கட்டுரைகள்

எல்லாரும் என்பது யாரெல்லாம்?… கட்டுரைத் தொடர் – 09 … அண்டனூர் சுரா

அண்டனூர் சுரா

ஒரு மேடையில் மூன்று சிறப்பு விருந்தினர்கள் பேச அழைக்கப்பட்டார்கள். ஒருவர் ‘எல்லாருக்கும் வணக்கம்’ என்று உரையைத் தொடங்கினார். மற்றொருவர் ‘எல்லோருக்கும் வணக்கம்’ என்றார். மூன்றாவது விருந்தினர் ‘அனைவருக்கும் வணக்கம்’ என்றார்.

இம்மூன்று வணக்கங்களும் ஒன்றா? அனைவருக்கும், எல்லோருக்கும் இவ்விரு சொற்கள் தரும் பொருளாழமும் பொருட்பரப்பும் என்ன?

எல்லோருக்கும், எல்லாம் என்கிற இவ்விரு சொற்களும் அசையால் சிறியவை. ஆனால் இச்சொற்கள் உணர்த்தும் பொருள் பெரியவை. ‘எல்லா புகழும் இறைவனுக்கே’, ‘எல்லா விளக்கும் விளக்கல்ல’, ‘எல்லாம் வல்ல தாயே’, ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’, ‘எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே’, ‘ எல்லாம் நன்மைக்கே’ இதுபோன்ற சொற்றொடர்கள் அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்துபவை.

‘எல்லோருக்கும் வணக்கம்’ என்கிற சொல்லில் யாரெல்லாம் இருக்கிறார்கள்? வணக்கம் சொல்கிறவர் அதற்குள் இருக்கிறாரா? எல்லோரும் என்பது தன்னிலையா, முன்னிலையா, படர்க்கையா?

ஒரு நண்பர் தன் பிள்ளைக்குத் தமிழில் பெயர்சூட்ட விரும்பி, ‘நல்லான்’ எனச் சூட்டினார். இப்பெயர் குறித்து ஒரு தமிழாசிரியருடன்  கலந்துரையாடுகையில், நல்லான் என்பது நல்லோன் என்றே வரும் எனத் திருத்தியிருக்கிறார். தமிழில் பெயர்சூட்ட நினைத்தவருக்குத் தலைச்சுற்றல் வந்துவிட்டது. பெயரை எடுத்துக்கொண்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தமிழ்ப்பேராசிரியரிடம் சென்றிருக்கிறார். அவர் இலக்கண விதியை ஆராய்ந்து, ‘ நல்லான், நல்லோன்’  இரண்டுமே சரி என்றிருக்கிறார்.

‘ஆ ஓ ஆகலும் செய்யுளில் உரித்தே’ என்னும் இலக்கணப்படி செய்யுளில் நல்லான் என்பது நல்லோன் என்றே வரும். இதன்படி நல்லான் – நல்லோன் ; வில்லான் – வில்லோன் ; எல்லாரும் – எல்லோரும் சரியானவை!

எல்லா, எல்லாம், எல்லாமே, எல்லாரும், எல்லோரும் யாவும் ‘எல்’ என்பதை வேர்ச்சொல்லாகக் கொண்ட சொற்கள். சரி, ‘எல்’ என்பது என்ன?

1919 மே மாதம் 19 அன்று மகாகவி சி.சுப்பிரமணிய பாரதி அவர்கள், எட்டயபுரம் மன்னருக்குச் சீட்டுக்கவி எழுதினார். புலவர் மொழியில் சீட்டுக்கவி என்பது கோரிக்கை மனு. ஸ்ரீ எட்டயபுரம் ராஜ ராஜேந்திர மகாராஜ வெங்கடேசு ரெட்டப்ப பூபதி அவர்கள் சமூகத்துக்கு எனத் தொடங்கி ஒன்றன்பின் ஒன்றாக மூன்று சீட்டுக்கவிகள் எழுதி அனுப்பினார். அவற்றில் மூன்றாவது கவியை இவ்வாறு எழுதியுள்ளார்.

“கல்வியே தொழிலாக் கொண்டோய் கவிதையே தெய்வமாக

அல்லு நன் பகலும் போற்றி அதை வழிபட்டு நின்றாய்

சொல்லிலே நிகரிலாத புலவர் நின் சூழலற்றால்

எல்லினைக் காணப் பாயும் இடபம் போல் முற்படாயோ?”

