ஐரோப்பய நாடுகளுக்கு அச்சுறுத்தலாக அமைந்த Omega Block எனும் வெப்ப அலை…. சின்னத்தம்பி குருபரன்


இயற்கைச் சூழலுக்கும் மனிதனுக்கும் இடையிலான மோதல் காரணமாக சூழல் மிக மோசமான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. வெப்பக் காற்று, அசுத்தக் காற்று, சூழல் மாசடைதல், துருவப் பிரதேசங்களிலுள்ள பனி மலைகள் உருகுதல் எனப் பாரிய தாக்கங்களை உலகம் கண்டு கொண்டிருக்கிறது. இயற்கைக்குப் போர்வையாக இருந்த காடுகள் அழிக்கப்பட்டதன் காரணமாகவும் தொழிற்சாலைக் கழிவுகள்.
குளோரோ புளோரோ காபன், மெதேல் வாயு, வாகணப் புகைகள் போன்ற இன்னும் பல காரணமாகவும் உலகுக்குப் போர்வையாக அமைந்த பச்சை வீட்டு விளைவில் தாக்கம் ஏற்பட்டுள்ளது. ஓசோன் படையில் ஏற்பட்ட அதிகரித்த ஓட்டைகள், புவிக்கும் ஓசோன் படைக்கும் இடையெ புதிதாகத் தோன்றியிருக்கும் பத்துக்கு மெற்பட்ட இரசாயன மூலக் கூறுகளிலான புதிய படை ஆகியவற்றால் பச்சை வீட்டு விளைவில் ஏற்பட்ட எதிர்மறைத் தாக்கம் காரணமாகப் புவி வேகமாக வெப்பமடைந்து செல்கின்றது. பச்சை வீட்டு விளைவு, புவி வெப்பமடைதல், காலநிலை மாற்றம் ஆகிய மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. பொன்று அவற்றுக்கிடையே தெளிவான வேறுபாடுகளும் காணப்படுகின்றன.
பச்சை வீட்டு விளைவு (Greenhouse Effect) பூமிக்கு இயற்கை தந்த பாதுகாப்பான ஒரு போர்வையாகும். சூரியனில் இருந்து வரும் வெப்பத்தை பூமியின் வளிமண்டலத்தில் (Atmosphere) உள்ள சில வாயுக்கள் (கார்ப்பன் டை ஒட்சைட்டு, மெதேன், நீராவி போன்றவை) அப்படியே விண்வெளிக்குத் திரும்பிச் செல்லவிடாமல் தடுத்து, ஓரளவுக்குத் தக்கவைத்துக் கொள்ளும் ஆற்றல் கொண்டது. இந்த இயற்கை நிகழ்வு இல்லையெனில் புவியின் சராசரி வெப்பநிலை உறைநிலைக்குக் கீழ் (18 பாகை C) சென்று, உயிரினங்கள் வாழத் தகுதியற்ற ஒரு பனிப்பந்தாக பூமி மாறியிருந்திருக்கும்.

புவி வெப்பமடைதல் (Global Warming) என்பது இயற்கைச் சராசரி அளவை விடக் கூடுதலான வெப்பம் பூவியில் தேங்கி, உலகளாவிய ரீதியில் பூவியின் சராசரி வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து செல்வதைக் குறிக்கும். மனிதனின் இயற்கைக்கு ஒவ்வாத செயல்பாடுகள் (தொழிற்சாலைக் கழிவுகள், வாகனப் புகை, காடுகளை அழித்தல், நிலக்கரி மற்றும் எரிபொருட்களை எரித்தல்) காரணமாக வளிமண்டலத்தில் பச்சை வீட்டு வாயுக்களின் (Greenhouse Gases) அளவு மிக வேகமாக அதிகரித்து வருவதனால் புவி வெப்பமடைந்து செல்கிறது.
காலநிலை மாற்றம் (Climate Change) காரணமாகப் புவி வெப்பமடைவதால் ஏற்படும் ஒட்டுமொத்த விளைவு, நீண்டகால மாற்றங்கள் ஆகியள காலநிலையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றனது. புவி வெப்பமடைவதால் பூமியின் ஒட்டுமொத்த தட்பவெப்ப நிலையின் சமநிலை குலைகிறது. ஒரு குறிப்பிட்ட பகுதியின் வானிலை பல தசாப்தங்களாக (Decades) எப்படி மாறுகிறது என்பதை இது குறித்து நிற்கிறது. இதன் காரணமாகத் துருவப் பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் வேகமாக உருகி, கடல் நீர்மட்டமும் உயர்ந்து செல்கிறது. இத்தாக்கத்தின் விளைவாகப் பசிபிக் பெருங்கடலில் எல் நினோ (El Niño), லா நினா (La Niña) போன்றவை ஏற்பட்டு, வெப்பநிலை மாற்றங்களால் உலகளாவிய வானிலையையே தலைகீழாக மாற்றும் இரு முக்கிய இயற்கை நிகழ்வுகளாக மாறியிருக்கின்றன. இவை இரண்டும் ENSO (El Niño-Southern Oscillation)* எனப்படும் ஒரே சுழற்சியின் இரு வேறுபட்ட முனைகள் ஆகும்.
எல் நினோ (El Niño – “குட்டி பையன்”) என்பதை ஸ்பானிய மொழியில் “குட்டிப்
பையன்” “சுட்டிப் பையன்” (Little Boy) அல்லது “இயேசு பாலன்” எனவும் பொருள் கொள்வர். எல் நினோவின் தாக்கம் கிறிஸ்துமஸ் காலத்தில் தொடங்குவதால் இயேசு பாலன் என அதனை அந்நாட்டு மக்கள் அழைத்தனர். வழக்கமாகப் பசிபிக் பெருங்கடலில் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி வீசும் வர்த்தகக் காற்றுப் (Trade Winds) பலவீனமடைந்து, மத்திய மற்றும் கிழக்குப் பசிபிக் பெருங்கடலின் (தென் அமெரிக்காவின் பெரு நாட்டின் கடற்கரையோரம்) மேற்பரப்பு நீர் வழக்கத்துக்கு மாறாக சற்றுக் அதிகமாக வெப்பமடைகிறது. இதன் காரணமாக அவுஸ்திரேலியா, இந்தோனேசியா, இந்தியா, இலங்கை போன்ற தெற்காசிய நாடுகளில் பருவமழை பொய்த்து, கடுமையான வறட்சியும், காட்டுத்தீயும் ஏற்படும். இதற்கு எதிர்மாறாக, தென் அமெரிக்க நாடுகள், (பெரு, ஈக்குவடோர்) அமெரிக்காவின் தெற்குப் பகுதிகளில் வழக்கத்திற்கு மாறான கடுமையான மழையும் வெள்ளப் பெருக்கும் ஏற்படும். எல் நினோத் தாக்கம் அதிகம் காணப்பட்ட ஆண்டுகளைப் பொதுவாக உலகளாவிய நீதியில் மிக வெப்பமான ஆண்டுகளாகப் பதிவிடுவர்.
லா நினா (La Niña – “குட்டி பெண்”) என்பது ஸ்பானிய மொழியில் “குட்டிப் பெண்” “சுட்டிப் பெண்” என்ற பொருள்பட அழைப்பர். இது எல் நினோவிற்கு முற்றிலும் எதிர்மாறான நிகழ்வாகும். பசுபிக் பெருங் கடலில் வீசும் வர்த்தகக் காற்று வழக்கத்தை விட மிகப் பலமாக வீசுவதனால், மத்திய மற்றும் கிழக்குப் பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் உள்ள வெதுவெதுப்பான நீர் அவுஸ்திரேலியா நோக்கித் தள்ளப்பட்டு, தென் அமெரிக்கக் கடற்பரப்பில் உள்ள கீழ் அடுக்குக் குளிர்ந்த நீர் மேலே வருகிறது. இதன் காரணமாகப் பசிபிக் கடல் பரப்பு வழக்கத்தை விட மிகக் குளிர்ந்து எதிர் விளைவை ஏற்படுத்துகிறது. அதனால், அவுஸ்திரேலியா, இந்தோனேசியா மற்றும் தெற்காசிய நாடுகளில் (இந்தியா, இலங்கை) வழக்கத்தை விட மிகக் கடுமையான பருவமழை பெய்து வெள்ள அபாயத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு எதிர்மாறாக, தென் அமெரிக்கா, வட அமெரிக்காவின் சில பகுதிகளில் கடுமையான வறண்ட காலநிலை நிலவுவதனையும் அவதானிக்கலாம். இக்காலப் பகுதியில் அட்லாண்டிக் பெருங்கடலில் உருவாகும் சூறாவளிகளின் (Hurricanes) எண்ணிக்கை, அதன் தீவிரம் காரணமாகப் பாரிய சேதத்தை ஏற்படுத்துகின்றன.
