கட்டுரைகள்

முற்பகல் செய்யின் பிறபகல் விளையும்…. சோலையூர் குருபரன்

இவ்வுலகில் சிலவற்றைக் காணவும் முடியாது, அதனை விபரிக்கவும் முடியாது. இவ்வுலகம் பல வினோதங்களையும் மர்மங்களும், மாயங்களும் கொண்டவை. கண்ணால் பார்க்க முடியாத, விளங்கிக் கொள்ள முடியாத அதேவேளை விளக்க முடியாத, கற்பனைகளுக்கு அப்பாற்பட்ட பல மர்மங்களும் உள்ளன. அதனைக் ‘கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்’ எனக் கூறினர். அறிவியல், விஞ்ஞான வளர்ச்சி உச்சத்தைத் தொட்டிருக்கும் இவ்வேளையில் இன்றுவரை ஆய்வுக்கு உட்படுத்தபடாத, ஆய்வு செய்ய முடியாத பல மர்மங்கள் இன்றும் உலகில் உள்ளன. அவற்றுள் பலவற்றை ஆய்வு செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

உலகில் இத்தனை மர்மங்கள் இருக்கும்போது நமது வாழ்க்கையிலும் நடத்தையிலும் எத்தனையோ மர்மங்களும் அதிசயங்களும் காணப்படுகின்றன.. நமது உடம்புகூட பல மர்மங்களை உள்ளடக்கிய ஒரு பொக்கிசமாகக் காணப்படுகிறது. எத்தனையோ அதிசயங்கள் இந்த உடலுக்குள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. நமது கண்களில் சுரக்கும் கண்ணீர், காதில் சுரக்கும் திரவம் ஆகியன உலகிலுள்ள ஒவ்வொரு நபருக்கும் வேறுபட்டவை. தனித்துவமானவை. ஒருவருக்குரிய இவை இரண்டின் பண்புகளும் உலகிலுள்ள வேறு எந்த நபருக்கும் இருக்கமுடியாது. இது மிகப் பெரிய அதிசயங்களில் ஒன்றாகக் கொள்ளப்படுகிறது.

நமது உடம்பில் உயிர் எங்குள்ளது. எவ்வகைப்பட்டது. அதன் தன்மை என்ன என்பதெல்லாம் மர்மங்களாகவே உள்ளன. ஞானிகளும், ஆன்மீகவாதிகளும் அங்கிருக்கிறது. இங்கிருக்கிறது என்ற ஊக அடிப்படையில் கூறி இருக்கின்றார்கவே தவிர அவை ஆய்வு ரீதியாக இன்றுவரை நிரூபிக்கப்படவில்லை. கருவறையில் கரு உருவாகியது முதல் ஒவ்வொரு உறுப்புக்களும் எவ்வாறு உருவாகின்றன என்பதும் வினோதமாகவே உள்ளது. இதற்கு விஞ்ஞானிகள் 23 சோடி நிறமூர்த்தங்களைத் துணைக்குக் கொண்டு வருகின்றனர். இவ்வாறு பல அதிசயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. வேதாந்திகளும் சித்தாந்திகளும் பிறப்பினை கர்ம வினையின் அடிப்படையில் நிகழ்வதாகக் கூறுகின்றனர். முன்னைய கர்ம வினையின் காரணமாக (எழுவினை) அவ்வினை நிறைவடையும்வரை உயிர்கள் பிறப்பெடுப்பதாகக் கன்மம் மறுபிறப்புக் கோட்பாடு விரிவாக விளக்குகின்றது.

