உலகம்

போதைப்பொருள் கடத்தல் நாடுகளின் பட்டியலில் இந்தியாவையும் இணைத்தது அமெரிக்கா

இந்தியாவில் சட்டவிரோத கசகசா (அபின்) பயிர்ச்செய்கையைக் கட்டுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு எடுத்து வரும் முயற்சிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வரவேற்றுப் பாராட்டியுள்ளார்.

அதேவேளையில், போதைப்பொருள் கடத்தல் மற்றும் உற்பத்தி நடைபெறும் 23 முக்கிய நாடுகளின் பட்டியலில் இந்தியா, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளையும் அமெரிக்கா சேர்த்துள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு ஜனாதிபதி டிரம்ப் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் (Presidential Determination), அமெரிக்க-இந்திய போதைப்பொருள் கொள்கைக் கூட்டமைப்பின் (United States-India Drug Policy Framework) மூலம் தொடர்ச்சியான ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.

“சட்டவிரோதக் கசகசா பயிர்ச்செய்கையைக் கட்டுப்படுத்தவும், விநியோகச் சங்கிலியின் பாதுகாப்பை பலப்படுத்தவும் பிரதமர் மோடியும் இந்திய அரசும் எடுத்து வரும் முயற்சிகளை நான் வரவேற்கிறேன்” என்று டிரம்ப் தனது உத்தியோகபூர்வ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் ஒரு நாடு இடம்பெறுவது, அந்த நாட்டின் தற்போதைய போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளையோ அல்லது அமெரிக்காவுடனான ஒருங்கிணைப்பையோ தவறாக மதிப்பிடுவதாக ஆகாது என்பதை ஜனாதிபதி டிரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார்.

அமெரிக்கச் சட்டத்தின்படி, புவியியல், வணிகம் மற்றும் பொருளாதாரக் காரணிகளால் போதைப்பொருட்கள் அல்லது அதற்குப் பயன்படும் வேதிப்பொருட்கள் கடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் மட்டுமே நாடுகள் இந்தப் பட்டியலில் சேர்க்கப்படுகின்றன.

அமெரிக்காவினால் அடையாளப்படுத்தப்பட்ட 23 நாடுகளின் பட்டியலில் இந்தியா, சீனா, பாகிஸ்தான் தவிர ஆப்கானிஸ்தான், பஹாமாஸ், பெலிஸ், பொலிவியா, பர்மா (மியான்மர்), கொலம்பியா, கோஸ்டாரிக்கா, டொமினிகன் குடியரசு, ஈக்வடார், எல் சால்வடார், குவாத்தமாலா, ஹைட்டி, ஹொண்டுராஸ், ஜமைக்கா, லாவோஸ், மெக்சிகோ, நிகரகுவா, பனாமா, பெரு மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *