நீதிமன்ற அவமதிப்பு சிக்குவாரா வீரவன்ச?

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள விளக்க மறியல் உத்தரவு தொடர்பில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலான கருத்தை வெளியிட்டுள்ளதாகவும், இது தொடர்பில் விசாரணை நடத்த உத்தரவிடுமாறும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
எயார்பஸ் கொடுக்கல் வாங்கலில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே பிரதி சொலிசிட்டர் ஜெனரல் இவ்வாறு நீதிமன்றத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறித்த வழக்கு விசாரணையின் போது, கடந்த 12ஆம் திகதி அநுராதபுரத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் நடத்தப்பட்ட பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய வீரவன்ச, நாமல் ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்டுள்ள விளக்க மறியல் தொடர்பில் கருத்துக்களை கூறியுள்ளதாகவும், இதன்போது நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டுள்ளாரா? என்று ஆராய்ந்து விசாரணை நடத்த உத்தரவிடுமாறு சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில், வீரவன்சவின் உரை அடங்கிய இருவட்டை கையளித்து கேட்டுக்கொண்டார்.
இது தொடர்பில் ஆராய்ந்த நீதவான், இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிடுவதாக நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.
![]()