உலகம்

லெபனானில் தீவிர மோதல் ; அமெரிக்கா – ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து

தெற்கு லெபனானில் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு இடையிலான மோதல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, ஸ்விட்சர்லாந்தில் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த அமெரிக்கா–ஈரான் இடையேயான அடுத்தகட்ட அமைதிப் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அமெரிக்கா, ஈரான் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தில் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினர் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்கா–ஈரான் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான 14 அம்சங்களைக் கொண்ட ஆரம்பகட்ட அமைதி ஒப்பந்தம் அண்மையில் இருதரப்பினராலும் மின்னணு முறையில் கையொப்பமிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக லெபனான் உள்ளிட்ட அனைத்து முனைகளிலும் போர் நிறுத்தம் வலியுறுத்தப்பட்டிருந்தது.

எனினும், தெற்கு மற்றும் கிழக்கு லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்த வான்வழித் தாக்குதல்களில் 21 பேர் உயிரிழந்ததாகவும், நபதியா நகருக்கு அருகே இஸ்ரேல் படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் லெப்டினன்ட் கர்னல் ஒருவரும் உட்பட நான்கு வீரர்கள் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து, ஹிஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேல் தொடர்ச்சியான தாக்குதல்களை மேற்கொண்டது. அதேவேளை, நபதியா நகரை கண்காணிக்கும் முக்கிய இடமான அலி அல்-தாஹெர் மலையை இஸ்ரேல் கைப்பற்ற முயன்றதற்குப் பதிலடியாகவே தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹிஸ்புல்லா தரப்பு விளக்கமளித்துள்ளது.

நிலவும் பதற்றமான சூழ்நிலையை அடுத்து, லெபனானில் அமைதி திரும்பும் வரை ஸ்விட்சர்லாந்தில் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்கப்போவதில்லை என ஈரான் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸும் தனது பயணத்தை ஒத்திவைத்துள்ளார்.

இதனிடையே, தெற்கு லெபனானின் சில பகுதிகள் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் அமைதி முயற்சிகளுக்கு தடையாக உள்ளதாகக் கூறப்படுவதுடன், இந்த விவகாரம் அமெரிக்கா–இஸ்ரேல் உறவிலும் கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், அமெரிக்கா மற்றும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தொடர்பாக இஸ்ரேல் தலைவர்கள் முன்வைத்த விமர்சனங்களை கண்டித்ததுடன், இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ள முக்கிய கூட்டாளியான அமெரிக்காவுடன் நல்லுறவை பேணுவது அவசியம் என வலியுறுத்தினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button