உலகின் ஏனைய உயிரினங்களையும்விட மனிதனுக்கு ஆறாவது அறிவாகிய பகுத்தறவும் உள்ளதனால் தவறுதலாகக் குற்றம் செய்வதையும்விடப் பெரும்பாலும் தெரிந்தே செய்கிறான். பலர் தினமும் பல ஐம்பெரும் பாவங்களைச் செய்து கொண்டிருக்கின்றனர். அப்பாவ வினைகளே மறுபிறப்புக்குக் காரணமாக இருப்பதாகக் கன்மம் மறுபிறப்புக் கோட்பாடு வலியுறுத்துகின்றது. ஒவ்வொரு வினைக்கும் மறுவினை உண்டு எனவும். நாம் செய்த வினைகள் அம்பு போல் நம்மீது பாயும் எனவும் கூறுகின்றது. இதளை இயற்பியல் விஞ்ஞானி சேர்.ஐசாக் நியூட்டன் தனது மூன்றாவது விதியில் ‘எந்தவொரு தாக்கத்துக்கும் நேரானதும் மறையானதுமான பருமனில் சமநிலையான மறுதாக்கம் உண்டு’ எனக் கூறுகின்றார். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது போல் நாம் செய்த வினைகள் ஒவ்வொன்றுக்கும் நேரானதும் எதிரானதுமான மறுதாக்கம் உன்டு என்பதை மறந்து விடலாகாது. உயிரினங்களின் உடலை இயக்குவது உயிர், அந்த உயிருக்குக் காரணமானவன் இறைவன் என்பது உண்மையானால் நாம் உடலுக்குச் செய்வதாகக் கருதிக் டிகாண்டு செய்யும் தீவினைகள் அந்த உடலை உயிர் மூலமாக இயக்கும் இறைவனையும் சென்றடையுமல்லவா. ஆகவே, உயிர்களுக்கு நாம் செய்யும் எந்தப் பாவச் செயலும் இறைவனையும் சென்றடையும். இந்த உண்மையை உணர்ந்து கொண்டால் நாம் எவருக்கும் பாவம் செய்ய மாட்டோம்.
‘மரத்தை மறைத்தது மாமத யானை, மரத்துள் மறைந்தது மாமத யானை’ என்பது ஒரு தத்துவார்த்த சிந்தனை.

நாம் ஒருவருக்கு எண்ணம், சொல், செயல் என்பவற்றால் செய்யும் நன்மை, தீமைகள் இரண்டையும் அவரின் பெயரைத் தாங்கி நிற்கும் உடலுக்கச் செய்வதாகவே கருதுகின்றோம். இங்கு உயிராகிய இறைவன் மறைக்கப்படுகின்றார். இறைவன் அந்த உடலுக்குள் இருக்கிறான் என்பதை மறைத்தது அவரின் பெயரும் உடலுமாகும். மரத்தினால் செய்யப்பட்ட யானை ஒன்றைப் பார்க்கும் போது யானைதான நமது கண்களுக்குப் புலப்பட்டதே தவிர மரம் தென்பட மாட்டாது. அதேபோல் அதனை மரம் என்று பார்க்கும்போது நமது கண்களுக்கு யானை தென்படுவதில்லை (மரத்துள் மறைந்தது மாமத யானை) என்ற தத்துவம் உணர்த்தப்படுகிறது. ஒன்றின் உண்மையை உணர்வது அவரவர் பார்வையையும் சுய அறிவையும் பொறுத்தது.

‘வினை விதை்தவன் வினை அறுப்பான். தினை விதைத்தவன் தினை அறுப்பான்’ எனபது நாம் நல்லது செய்தால் நல்லது கிடைக்கும், தீயது செய்தால் தீயதே கிடைக்கும். வாழ்க்க்கையில் நாம் எதை விதைக்கிறோமோ அதன் விளைவுகளே நம்மை வந்து சேரும். சில மாதங்களுக்கு முன்னர் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் என்னுடன் இரயிலில் பிரயாணம் செய்தபோது அவர் கூறிய உண்மைச் சம்பவம் “எனது ஊர் பொலனறுவை. நான் 1981 இல் குருநாகல் கச்சேரியில் எழுதுவிளைஞராகப் பணியாற்றினேன். ஒரு மாதத்துக்கு மாவட்ட சபைத் தெர்தல் பணியாற்றுவதற்காக என்னை யாழ்ப்பாணம் கச்சேரிக்கு அனுப்பினார்கள். இரயிலில் ஏறிய பின்னர் உள்ளே பல காடையர்கள் இருபபதைத் தெரிந்து கொண்டேன். அங்கு கடமையாற்றுவதற்காகப் பத்துக்கு மேற்பட்ட அரச உத்தியோகத்தரும் ஏறி இருந்தார்கள். இளைஞர்கள் செய்த அட்டகாசம் தாங்க முடியவில்லை. அவர்கள் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் மூலமாக அனுப்பி வைக்கப்படடிருக்கிறார்கள் என்பதை அவர்களின் உரையாடலில் இருந்து புரிந்து கொண்டேன். ஏதோ என்னவோ யாழ்ப்பாணத்தில் நடக்கப் போகிறது என்பதை அவர்கள் பேச்சில் இருந்து உணர்ந்து கொள்ள முடிந்தது”.