பொதுவாக இந்த இரண்டு நிகழ்வுகளும் 9 முதல் 12 மாதங்கள் வரை நீடிக்கும். சில நேரங்களில் லா நினா இரண்டு ஆண்டுகள் வரை கூடத் தொடரலாம். பருவநிலை மாற்றத்தின் காரணமாக இவற்றின் தீவிரமும், இவை தோன்றும் கால இடைவெளியும் தற்போது மிகவும் கணிக்க முடியாததாக மாறி வருகின்றன.
ஐரோப்பிய நாடுகளில் அண்மைக்காலமாக (2026 ஜூன்/ஜூலை மாதங்களில்) கடுமையான வெப்ப அலைக்குக் (Heatwave) காரணமாக இருக்கும் இந்த நிகழ்வை ‘Omega Block’ என அழைக்கின்றனர். Omega Block என்பது, வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளில் உள்ள காற்று ஓட்டம் (Jet Stream) நேராகச் செல்லாமல், கிரேக்க எழுத்தான ஒமேகா (Omega) வடிவத்தில் வளைந்து, நெளிந்து, தேங்கி நிற்கும் போது இந்த நிலை உருவாகின்றது. இதற்கும் எல் நினொவுக்கும் இடையில் நெருங்கிய தொடர்புள்ளது.
Omega Block என்பது வளிமண்டலத்தின் மேல் அடுக்கில் மிக வேகமாக வீசும் காற்றை ஜெட் ஸ்ட்ரீம் (Jet Stream) என்பர். பொதுவாக இந்தக் காற்று நேராக வீசாமல், அலை அலையாக (வளைந்து நெளிந்து) செல்லும். சில நேரங்களில், இந்த ஜெட் ஸ்ட்ரீம் வளைவு மிகவும் பெருதாகி, கிரேக்க எழுத்தான ஒமேகா (Omega) தலை கீழாகக் கவிழ்க்கப்பட்ட பானை வடிவத்தைப் பெற்று அப்படியே நகராமல் ஒரே இடத்தில் தம்பித்து நின்றுவிடும். இதனால்தான் இதற்கு ‘ Omega Block என்று பெயர் வைத்துள்ளர். இதன் மத்தியில் தோன்றும் உயர் அழுத்தம் (High Pressure) ஒமேகா வடிவத்தின் நடுப்பகுதியில் ஒரு வலுவான உயர் அழுத்த மண்டலத்தை உருவாக்கும். இந்த உயர் அழுத்த மண்டலத்தின் இடது மற்றும் வலது பக்கங்களில் (கீழ் பகுதிகளில்) இரண்டு தாழ் அழுத்த (Low Pressure) மண்டலங்கள் உருவாகும் இந்த அமைப்பு ஒரு ‘சுவர்’ போல செயல்படுவதால், வழக்கமாக நகரும் மேகங்களோ அல்லது குளிர்ந்த காற்றோ இந்த பகுதிக்குள் நுழைய முடியாமல் போகும் இதனால் அங்குள்ள வானிலை வாரக்கணக்கில் மாறாமல் அப்படியே அடைக்கப்பட்டது (Lock) போல் ஆகிவிடும்.
ஐரோப்பாவில் Omega Blockக்கின் நடுவில் இருக்கும் உயர் அழுத்த மண்டலம் ஒரு ‘வெப்பக் குமிழ்’ (Heat Dome) போல செயல்படுகிறது. உயர் அழுத்தம் இருக்கும் இடத்தில் காற்று கீழ்நோக்கி அழுத்தப்படுவதால், அங்கு மேகங்கள் உருவாக முடியாமல் போகும். அதனால் சூரிய ஒளி நேரடியாகவும், மிகக் கடுமையாகவும் நிலப்பரப்பைத் தாக்குகிறது. வெப்பக் காற்று சிறைபிடிக்கப்படுதால் நிலத்திலிருந்து வெளியாகும் வெப்பம் வளிமண்டலத்திற்குள் தப்பிச் செல்ல முடியாமல், இந்த உயர் அழுத்த அமைப்பால் கீழ் நோக்கி அமுக்கி வைக்கப்படுகிறது. இந்த ஒமேகா வடிவம் பல நாட்களுக்கோ அல்லது வாரங்களுக்கோ நகராமல் ஒரே இடத்தில் நீடிப்பதால், நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்துக் கொண்டே சென்று கடுமையான வெப்ப அலையாக (Heat wave) மாறுகிறது. இதேவேளையில் தோன்றும் வளிமண்டல சுழற்சியானது ஆபிரிக்காவின் சகாரா பாலைவனத்திலிருந்து மிக வெப்பமான, வறண்ட காற்றை வடக்கு நோக்கி ஐரோப்பாவிற்குள் இழுத்து வருகிறது. இதுவே, 15 க்கு மேற்பட்ட ஐரோப்பிய நாடுகளின் அதிகரித்த வெப்பத்துக்குக் காரணமாக அமைந்தது.
Omega Block என்பது வெறும் வெப்பத்தை மட்டும் தருவதில்லை. அது ஒட்டுமொத்த பிராந்தியத்தின் வானிலையையும் தலைகீழாக மாற்றிவிடும். கடுமையான வெப்ப அலைகள் மற்றும் வறட்சி: ஐரோப்பிய நாடுகளில் (பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் போன்ற நாடுகள்) கோடை காலத்தில் வெப்பநிலை 40 பாகை செல்சியசுக்கு மேல் உயர இதுவே முக்கிய காரணமாக அமைந்தது. நீர்நிலைகள் வற்றி, கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். அதிக வெப்பம், வறண்ட காலநிலை காரணமாக காடுகளில் எளிதில் தீப்பற்றி, அது மிக வேகமாக பரவும். ஒமேகா வடிவத்தின் நடுவில் வெப்பம் வாட்டும்போது, அதன் இருபுறமும் உள்ள தாழ் அழுத்த பகுதிகளில் அதிதீவிர கனமழை பெய்யும்.
இந்த ‘Omega Block’ காரணமாகப் பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், இங்கிலாந்து, நெதர்லாந்து, பெல்ஜியம் போன்ற மேற்கு, மத்திய ஐரோப்பிய நாடுகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பல நாடுகளில் பகல்நேர வெப்பநிலை 40 °C முதல் 43 °C வரை உயர்ந்து வரலாற்றுச் சாதனைகளை முறியடித்துள்ளது. பகல் மட்டுமின்றி, இரவு நேர வெப்பநிலை 30 °C முதல் 33 °C வரை வெப்பம் குறையாமல் இருந்தமையால் மனித உடல்களாலும், கட்டிடங்களாலும் வெப்பத்தைத் தணிக்க முடிவதில்லை. ஐரோப்பிய நாடுகளின் கட்டிட வடிவமைப்பானது குளிருக்குத் தாக்குப் பிடிக்கக் கூடியதாக மாத்திரம் அமைந்திருந்தமையும் வெப்பத்தைக் கட்டுப்படுத்த முடியால் 2,500 பேருக்கு மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டமைக்குக் காரணமாக அமைந்தன.
பிரான்ஸ், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் திடீரென அதிகரித்த வெப்பத்தைத் தாங்க முடியாமல் நீர்நிலைகளில் குளிக்கும் போது ஏற்பட்ட விபத்துகளால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு, புகையிரதப் பாதைகள் வெப்பத்தால் விரிவடைந்தமை, மின்சாரத் தேவை அதிகரித்தமையால் ஏற்பட்ட மின்தடை, காட்டுத்தீ (Wildfires) அபாயங்கள் என்பவற்றால் வெப்பம் மேலும் அதிகரித்தன.
