பொலிஸார் மன்னிப்புக் கோராவிடின் 100 கோடி ரூபா நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர்வோம்; கம்மன்பில மிரட்டல்

கைது செய்யப்பட்டுள தடுத்து வைக்கப்பட்டுள்ள சலே விடயத்தில் நாங்கள் கூறியது பொய்யென கூறி, எங்களைப் பற்றி பொய் பிரசாரங்களை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். இதனை ஏற்றுக்கொண்டு இதற்காக அவர்கள் மன்னிப்பு கோர வேண்டும். இல்லையேல் ஒரு பில்லியன்(100 கோடி)ரூபா நஷ்ட ஈடு கோரி வழக்குத் தொடர நடவடிக்கை எடுப்போம் என்று பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே கம்மன்பில இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
2026 ஜூன் மாதம் 6 அன்று நாங்கள் நாங்கள் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், சுரேஷ் சலேவுக்கு பொலிஸாரால் செய்யப்படுகின்ற சித்திரவதைகள் குறித்து நாட்டிற்கு வெளிப்படுத்தினோம். நாங்கள் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி சில மணிநேரங்களுக்குள், பொலிஸ் ஊடகப் பிரிவு ஒரு அறிக்கையை வெளியிட்டு நான் கூறுவது பொய் என்று கூறியது. ஆனால், நாங்கள் கூறியது உண்மை என்றும், பொலிஸார் கூறியது பொய் என்றும் உறுதியாகிவிட்டது.
செய்தியாளர் சந்திப்பில் 13 பேர் முன்னிலையில் சலேவை நிர்வாணப்படுத்தி பரிசோதனை செய்யப்பட்டது எனவும், அவரை காற்றோட்டமில்லாத இருண்ட சிறிய அறையில் வைத்துள்ளார்கள் என்றும், அவருக்கு முறையான உணவு வழங்கப்படுவதில்லை என்றும், அவரை நிர்வாணப்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர் என்றும் கூறியுள்ளோம். இதில் சில மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னிலையில் உறுதியாகியுள்ளது. அத்துடன் மருத்துவ அறிக்கையிலும் சில விடயங்கள் உறுதியாகியுள்ளன. நான் கூறுவது பொய் என்று பொலிஸார் கூறியபோது நான் அது தொடர்பில் சவால் விடுத்தேன். ஆனால் இதுவரை அந்த சவாலை ஏற்றுக்கொள்வதற்கு பொலிஸார் முன்வரவில்லை.
இப்போது பொலிஸார் கூறியது பொய், நாங்கள் கூறியது உண்மை என்ற விடயம் மருத்துவ அறிக்கைகளின் மூலமும், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைகளின் மூலமும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால், உடனடியாக பொலிஸ் ஊடகப் பிரிவு ஒரு அறிக்கையை வெளியிட்டு, எங்களைப் பற்றி பொய் பிரசாரங்களைச் செய்து அவதூறு ஏற்படுத்தியமைக்காக மன்னிப்புக் கேட்க வேண்டும்.
இதன்படி ஒரு வாரத்திற்குள் பொலிஸார் மன்னிப்புக் கேட்பதற்குத் தவறினால், ஒரு பில்லியன் ரூபாய் நஷ்ட ஈடு கோரி வழக்குத் தொடர நாங்கள் நடவடிக்கை எடுப்போம். அதேபோல், நாங்கள் கூறுவது பொய் என்று செய்தியாக்கிக் கொண்ட ஊடக நிறுவனங்களிடமும், சமூக ஊடகவியலாளர்களிடமும் நாங்கள் ஒரு வேண்டுகோளை விடுக்கிறோம்; இன்று நாங்கள் இந்த செய்தியாளர் மாநாட்டில் கூறுகின்ற விடயத்திற்கு, அன்று பொலிஸார பொய் பிரசாரத்திற்கு வழங்கிய பிரசாரத்திற்கு நிகரான முறையில் ஒரு பிரசாரத்தை வழங்காவிட்டால், உங்களுக்கும் எதிராக வழக்குத் தொடர நேரிடும் என்பதை மிகவும் வருத்தத்துடன் கூறிக்கொள்கின்றோம் என்றார்.
![]()