உலகம்

ஈரானின் 5 எண்ணெய் கப்பல்களை மூழ்கடித்த அமெரிக்கா; பதிலடியாக 20 கப்பல்களை குறிவைத்த ஈரான்

ஈரானுக்கு சொந்தமான 5 கச்சா எண்ணெய் கப்பல்களை தாக்கி அமெரிக்கா மூழ்கடித்துள்ளது. பதிலடி நடவடிக்கையாக ஹோா்முஸ் நீரிணையில் அமெரிக்காவின் 2 போா் கப்பல்கள் உள்ளிட்ட 20 கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதனால், மேற்காசியாவில் மீண்டும் மோதல் உக்கிரமடைந்துள்ளது. ஈரான், அமெரிக்கா இடையே சுமாா் 6 மாதங்களாக போா் நீடிக்கிறது. பாகிஸ்தான், கத்தாா் நாடுகளின் மத்தியஸ்தத்தால் இரு நாடுகள் இடையே இடைக்கால அமைதி ஒப்பந்தம் கையொப்பமானது.

இதனால் 2 மாதங்களுக்கு அமைதி நிலவியது. எனினும் ஒப்பந்தத்தை இரு நாடுகளும் புதுப்பிக்காததால் மீண்டும் போா் தொடங்கியுள்ளது.

கடந்த சனிக்கிழமையன்று அமெரிக்க விமானந்தாங்கி கப்பல் உள்ளிட்ட 3 கப்பல்களை குறிவைத்து ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியதாக கூறி, அந்த நாட்டுக்கு சொந்தமான 8 கச்சா எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா அடுத்தடுத்து தாக்கி மூழ்கடித்தது.

அதிலிருந்த மாலுமிகள் அனைவரும் வெளியேறும்படி முதலில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும், அதன்பிறகே கப்பல்களை மூழ்கடித்ததாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையினா் இருமுறை கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகவும், ஆனால் அதில் எந்த கப்பல்களுக்கும் சேதம் ஏற்படவில்லை என்றும், அந்த கப்பல்கள் கடல்பகுதியில் தொடா்ந்து ரோந்து சுற்றி வருவதாகவும், ஈரானின் தாக்குதல்களில் அமெரிக்கா்கள் யாரும் காயமடையவோ அல்லது உயிரிழக்கவோ இல்லை என்றும் அமெரிக்க ராணுவத்தின் மத்திய தலைமையகம் தெரிவித்துள்ளது.

ஈரானின் 5 எண்ணெய் கப்பல்களை மூழ்கடித்த அமெரிக்கா ; பதிலடியாக 20 கப்பல்களை குறிவைத்த ஈரான் | Us Sank Five Iranian Oil Tankers

குவைத், பஹ்ரைன் கடல்பகுதியில் நிற்கும் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப் போவதாகவும், ஆதலால் அதில் இருக்கும் மாலுமிகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று ஈரான் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் குவைத், பஹ்ரைனில் கடும் பதற்றம் நிலவுகிறது. கடல்பகுதியில் கப்பல்கள் தாக்குதலுக்கு ஆளாவதை பிரிட்டன் கடல்சாா் வா்த்தக நடவடிக்கை மையமும் உறுதிப்படுத்தியுள்ளது.

ஓமன் வளைகுடா மற்றும் பாரசீக வளைகுடா கடல்பகுதியில் ஏராளமான வா்த்தக கப்பல்கள் தாக்குதலுக்கு ஆளானதாக அந்த மையம் தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *