திலித், விமல், கம்மன்பில உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாய்கிறது!; உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை குறித்து வெளியிட்ட கருத்துக்களால் இந்த நிலை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் குறித்து அரசியல்வாதிகள் மற்றும் அரசியலுடன் தொடர்புடையவர்கள் சிலர் ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்துக்கள், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் நேற்று திங்கட்கிழமை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் இதனை கூறியுள்ளனர்.
இதன்படி பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர, முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோரின் கருத்துக்களும் மற்றும் சுகீஸ்வர பண்டார, மஹிந்த பத்திரண மற்றும் அசங்க நவரத்ன ஆகியோரின் கருத்துக்களும் இவ்வாறு நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இந்தச் சம்பவம் தொடர்பில் ஏற்கனவே விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் கோட்டை நீதவானிடம் தெரிவித்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்னர் சுரேஷ் சலே தொடர்பில் சட்ட வைத்திய குழுவொன்று அமைக்கப்பட்டது. இந்த குழு தொடர்பில் தவறான வகையில் பல்வேறு கருத்துக்கள் ஊடகங்களின் ஊடாக பரப்பப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பிலேயே இவர்களுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்திற்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணை அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஜுலை முதலாம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணை திறந்த நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளதாகவும், இதன்போது குறித்த விசாரணைகளின் முன்னேற்றங்கள் தொடர்பில் விடயங்களை முன்வைப்பதாகவும் தெரிவித்துள்ள குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டவர்களுக்கு, அன்றைய தினத்தில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுக்குமாறும் பிறப்பிக்குமாறு நீதிமன்றத்திடம் கோரினர்.
அந்தக் கோரிக்கையை பரிசீலித்த நீதவான், இந்த நீதிமன்றத்தினால் அவர்களுக்கு அறிவித்தல் விடுக்க வேண்டிய அவசியமில்லை எனவும், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் குறித்த விபரங்களை மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் மேலும் விளக்கமளித்த குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சார்பில் முன்னிலையான அதிகாரிகள் கூறுகையில்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணையுடன் தொடர்புடைய மூன்றாவது சந்தேகநபரான சுரேஷ் சலே தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் ஜுன் 5ஆம் திகதி முதல் இரவு உணவைத் தவிர்த்து வருகின்றார். தற்போது அவர் தேசிய வைத்தியசாலையின் 42ஆவது வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நான்கு விசேட வைத்திய நிபுணர்களின் கீழ் அவர் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இவருடைய இந்தச் செயற்பாட்டை மேலும் உறுதிப்படுத்துவதற்கு அரசியல் ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட குழுவொன்று செயற்பட்டு வருகின்றது. நீதிமன்றத்தின் நீதித்துறைச் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும், பொதுமக்கள் மத்தியில் நீதிமன்றத்தின் மீது அவமதிப்பை ஏற்படுத்தும் வகையிலும், மக்கள் எதிர்ப்பைத் தூண்டும் வகையிலும் அக்குழுவினர் செயற்பட்டு வருகின்றனர்.
அவர்கள் இலத்திரனியல் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த விசாரணை குறித்து பல்வேறு கருத்துக்களைப் பரப்பியுள்ளனர். இவ்வாறு நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிடுவது 2024ஆம் ஆண்டின் 8ஆம் இலக்கச் சட்டத்தின் 3(1) அ பிரிவின் கீழ் உள்ள 1, 2, 3ஆம் சரத்துகளுக்கு அமைய, தண்டனைக்குரிய குற்றமாகும் என குறிப்பிட்டுள்ளனர்.
![]()