உலகம்

மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்; ஜோர்டான் மீது ஈரான் தாக்குதல்

மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஜோர்டான் மீது ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜோர்டானின் பப்ரக் மற்றும் அஸ்ரக் பகுதிகளில் அமைந்துள்ள அமெரிக்க விமானப்படைத் தளங்களை இலக்காகக் கொண்டு இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் பதற்ற நிலை தீவிரமடைந்தது.

இதற்கு பதிலடியாக ஈரான் இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளில் உள்ள இலக்குகள் மீதும், பிராந்தியத்தில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீதும் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தது.

இதனிடையே, ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால் சர்வதேச கப்பல் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதுடன், கச்சா எண்ணெய் விலையும் அதிகரித்திருந்தது. பின்னர் இரு தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து சில நாட்கள் மத்திய கிழக்கில் பதற்றம் தணிந்திருந்தது.

எனினும், கடந்த மாத இறுதியில் இருந்து ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மீண்டும் அவ்வப்போது மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில், ஈரானின் கார்க் தீவில் நிறுத்தப்பட்டிருந்த ஐந்து கச்சா எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்க போர்க்கப்பல் ஒன்றின் மீது ஈரான் மேற்கொண்ட தாக்குதலுக்கு பதிலடியாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலடியாக ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை ஈரான் குறிவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இரண்டு அமெரிக்கக் கப்பல்கள், எட்டு கச்சா எண்ணெய் கப்பல்கள் மற்றும் பத்து சரக்குக் கப்பல்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், இந்தத் தாக்குதல்களால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் தொடர்பான முழுமையான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *