பகிரங்கப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள அசாத் மௌலானாவை ஏன் கைது செய்யவில்லை?

பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, வெளிநாட்டில் அகதியாக வாழ்ந்து வரும் அசாத் மௌலானா என்பவர் பிரித்தானியாவின் ‘சனல் 4’ ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலின் அடிப்படையில், அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவுக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பிப்பது முற்றிலும் சட்டத்திற்கு முரணானது என சுரேஷ் சலே சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தாம் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதை சவாலுக்கு உட்படுத்தி, அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே ஜனாதிபதி சட்டத்தரணி இதனை கூறியுள்ளார்.
இம்மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் ரொஹான் அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரைக் கொண்ட மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் நேற்று வியாழக்கிழமை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே சுரேஷ் சலேவின் சட்டத்தரணி இவ்வாறு கூறியுள்ளார். .
இதன் போது ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன நீதிமன்றத்தில் விளக்கமளிக்கையில், தடுப்புக்காவலில் உள்ள மனுதாரரான சுரேஷ் சலேவை பரிசோதித்த சட்ட மருத்துவ அதிகாரிகளின் அறிக்கை, இடையீட்டு மனுவொன்றின் ஊடாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
கொழும்பு பிரதான சட்ட மருத்துவ அதிகாரி ஸ்ரீயந்த அமரத்னவின் தலைமையிலான, மருத்துவக் குழுவொன்றினால் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த அறிக்கையின்படி மனுதாரர் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்
இவர் ஆறுக்கு நான்கு அளவுள்ள ஒரு சிறிய அறையிலேயே வைக்கப்பட்டுள்ளார். அந்த அறைக்கு முறையான காற்றோட்டம் இல்லை. சூரிய வெளிச்சத்தைக் காண முடிவதில்லை. குடும்ப உறவினர்களைச் சந்திப்பதற்கான வாய்ப்பும் இல்லை எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி, அவர் கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பதாகவும், அதன் விளைவாக அவர் தற்கொலை செய்துகொள்ளும் கடுமையான அபாயத்தை எதிர்கொண்டுள்ளார் என்றும் மருத்துவ அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இதன்போது, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் குறிப்பிடுகையில், மனுதாரர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும், இது குறித்து பரிசீலிக்கும் அதிகாரம் உயர் நீதிமன்றத்திற்கு மட்டுமே உள்ளதாகவும், மேன்முறையீட்டு நீதிமன்றம் அது குறித்து பரிசீலிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
அதன் பின்னர் மேலும் விளக்கமளித்த ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டு அகதியாக வெளிநாட்டில் வசிக்கும் அசாத் மௌலானா என்பவர் பிரித்தானியாவின் ‘சனல் 4’ ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலை அடிப்படையாகக் கொண்டு இந்த விசாரணையை ஆரம்பிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.
இந்த அசாத் மௌலானா என்பவரிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவொன்று பிரான்சுக்குச் சென்று, அவரை இலங்கைத் தூதரகத்திற்கு அழைத்து வாக்குமூலம் பதிவு செய்துகொண்டமை சந்தேகத்திற்குரியது எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி, பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள அந்த நபரை ஏன் கைது செய்து நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து, இந்த மனு மீதான மேலதிக பரிசீலனையை வரும் 11ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
![]()