இலங்கை

பஸிலைக் கைது செய்யுமாறு நீதிமன்றம் மீண்டும் உத்தரவு

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கின் சந்தேக நபராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்து நீதிமன்றத்தினால் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று புதன்கிழமை கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த மே29ஆம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பஸில் ராஜபக்‌ஷவை கைது செய்யுமாறு நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், மீண்டும் நேற்றைய தினமும் அவரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2014ஆம் ஆண்டு சுற்றுலா அபிவிருத்தி பணியகத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்த 7.8 மில்லியன் ரூபா பணத்தை சுற்றுலா அபிவிருத்தி பணிகளுக்கு பயன்படுத்தாது, சுற்றுலாப் பிரச்சார நடவடிக்கை எனக்கூறி 12,000 டிசேர்ட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதுடன், அந்த டி-ஷர்ட்டின் ஒரு பக்கத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் படமும், மறுபக்கத்தில் அரசியல் கட்சியொன்றின் பெயரும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. அத்தடன் குறித்த டிசேர்ட்டுகள் மொனராகலை மாவட்டத்தில் நடைபெற்ற அரசியல் நிகழ்ச்சி ஒன்றிற்காக விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவு நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்திருந்தது.

இதன்படி இந்தச் சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷ, சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் முன்னாள் தலைவர் பாஷ்வர குணரத்ன மற்றும் அதன் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ரூமி ஜவ்பர் உள்ளிட்டோர் சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

இதன்படி குறித்த சந்தேகநபர்கள் மீது பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இதன்போது, சம்பவத்துடன் தொடர்புடைய மூன்றாவது சந்தேகநபர், வழக்கு குற்றவியல் சட்டக் கோவையின் 127ஆவது சரத்தின் கீழ் இரகசிய வாக்குமூலம் வழங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக சந்கேதநபர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ நீதிமன்றத்துக்கு அறிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சுற்றுலா அபிவிருத்தி பணியகத்தின் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளரான ரூமி ஜௌபர் என்பவரை தலா 100 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவித்ததுடன், அவருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதித்தும் நீதவான் உத்தரவிட்டார்.

அத்துடன் இந்த வழக்கின் சந்தேக நபர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவிற்கு நீதவானால் உத்தரவிடப்பட்டது.

சம்பவம் தொடர்பான வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் 14ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் நீதவானால் அறிவிக்கப்பட்டது.

இதேவேளை, சம்பவத்தின் இரண்டாவது சந்தேகநபரான சுற்றுலா அபிவிருத்தி பணியகத்தின் முன்னாள் தலைவரான பாஷ்வர குணவர்தனவை தலா 100 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரரப் பிணைகளில் விடுவிக்குமாறு நீதிமன்றம் கடந்த 10ஆம் திகதி உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button