பாரதியார் பயன்படுத்திய உவமைகளில், “எல்லினைக் காணப் பாயும் இடபம் போல்” என்கிற உவமை தனித்துவமானது. இடபம் என்பது ரிஷபம். அதாவது காளை. எல் என்பது பரிதி அதாவது சூரியன்.

‘சூரியனைக் கண்டதும் காளை உழவுபுரிய வயலுக்குப் பாய்வதைப் போல’ என்று இந்த உவமையின் பொருளைப்  புரிந்துகொள்ள வேண்டும். எட்டயபுரம் மன்னரே, கேளுங்கள்! உங்களைச் சுற்றி புலவர் குழாம் சூழ்ந்து நிற்கையில் அவர்களுக்கு நீங்கள் செய்ய வேண்டிய உதவி, சூரியனைக் கண்டு உழவு வேலைக்குப் பாயும் காளையைப் போன்ற வேகத்தில் இருக்க வேண்டும் என்கிறார்.

பாரதியார் வாழ்ந்த காலத்தில் வெங்கடேசுர எட்டுத்தேவர் என்கிற பெயரில் இருவர் இருந்துள்ளார்கள். ஒருவர் பாரதியின் நண்பர். இவர் நகர பஞ்சாயத்தில் தலைவராக இருந்தவர். பாரதியார் பாண்டிச்சேரியில் வசித்த காலத்தில் கேட்டும் கேட்காமலும் பல உதவிகள் செய்தவர். மற்றொருவர் எட்டயபுரம் ஜமீன். இவரை பாரதி மன்னர் என்று குறிப்பிடுகிறார். இருவரில் யாருக்குச் சீட்டுக்கவி எழுதினார் என்கிற குழப்பம் அன்றைய தமிழறிஞர்களுக்கு இருந்திருக்கிறது. முன்னவர் நண்பர் என்பதாலும் உதவி கேட்டால் செய்யக்கூடியவர் என்பதாலும் அவருக்கு எழுதியிருக்க வாய்ப்பில்லை. பின்னவர் ஜமீன். செல்வந்தர். இவருக்கே சீட்டுக்கவி எழுதியிருக்க வேண்டும்.

இச்சீட்டுக்கவி எழுதப்பட்ட காலம் பாரதி பாண்டிச்சேரியிலிருந்து இடம் பெயர்ந்து பிரிட்டிஷ் இந்தியாவை வந்தடைந்த காலம். நாடு திரும்பியவர் கடயம் கே.ஆர். அப்பாத்துரையார் வீட்டில் தங்குகிறார். இவர் பாரதியின் மைத்துனர். உறவினர் வீட்டில் நீண்டகாலம் தங்க விரும்பாத பாரதி அதே ஊரில் ராமசாமி கோவிலுக்கும் வடக்கே, ‘பட்டர் வீடு’ என்ற ஓட்டுக் கட்டடத்தில் வாடகைக்குக் குடியேறுகிறார். இவ்வீடு மழைக்கும் வெயிலுக்கும் ஒழுகும் வீடாக இருக்கிறது. இந்த வீட்டைச் செப்பனிட பண உதவி தேவைப்பட்டிருக்கிறது. அதற்காக அவர் எட்டயபுரம் மன்னருக்கு ஓலைத்தூது அனுப்புகிறார். மன்னரிடமிருந்து ஒரு பதிலும் வரவில்லை. பிறகு அவர் ஒரு சீட்டுக்கவி எழுதி அனுப்பியிருக்கிறார். அதையும் மன்னர் கண்டுகொள்வதாக இல்லை. அடுத்து எழுதிய கவியில் ‘அண்ணலே பரிசு கோடி அளித்திட விரைகிலாயோ?’ என எழுதியிருக்கிறார். அதையும் அவர் கண்டுகொள்ளவில்லை. அடுத்ததாக அவர் எழுதிய சீட்டுக்கவியில்  உதவி கேட்கும் புலவர்களுக்குச் ‘சூரியனைக் கண்டதும் உழவுக்குப் பாயும்  காளையைப் போல உதவ வேண்டும்’ என எழுதினார்.

