இலங்கை

நாம் ஆட்சிக்கு வர ரணிலின் தலையும் சஜித்தின் உடலும் ஒன்று சேர வேண்டும்

ரணிலின் தலையும் சஜித்தின் உடலும் ஒன்று சேர்ந்தால், நாம் புதிய அரசியல் பயணத்தைத் தொடங்குவது இலகுவாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர், நவீன் திசநாயக்கா தெரிவித்தார்.

கண்டியில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சி மாவட்டத் தேர்தல் அமைப்பாளர்கள் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் கூட்டத்தில் பேசிய போதே ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவரும், கண்டி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரும், முன்னாள் ஆளுநருமான நவீன் திசநாயக்க இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,

நாட்டில் உருவாகியுள்ள புதிய அரசியல் போக்கை எதிர்கொண்டு, ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு, ரணில்-சஜித் கூட்டணி நிச்சயமாகத் தேவை.இந்த நேரத்தில், நம்மிடமிருந்து பிரிந்து சென்ற நமது கட்சி அங்கத்தவர்களுடன் நாம் கைகோர்க்க வேண்டும். அவ்வாறு நடந்தால், இந்த ஆட்டம் மிகவும் எளிதாகிவிடும்.

மத்திய மாகாண சபையில் நாம் அதிகாரத்தைப் பெற விரும்பினால், நமக்குத் தேவையானது எல்லாம் ஒரு ஒற்றை வேட்பாளர் பட்டியல் மட்டுமே. அது நடந்தால், எனக்கு மத்திய மாகாண சபையின் முதலமைச்சர் பதவி கிடைக்கும் . அதுநடப்பதற்கு , நாம் இரு தரப்பினரும் ஒன்றிணைவது கட்டாயம். இந்த நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லக்கூடியவர் ரணில் மட்டுமே. ரணிலின் தலையும் சஜித்தின் உடலும் ஒன்று சேர்ந்தால், நாம் இந்தப் புதிய அரசியல் பயணத்தைத் தொடங்கலாம்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட சபைகளும் அமைப்புகளும் அவசரமாக வலுப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் நம்மால் அதிகாரத்தைப் பெற முடியும். நாம் ஆட்சிக்கு வந்து, கட்சி உறுப்பினர்களை அணுகி அவர்களுடன் ஒன்றிணைய வேண்டும்.

அரசியல் தலைவர்களுக்கு அதிகாரம் தேவை, அதிகாரம் என்பது மக்களின் அதிகாரம், அந்த மக்கள் அதிகாரத்தைப் பெறுவதற்கு, அரசியல் கட்சித் தலைவர்கள் குறைந்தபட்சம் இப்போதாவது மக்களிடையே செல்ல வேண்டும் என்றார்.

முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் சாந்தினி கொங்கஹகே, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜே.எம். லஃபீர், முன்னாள் கண்டி மேயர் கேசர சேனநாயக்க உட்பட மற்றும் பலர் இதில் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button