இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து FBI தகவல்கள் கோரப்பட்டுள்ளதா?; ஐ.தே.க கேள்வி

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக அமெரிக்காவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அனைத்து விபரங்களையும் பெற்றுக்கொள்ளுமாறு ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அவ்விபரங்கள் தற்போது அமெரிக்காவின் ஃபெடரல் புலனாய்வுப் பணியகம் மற்றும் அமெரிக்க நீதித் திணைக்களம் ஆகியவற்றின் வசம் உள்ளதாக அந்த கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள பின்னணியில், அரசாங்கம் அது தொடர்பான விபரங்களை அமெரிக்க அதிகாரிகளிடம் உத்தியோகபூர்வமாகக் கோரியுள்ளதா? என ஐக்கிய தேசிய கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ஐக்கிய தேசிய கட்சி, அவ்வாறானதொரு கோரிக்கையை அரசாங்கம் விடுத்திருந்தால், அதற்கு அமெரிக்காவிடமிருந்து கிடைத்த பதிலை வெளிப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.

அமெரிக்க விசாரணையின் மூலம் பெறப்பட்ட அனைத்து புலனாய்வுத் தகவல்களும் இலங்கை நீதித்துறை அதிகாரிகளுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

2019 ஏப்ரல் 21 அன்று நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து முழுமையான அமெரிக்க விசாரணை மற்றும் அறிக்கையொன்றை, அன்றைய பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க கோரியிருந்தார்.

இலங்கை அதிகாரிகளின் முழுமையான ஒத்துழைப்பை உறுதிசெய்து அவர் இந்த கோரிக்கையை விடுத்திருந்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர், ரணில் விக்ரமசிங்க மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கு இடையே இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போதும் இவ்வாறானதொரு கோரிக்கை விடுக்கப்பட்டதாக ஐக்கிய தேசிய கட்சி குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, எஃப்.பி.ஐ அமைப்பு, குற்றப் புலனாய்வுத் திணைக்களம், இராணுவப் புலனாய்வுப் பிரிவு மற்றும் தேசிய புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட இலங்கை நிறுவனங்களுடன் இணைந்து பரந்தளவிலான விசாரணைகளை மேற்கொண்டு, பின்னர் இலங்கை அரசாங்கத்திடம் அறிக்கையொன்றைச் சமர்ப்பித்திருந்தது.

2020 நவம்பர் 12 அன்று FBI இன் விசேட முகவர் மெரிலி ஆர். கொட்வினினால் (Merrili R. Godwin) கலிபோர்னியா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 71 பக்கங்களைக் கொண்ட சத்தியக்கடதாசி மற்றும் 2020 டிசம்பர் 11 அன்று லொஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

அவ்வழக்கில் பெயரிடப்பட்டுள்ள சந்தேகநபர்கள் சிலர் ஏற்கனவே இலங்கையின் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, விபரங்கள் அமெரிக்க விசாரணைப் பிரிவுகள் மற்றும் நீதித் திணைக்களத்தின் வசம் இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சி சுட்டிக்காட்டுகிறது.

தற்போதைய அரசாங்கம் அதற்கான அனுமதியைக் கோரியுள்ளதா? என்பதைத் தெளிவுபடுத்துமாறும், அவ்வாறான கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தால் அதன் முடிவை வெளிப்படுத்துமாறும் அக்கட்சி அரசாங்கத்திடம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button