நண்பனுக்குச் சக நண்பன் உதவும் உதவியும் ஏழைக்கு ஒரு செல்வந்தர் உதவும் உதவியும் மக்களுக்கு ஓர் ஆட்சியாளர் செய்யும் உதவியும் வெவ்வேறு வேகம் கொண்டவை.  நண்பனுக்குச் செய்யும் உதவி, “உடுக்கை இழந்தவன் கை போல” அதிவேகத்தில் இருக்க வேண்டும் என்கிறது வள்ளுவம். ஏழைக்குச் செல்வந்தர் செய்யும் உதவி “கோடைக்கால மழையின் வேகம்“ என்கிறது புறநானூறு. ஆட்சியாளர்கள் மக்களுக்குச் செய்யும் உதவி, “எல்லினைக் காணப் பாயும் இடபம்” வேகத்திற்கு இருக்க வேண்டும் என்கிறார் பாரதி!

எல்லாம் என்பதில் யாரெல்லாம் இருக்கிறார்கள்? நிலம், நீர், காற்று, உயிருள்ள, உயிரற்ற, வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை, மெல்லுடலிகள், பச்சையமற்ற, பசுமையான, ஒரு வித்திலை, இருவித்திலை தாவரங்கள், நீர் வாழ்வி, நிலம் வாழ்வி, காற்று வாழ்வி, மீன், விலங்கு, பூச்சி, ஊர்வன, பறப்பன, பாலூட்டி, முதுகெலும்பு உள்ளவை அற்றவை, ஓரறிவு முதல் ஆறறிவு வரை என அத்தனையும் இருக்கின்றன.

எல்லோரும், எல்லோருக்கும் என்பதில் ஆறறிவு இருப்பதாக சொல்லிக்கொள்ளும் மனிதர்கள் மட்டுமல்ல, மனிதனுக்கு முன்பு தோன்றிய அனைத்தும் உயிர்களும் இருக்கின்றன. இதையேதான் தாயுமானவர், “எல்லோரும் இன்புற்றிருக்க ” எனப் பாடியிருக்கிறார்! மூதுரை பாடலில், “எல்லாருக்கும் பெய்யும் மழை” என்கிறார் ஔவையார். என்னவோர் உயரிய பார்வை!

எல்லா, எல்லோரும், எல்லாமே என்பதற்குக் காரணமான ‘எல்’ என்பது ஆதியில் தோன்றிய தமிழ்ச்சொல். இச்சொல் தமிழ் காலத்தையொட்டிய கிரேக்க மொழியிலும் உள்ளது. அம்மொழியிலும், ‘எல் ’ என்பது சூரியனையே குறிக்கிறது. கிரேக்கர்களின் காவல் கடவுள் ‘எல்’. கிரேக்கர்கள் தங்களை ‘எல்லனிக் கிரிஸ்’ என அழைத்துக்கொள்கிறார்கள். அதாவது சூரியக் குழந்தைகள். இந்தியாவில் புராணக் கதைகளில் சூரியக் குலத்தவர்கள் உண்டு. ‘எல்’ என்கிற சொல்லே ஆங்கிலத்தில் ‘அல்’,‘ ஆல்’ என மருவியுள்ளது. ஆல் என்றால் ‘அனைத்தும்’, ‘அனைவரும்’, ‘எல்லாம்’ என்பதாகப் பொருள்கொள்ளப்படுகிறது.

எல்லோரும் என்பதும் அனைவரும் என்பதும் ஒன்றல்ல. அனைவருக்கும் கல்வி இயக்கம் என்பதை எல்லோருக்கும் கல்வி இயக்கம் என எழுத முடியாது. அனைவருக்கும் என்பது ஒவ்வொருத்தருக்கும். எல்லோருக்கும் வணக்கம் என்பது சரி. எல்லோருக்கும் கல்வி என்பது சரியாக இருக்க முடியாது.

எல்லாருக்கும் என்பதில் நான், நீ, நாம், பறவை, விலங்கு, பூச்சி, ஊர்வன என எல்லாம் இருக்கின்றன.

அனைவரும் என்பது உயர்திணை. அனைத்தும் என்பது அஃறிணை. எல்லாம் என்பது இரு திணைக்கும் உரியது. அனைவரும் சமம் என்பது மனிதத்துவம். எல்லாம் சமம் என்பது உயிர்த்துவம்.

 

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button