இலங்கை

மாகாணசபைத் தேர்தலுக்குரிய நிதி நிவாரணத்துக்காக பயன்படுத்தப்பட்டதா?

மாகாண சபை தேர்தல்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி, டித்வா பேரிடர் நிவாரணத்துக்காக பயன்படுத்தப்படவில்லை என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“ டித்வா பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் சேதமடைந்த உள்கட்டமைப்புகளை மறுசீரமைப்பதற்காக கொடையாளர்களால் வழங்கப்பட்ட நிதி தனிப்பட்ட கணக்கில் வைப்பிலிடப்படவில்லை.

சட்டவிரோதமான கணக்கிலும் வைப்பிலிடப்படவில்லை.
அனைத்து நிதி உதவிகளும், திறைசேரியின் பிரதிச் செயலாளரின் மேற்பார்வையின் கீழ் பராமரிக்கப்படும் ஒரு சிறப்பு கணக்கு ஊடாகவே கையாளப்படும். எனவே, சட்டப்பூர்வமான தன்மை தொடர்பில் பிரச்சினை எழவில்லை.

ஸ்ரீபில்டிங் ஸ்ரீலங்கா நிதியத்துக்கு கிடைக்கப்பெற்ற இந்த நிதிகள் தேசிய முன்னுரிமைகள் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப அடையாளம் காணப்பட்ட திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

அவை வெளிப்படைத்தன்மையுடனும் திறமையுடனும் பயன்படுத்தப்படும்.

இத்திட்டங்கள் முக்கியமாக பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குதல், வாழ்வாதாரங்களை மீட்டெடுத்தல், சேதமடைந்த பொது உள்கட்டமைப்புகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளை மீண்டும் கட்டியெழுப்புதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன.

அனைத்து நிதிகளின் நிர்வாகமும் பயன்பாடும் மிக உயர்ந்த வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லாட்சி கோட்பாடுகளுக்கு இணங்க மேற்கொள்ளப்படும்.

அதேவேளை, மாகாணசபைத் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதி ,நிவாரணத்துக்காக பயன்படுத்தப்படவில்லை.” – என்றார் பிரதமர்.

யாழில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது, மாகாணசபைத் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதி, நிவாரணத்துக்கு பயன்படுத்தப்பட்டது என்ற தொனியில் ஜே.வி.பி. செயலாளர் கருத்து வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button