“மறுநாள் அதிகாலை யாழ்பாணத்தில் இறங்கியதும் பெரிய மண்டபம் ஒன்றில் தங்க வைத்தார்கள். சிறிது நேரத்தில் அப்போதைய அமைச்சர்களான ரனில் விக்கிரமசிங்கா, காமினி திஸ்ஸநாயக்கா, சிறில் மத்தியூ, பெஸ்டஸ் பெரேரா ஆகியோர் வந்து ரவுடிகளை அழைத்து ஏதோ பேசினார்கள். அவர்களை வாகனங்களில் ஏற்றி அனுப்பினார்கள். எங்களுக்குத் தேர்தல் கடமைக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி, வாகணம் வந்தவுடன் கச்சேரிக்குச் செல்லுமாறு கூறிவிட்டுச் சென்றுவிட்டனர். அன்றிரவு யாழ்ப்பாண நூலகம் காடையர்களால் எரிக்கப்பட்டதை ஆறிந்தோம். பயத்தின் காரணமாக நானும் இன்னொருவரும் யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு வந்துவிட்டோம். நாட்டைப் பாதுகாக்க வேண்டிய அமைச்சர்கனே இதனைச் செய்தது வேதனையாக இருந்தது. யாழ்ப்பாண நூலகம் தெற்காசியாவிலே சிறந்த நூலகம் என்றும்.

2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்று ஆவணங்கள் எரிந்ததாகவும் கேள்விப்பட்டு வேதனை அடைந்தேன். அன்று ரனில் செய்த வினைக்குப் பதலீடாகவே அரசுக்கு எதிரான போராட்டக்காரர்களால் 09-07-2022 ஆந் திகதி அவரின் வீடு எரிக்கப்பட்டபோது அவரின் நூலகத்தில் இருந்த 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெறுமதி வாய்ந்த நூல்கள், அவணங்கள், ஓவியங்கள் எரிக்கப்பட்டதாகக்” கூறி சிங்கள மொழியில் ‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ என்ற முது மொழிக்கு நிகரான வாக்கியமொன்றை ஆதாரமாக எடுத்துக் கூறி வேதனைப்பட்டுக் கொணடார்.

நாம் எதை வெறுக்கிறோமோ அது வேகமாக நம்மைவிட்டுச் சென்றுவிடும். மோட்டார் சைக்கிள் ஒன்று நம்மிடம் இருக்கிறது. அது பழையதாகிவிட்டது. இப்போது பிள்ளைகள் அதனை வெறுக்கின்றனர். புதியதொன்று கொள்வனவு செய்யுமாறு கூறுகின்றனர். இப்போது தந்தைக்கும் மனமாற்றம் ஏற்படுகிறது. அதனால் எல்லோருமாக அந்த வாகனத்தை வெறுக்கின்றனர். எல்லோர் மத்தியிலும் வேண்டாப் பொருளாக மாறிவிட்டது. அதனால் அந்த சைக்கிள் அடிக்கடி தொல்லை பொடுக்க ஆரம்பித்தது. இதன்மூலம் ‘நீ எதை நினைக்கிறாயோ அது போலவே ஆகுகிறாய்’ என்பதும், எண்ணமே வாழ்வு என்புதும் உணர்த்தப்படுகின்றன.

மனைவி தனது கணவனை வேண்டா வெறுப்போடு நடத்துவார். அவரைக் கணக்கில் எடுப்பதுமில்லை. ‘அழிந்து போ’ ‘எங்கேயாவது போய் செத்துப் போ’ என்றெல்லாம். தினமும் திட்டுவார். நோயாளியாக இல்லாதிருந்த அவர் திடீரென்று நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார். இப்போது அவர் மனைவி கணவனின் இழப்பினையும், அவர் வீட்டில் ஆற்றிய பணியினையும் நினைத்து வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறார். ஒருவர் வாழும்போது அவரின் பெருமையை விளங்கிக் கொள்வதில்லை. காலம் கடங்தபின் ‘சுடலை ஞானம்’ வந்து என்ன பிரயோசனம். இவ்வாறுதான் ஒருவர் தனது மனைவியை எந்தநாளும் திட்டிக் கொண்டிருப்பார். சில வேளைகளில் மிக மோசமாகவும் திட்டுவார். இப்போது மனைவி நோய்வாய்ப்பட்டுப் படுத்த படுக்கையாகிவிட்டார். கணவன் தான் செய்த தவறை எண்ணி மனைவிக்குப் பணிவைிடை செய்து கொண்டிருக்கிறார்.