ஐரோப்பாவின் ஒரு பகுதியில் வெப்பம் கொளுத்தும்போது, அதன் அண்டை நாடுகளான கிரீஸ் அல்லது மத்திய தரைக்கடல் பகுதிகளில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்கு இந்த ‘Omega Block’ காரணமாக இருக்கின்றன. இதனால், முதியவர்கள், குழந்தைகள், உடல் உழைப்பாளர்களுக்கு வெப்ப மயக்கம் (Heat stroke), நீர்ச்சத்து குறைபாடு (Dehydration) போன்ற உயிருக்கு ஆபத்தான பாதிப்புகளும் ஏற்படுகின்றன.
‘Omega Block’ என்பது காநிலை மாற்றத்தால் இயற்கையாகத் தோன்றும் ஒரு வானிலை நிகழ்வுதான் என்றாலும், ‘புவி வெப்பமயமாதல்’ இதன் தீவிரத்தைப் பல மடங்கு அதிகரித்துள்ளது. உலகளாவிய வெப்பநிலைச் சராசரியை விட ஐரோப்பாக் கண்டம் இரண்டு மடங்கு வேகமாக வெப்பமடைந்து வருவதால், இத்தகைய ‘Omega Block’ நிகழ்வுகள் வழக்கத்தை விட 2 முதல் 4 பாகை செல்சியஸ் கூடுதல் வெப்பத்தைத் தருகின்றன. மேலும், இவை நீண்ட நாட்களுக்கு ஒரே இடத்தில் நிலைத்து நிற்கும் தன்மையையும் கொண்டுள்ளதனால் எதிர்காலத்தில் உயிரிழப்புகள் அதிகரிப்பதோடு விவசாயம், கைத்தொழில், வர்த்தகம், மீன்படி, போக்குவரத்து, சுகாதாரம் போன்ற துறைகள் மிக மோசகப் பாதிப்படைந்து அந்நாடுகளில் அரசியல், பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கான வாய்ப்புக்களும் உள்ளன.

சுருக்கமாகக் கூறின், ஒமேகா பிளாக் என்பது வளிமண்டலத்தில் காற்று நகராமல் ஒமேகா வடிவத்தில் சிறைபட்டு நிற்கும் ஒரு நிலை. காலநிலை (Climate Change), புவி வெப்பமயமாதல் (Global Warming) காரணமாக, தற்காலத்தில் இத்தகைய ‘Omega Block’ நிகழ்வுகள் ஐரோப்பாவில் அடிக்கடி, அதிக வீரியத்துடன் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
எதிர்காலத்தில் ஐரொப்பிய நாடுகள் ‘Omega Block’ வெப்பநிலை மாற்றத்துக்குத் தாக்குப்பிடிக்கக் கூடியவகையில் கட்டுமானம், கட்டமைப்பு முறைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவது பொருத்தமாக இருக்கும். கட்டிடங்கள் அமைக்கும்போது வெப்பம், குளிருட்டி வசதிகள் கொண்ட வீடுகளை அமைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். மின்சாரம், பொக்குவரத்து, விவசாயம், கைத்தொழில், வர்த்தகம் போன்ற துறைகளிலும் விசேட கவனம் செலுத்த வேண்டும்.
ஐக்கிய நாடுகள் சபையின் உலக காலநிலை மையம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் 2026 இல் இலங்கையில் எல் நினோ பாதிப்பினால் மூன்று கட்டங்களில் வறடசி, சூறாவளி, பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக எச்சரித்திருக்கின்றது. அதன்படி யூலை, ஆகஸ்ட், செப்டெம்பர் மாதங்களில் வறட்சியும், நவம்பர், திசெம்பர் மாதங்களில் சூறாவளியும், சனவரி, பெப்ரவரியில் வெள்ளப் பெருக்கும் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக நம்பப்பட்டு அதற்கான முன்னேற்பாடுகளை அரசு செய்து வருகிறது. ‘வருமுன் காப்போம்’ என்பதற்கிணங்க ஒவ்வார் தனிநபரும் அனர்த்தங்களுக்கு முகம் கொடுப்பதற்கான தயார் நிலையில் இருப்பது உயிர்களையும் சொத்துக்கள், உடமைகளையும் பாதுகாக்க ஏதுவாக அமையும்.
![]()