன் சிறப்பு கிட்டத்தட்ட நானூறு ஆண்டுகளாக இயங்கி வருகிறது. சுமார் எட்டு தொகுதிகளாக அறுநூறு மீட்டர் நீளத்துக்கு பரந்து கிடக்கிறது. பொதுவாக பதினொரு மணியில் இருந்து இரவு எட்டு மணிவரை கடைகள் திறந்திருக்கும். ஷின்சய்பஷி ரயில் நிலையத்திலிருந்து சிறிது தூரம் நடந்தால் இந்தால் இந் கடை வீதியை அடையலாம்.
(தொடரும்…)
![]()
