கவிதைகள்

பழிக்குள் நான்வீழாமல் பார்த்திடுவாய் கணநாதா!.. கவிதை… ஜெயராம்சர்மா

முப்பழம் விரும்பும் மூஷிக வாகனா
தப்பிதம் வாராத் தடுத்திடு விநாயகா
கப்பிய கரிமுகா கந்தனின் சோதரா
கைத்தலம் கொண்டு கழலடி பணிகிறேன்

அப்பமும் அவலும் சர்க்கரை மோதகம்
ஆவலாய் ஏற்றிடும் அருளுடை விநாயகா
எப்பவும் தப்பிதம் நிகழ்ந்திடா வண்ணம்
எந்தனைக் காப்பாய் கந்தனின் அண்ணா

மனதிலுறை எண்ணம் நிறைவேற நாளும்
உனதருளைத் தாராய் உமையினது மைந்தா
வருவினைகள் ஓட மனதில் மகிழ்வாட
கரிமுகவா நீயும் கருணைபுரி அப்பா

தொடங்கிடும் அனைத்துமே துலங்கிட வைப்பாய்
தோடுடை செவியனைச் சுற்றியே வந்தாய்
நலந்திகழ் தத்துவம் நன்றாய் உணர்த்தினாய்
விலங்குடை மனத்தினை வீழ்த்திடு விநாயகா

விழிக்கும் துணைநீயே மொழிக்கும் துணைநீயே
பழிக்குள் நான்வீழாமல் பார்த்திடுவாய் கணநாதா
அழப்பண்ணிப் பாராமல் அரவணைப்பாய் கணநாதா
அடிதொழுது பணிகின்றேன் அல்லெலாம் போக்கிடப்பா !

மகாதேவ ஐயர் ஜெயராம்சர்மா
மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button