இன்னுமொரு நபர் திருமணம் செய்வதாகக் காதலித்து அவர்கள் இருவரும் பிறந்த திகதி பொருந்தாது எனக் கூறி வேறு திருமணம் செய்து இரு பிள்ளைகளுக்கும் தந்தையாகிவிட்டார். அவரின் இரு பிள்ளைகளும் அவர் மோசமான திகதி எனக் காரணம் காட்டி வெறுத்த இரு திகதிகளிலும் பிள்ளைகள் பிறத்திருக்கின்றனர். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது அவருக்கு நடந்திருக்கின்றன.
நாம் செய்த தீவினைக்குரிய பலன் ஏதோ ஒரு வகையில் எமக்குக் கிடைத்திருக்கும். அதனை நாம் உணர்ந்து கொள்வதில்லை. ‘கண் கெட்ட பின்னர்தான் சூரிய நமஸ்காரம்’ என்பது போல் நமக்கென்று வந்த போதுதான் அவற்றை நினைத்துப் பார்க்கிறோம். இந்த உண்மையைப் புராண, இதிகாசங்கள், காவியங்கள், காப்பியங்கள், நீதி நூல்கள் ஆகியன உணர்த்தி இருக்கின்றன. முன்பு இராவணன் திருமகள்மீது காமம் கொண்டு திருமகளை அடைய முயற்சி செய்த வினையே சீதை இராவணன் மகளாகப் பிறப்பதற்கும், இலங்கை உட்பட அவனின் வம்சம் அழிவதற்கும் காரணமாக அமைந்ததென கம்பர் இராமாயணம் கூறுகிறது. துரோணர் இறப்பதற்கு சிகண்டி காரணமாக இருந்ததையும, திருதராட்டினனின் புத்திரர்கள் (கௌரவர்கள்) நூறு பேர் இறப்பதற்கும், சகுனி கௌரவர்களைப் பழி வங்கியதற்கும் பாண்டவர்கள் ஐவரின் புதல்வர்கள் கொல்லப்பட்டமைக்கும் ஊழ்வினை காரணமாக அமைந்ததென மகாபாரதக் கதை கூறுகின்றது, இவ்வாறு கதைகள், உப கதைகள், பஞ்ச தந்திரக் கதைகள் என்பவற்றின் மூலமாக முற்பிறப்பு, மறுபிறப்புப் பற்றித் தெளிவுபடுத்தி இருக்கின்றன.

இந்த உண்மைகளைத் தெரிந்து அதன்படி நடப்பதற்கு நமது பிடிவாதம், வரட்டுத்தனம், கோபம், அகங்காரம். கர்வம் ஆகியன கொண்ட ஆணவ மலம் இடம் கொடுப்பதில்லை. இதனை மாயை எனப்படும் அறியாமை உண்மையை மறைத்துக் கர்ம வினைகளைச் செய்து கொண்டிருப்பதாக வேதாந்தம், சைவ சித்தாந்தம், திருமுறைகள் ஆகியன விரிவாக விபரிக்கின்றன.
ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரம் ‘அறம் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதும்’ ‘உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏற்றுவதும்’ ‘ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்’ என்ற மூன்று அறவழிச் செய்திகளையும் அடிப்படையாகக் கொண்டே கதை நகர்த்திச் செல்வப்பட்ருக்கிறது. கோவன் கொலை, பாண்டிய மன்னன் இறந்தமை, மதுரை மாநகரம் தீயிட்டு அழிக்கப்பட்டமை ஆகிய சம்பவங்கள் யாவும் மேலுள்ள மூன்று கருத்தியலையும் அடிப்படையாகக் கொண்டவை. பாண்டிய மன்னன், கோவலன், கண்ணகி, பொற்கொல்லன் ஆகியோரின் வாழ்க்கை முற்பிறவியில் நடந்த சம்பவங்களோடு தொடர்புபட்டவை. அவர்கள் முற்பிறவியில் செய்த வினைகளின் காரணமாக இப்பிறவியில் தண்டனை அனுபவித்தார்கள் என்ற உன்மை மதுராபதித் தெய்வத்தின் ஊடாக வெளிக் கொணரப்பட்டது. சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகள் இச்சம்பவங்களைத் தொடர்புபடுத்திக் கதையைச் சிறப்பாக நகர்த்திச் சென்றிருக்கிறார்.

இலங்கையில் நடந்த முப்பது ஆண்டுகால யுத்தத்தின் போதும், இறுதி யுத்தத்தின் போதும் எதிலும் சம்பந்தப்படாத பல்லாயிரக் கணக்கான அப்பாவிப் பொது மக்கள் தடை செய்யப்பட்ட குண்டுத் தாக்குதலால் கொல்லப்பட்டனர். சிறு குழந்தை முதல் முதியோர்வரை பொஸ்பரஸ், கொத்தணிக் குண்டுத் தாக்குதலுக்கு உட்பட்டு சாம்பலாகிக் கருகிக் கிடந்தனர். இதனை உளங்கு வானர்தியில் தாளப்பறந்து பார்வையிட்ட ஐக்கிய நாடுகள் சபையின் பிரதம செயலாளர் வான் கீ மூன் கூறுகையில் “இப்படிப்பட்ட கோர யுத்த அழிவுகளை எனது வாழ்வில் கண்டதுமில்லை, கேட்டதுமில்லை என கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் மிக வருத்தததுடன் கூறி இருந்தார்.

இந்த அகோர யுத்தத்தில் இறந்த ஆத்மாக்கள் என்றைக்கோ ஒரு நாள் சம்பந்தப்பட்டவர்களைப் பழிவாங்கியே தீரும். இப்போது ராஜபக்ச குடும்பத்தினரும் இன்னும் பலரும் பழிவாங்கப் பட்டிருக்கிறார்கள் எனப் பலரும் கூறுகின்றனர். இதற்குப் பெரும்பான்மை மக்களில் பலர் சம்பந்தப்பட்டிருந்தமையால் ஒட்டு மொத்த நாடும் அனுபவித்துக் கொண்டிருக்கிறது எனவும் மக்கள் கூறுகின்றனர்.
இவ்வாறு காரண, காரியங்களின் அடிப்படையில் ஒவ்வொரு செயற்பாடும் உலகில் நடந்து கொண்டிருக்கின்றன. எனக்குத் தெரிந்த ஒருவர் நான் அறிந்தவரை யாருக்கும் தீமை செய்ததாக ளே்விப்படவில்லை. எவருடனும் உரையாடும்போது நல்லது, நல்லது எனவே கூறுவார். யாருடனும் எதிர்மறையாகப் பேசமாடடார். இந்த நல்வினையின் பலன் அவருடைய பிள்ளைகள் மூன்று பேரும் மிக உயர் பதவிகளில் இருக்கின்றனர்.

‘மக்கள் சேவை மகேசன் சேவை’ ‘பிறர் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்’ என்பதற்கிணங்க ஒருவர் அல்லும் பகலும் சமூக சேவையில் ஈடுபட்டு பலரின் வாழ்க்கைத்தர உயர்வுக்கும், கல்வி உயர்வுக்கும் காரணமாக இருந்தார். அதனால் அவருக்குப் பலரின் பாராட்டும் வாழ்த்தும், ஆசியும் கிடைத்ததன. இந்த ஆசியும், வாழ்த்தும், பாராட்டும் அவரது பிள்ளைகளின் வாழ்வை உயர்தியது. இப்போது அவருடைய நான்கு பிள்ளைகளும் கௌரவத்தோடு மகிழ்ச்சியாக வாழ்கின்றார்கள். இதைத்தான் வள்ளுவரும் ‘காலத்தினால் செய்த உதவி ஞாலத்தின் மானப் பெரிது’ என்றார் போலும். இத்தகைய நற்செயல்களில் ஈடுபட்வர்கள் வாழ்க்கையில் சில துன்பங்களை அனுபவித்தாலும் பிற்பட்ட காலத்தில் எல்லோரும் மெச்சும்படியாக சந்தோசம், மகிழ்ச்சி, நிம்மதி, மனநிறைவோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

மாணவர்கள் பல தியாகங்களைச் செய்து படிக்காமல் பரீட்சையில் சித்தியடைய முடியாது. தொழில் முயற்சியாளன் தனது முயற்சியில் முழு ஈடுபாடு காட்டாமல் இலாபத்தை உழைக்க முடியாது. விவசாயி தனது பயிரை நன்கு பராமரிக்காமல் விழைச்சலைக் கூட்ட முடியாது. வியாபாரி தனது முயற்சியில் அக்கறையின்றி இருந்தால் வியாபாரத்தைக் கொண்டு நடத்த முடியாது. இவ்வாறுதான் நாம் செய்யும் ஒவ்வொரு செயவலுக்குமுரிய பயன் நம்மை வந்து சேருகின்றன. உழைப்புக்குரிய பலன் என்றோ ஒரநாள் நம்மை வந்தடையும். இதைத்தான் ‘முற்பகல் செய்யின் பிறபகல் விழையும்’ என்றார்கள்.

சிந்தனைகள் தொடரும்……

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button