இலங்கை

அனோஜனுக்காக முஸ்லிம் சமூகம் ஆதரவுக் குரல்: விடுவிக்குமாறு சவூதி மன்னரிடம் கோரிக்கை

சவூதி அரேபியாவில் அனோஜன் சிவராஜாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களை அடுத்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், கல்முனை நற்பிட்டிமுனையிலுள்ள அவரது குடும்பத்தினரை நேற்று நேரில் சென்று சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது அனோஜனின் தாய், சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினரைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், தனது ஆறுதலையும் ஆதரவையும் தெரிவித்ததோடு, இச்சம்பவம் தொடர்பாக உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாட நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

இது குறித்து அவரது ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் இலங்கை முஸ்லிம் சமூகத்தினிடையேயும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.

அனோஜனின் நிலைமை தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சவூதி அரேபிய மன்னரிடம் அவசர கோரிக்கை விடுப்பதற்காக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைக்க உத்தேசித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அனோஜனை விடுவிக்க தலையீடு செய்து சவூதி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்குமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையிடம் (ACJU) வேண்டுகோள் விடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இச்சந்திப்பின் போது, அனோஜனின் விடுதலையை உறுதி செய்வதற்கான முயற்சிகளுக்கு முஸ்லிம் சமூகம் தனது முழுமையான ஆதரவை வழங்கும் என எதிர்பார்ப்பதாக அவரது குடும்பத்தினர் நம்பிக்கை வெளியிட்டனர்.

அனோஜனின் குடும்பத்தினரின் கவலையைத் தானும் முஸ்லிம் சமூகமும் பகிர்ந்துகொள்வதாகவும், அவருக்கு உதவுவதற்கான அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவளிப்பதாகவும் ரிஷாட் பதியுதீன் உறுதியளித்தார்.

மேலும், பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சாணக்கியன் இராசமாணிக்கம் மற்றும் மனோ கணேசன் ஆகியோர் தொலைபேசி மூலம் தம்மைத் தொடர்புகொண்டு இ விவகாரம் குறித்துக் கலந்துரையாடியதாக அவர் வெளிப்படுத்தினார்.

அனோஜனின் வழக்கு தொடர்பாக மேல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஒரு குழுவாக இணைந்து செயல்படத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும், இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் செய்தி குறித்து இலங்கையின் வெளியுறவு அமைச்சு இதுவரை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *