முச்சந்தி

இஸ்ரேல் முற்றுகையில் காசாவின் துயரம்: பேரிடரில் மனிதநேய உதவி தடுப்பு…  ஐங்கரன் விக்கினேஸ்வரா

(காசா மீது நீடித்து வரும் போரின் பின்னணியில், மனிதாபிமான உதவிகளை கொண்டு செல்ல முயன்ற “குளோபல் சுமுத்” (Global Sumud) கப்பலை இஸ்ரேலிய கடற்படை சர்வதேச கடற்பரப்பில் வழிமறித்து, அதிலிருந்த 400-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களை கைது செய்த சம்பவம் உலகளாவிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது)

காசா மீதான நீண்டகால முற்றுகையும் தொடர்ச்சியான போர் தாக்குதல்களும் உலக மனசாட்சியை ஆழமாக உலுக்கியுள்ளன. உணவு, மருந்து, குடிநீர், எரிபொருள் போன்ற அடிப்படை தேவைகளுக்கே மக்கள் போராடும் சூழலில், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சமாதான செயற்பாட்டாளர்கள் காசாவிற்கு உதவிப் பொருட்களை கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இந்த மனிதாபிமான முயற்சிகளையே இஸ்ரேல் பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து தடுத்து நிறுத்தி, கப்பலில் சென்ற செயற்பாட்டாளர்களைக் கைது செய்த சம்பவம் உலகளவில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

காசா மீது நீடித்து வரும் போரின் பின்னணியில், மனிதாபிமான உதவிகளை கொண்டு செல்ல முயன்ற “குளோபல் சுமுத்” (Global Sumud) கப்பலை இஸ்ரேலிய கடற்படை சர்வதேச கடற்பரப்பில் வழிமறித்து, அதிலிருந்த 400-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களை கைது செய்த சம்பவம் உலகளாவிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் பதினொரு அவுஸ்திரேலியர்கள் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள், மருத்துவர்கள், மாணவர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவம் ஒரு சாதாரண கடற்படை நடவடிக்கையாக மட்டும் பார்க்கப்படவில்லை. மாறாக, இது சர்வதேச சட்டம், மனித உரிமைகள், கடல் சுதந்திரம் மற்றும் காசா முற்றுகை ஆகியவற்றை மையமாகக் கொண்ட புதிய உலகளாவிய விவாதமாக மாறியுள்ளது.

பேரிடரில் மனிதநேயம் :

காசாவிற்கான கடற்படை தடை பல ஆண்டுகளாக இஸ்ரேலால் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. இந்த தடை ஆயுத கடத்தலைத் தடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை என்று இஸ்ரேல் விளக்கமளித்தாலும், பல சர்வதேச மனித உரிமை அமைப்புகள் இதை “கூட்டு தண்டனை” (Collective Punishment) எனக் கண்டித்து வருகின்றன. ஏற்கனவே உணவு பற்றாக்குறை, மருத்துவ வசதியின்மை மற்றும் இடம்பெயர்வு போன்ற பேரிடர்களால் அவதிப்படும் மக்களுக்கு வெளிநாட்டு உதவிகளும் சீராக சென்றடைய முடியாத நிலை உருவாகியுள்ளது.

இந்தச் சூழலில், மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் சென்ற கப்பல் குழுவினர், நாங்கள் ஆயுதங்களோ அரசியல் நோக்கங்களோ கொண்டு செல்லவில்லை; பட்டினியால் தவிக்கும் மக்களுக்கு உதவ விரும்புகிறோம் என்று தெரிவித்திருந்தனர். அவர்களில் மருத்துவர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பொதுமக்களும் இருந்தனர். ஆனால் கப்பல் காசாவை அணுகும் முன்பே இஸ்ரேலிய கடற்படை அதனை முற்றுகையிட்டு, செயற்பாட்டாளர்களை கைது செய்தது.

இந்த நடவடிக்கை பல கேள்விகளை எழுப்புகிறது. மனிதாபிமான உதவியை வழங்கும் முயற்சிகளும் பாதுகாப்பு அச்சுறுத்தல் எனக் கருதப்படுமாயின், சர்வதேச மனிதாபிமான சட்டங்களின் நிலை என்ன? போரின்போது பொதுமக்களுக்கு உதவி வழங்குவதற்கு ஜெனீவா ஒப்பந்தங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். ஆனால் நடைமுறையில், அரசியல் மற்றும் இராணுவ நலன்கள் மனிதாபிமான கோட்பாடுகளை மிஞ்சிச் செல்கின்றன என்பதற்கான எடுத்துக்காட்டாக இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது.

பாலஸ்தீன போரில் இதுபோன்ற சம்பவங்கள் புதிதல்ல. 2010 ஆம் ஆண்டு “மாவி மர்மரா” கப்பல் சம்பவமும் உலகளவில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. அப்போது காசாவிற்கு உதவி கொண்டு சென்ற கப்பலை இஸ்ரேலிய படைகள் தாக்கியதில் பலர் உயிரிழந்தனர். அந்த நிகழ்விற்குப் பிறகும், காசா முற்றுகை குறித்து சர்வதேச அளவில் விவாதங்கள் நடந்தாலும், நிலைமையில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. தற்போது மீண்டும் மனிதாபிமானக் கப்பல் செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டிருப்பது, காசா தொடர்பான உலக அரசியலின் சிக்கலான தன்மையை வெளிப்படுத்துகிறது.

சைப்ரஸிலிருந்து காசா வந்த கப்பல்

இதற்கு முன்பாகவும் கொடும் பஞ்சத்தின் விளிம்பில் பாலஸ்தீனத்தில் இருக்கும் காசாவுக்கு உதவிகளை விநியோகிப்பதற்காக, 2024 மார்ச்சில் சைப்ரஸ் துறைமுகத்தில் இருந்து கப்பல் காசாவை நோக்கி புறப்பட்டுள்ளது.
காசாவுக்கு உதவிகளை விநியோகிப்பதற்கான புதிய கடல் பாதை ஒன்றை ஏற்படுத்தும் முன்னோடித் திட்டமாக, சைப்ரஸ் துறைமுகத்தில் இருந்து இருநூறு தொன் உணவு பொருட்களை ஏற்றிய கப்பல் ஒன்று மார்ச் 12 காசாவை நோக்கி புறப்பட்டது. காசாவின் வட மேற்காக 320 கிலோமீற்றர் தொலைவிலேயே சைப்ரஸ் நாடு உள்ளது.

போரால் பாதிக்கப்பட்டு, பஞ்சத்தின் விளிம்பில் இருக்கும் காசா நகருக்கு உணவுப் பொருட்கள் மற்றும் குடிநீர், மருந்துப் பொருட்கள் ஆகியவை சைப்ரஸ் நாட்டின் துறைமுகத்திலிருந்து கடல் வழியாக தற்போது அனுப்பி வைக்கப்பட்டது. ஆனாலும் அதனையும் இஸ்ரேலிய அரசு தடுத்து நிறுத்தியது.

மேலும் காசா மக்களுக்கு உணவு மற்றும் மருந்து பொருட்களைச் சேகரித்த ஸ்பெயின் நாட்டின் “ஓப்பன் ஆர்ம்ஸ்’ (Open Arms) என்ற அமைப்புக்குச் சொந்தமான கப்பல் காசாவுக்கு 2024 ஏப்ரலில் அனுப்பப்பட்டது. ‘ஓபன் ஆர்ம்’ என்ற ஸ்பெயின் தொண்டு நிறுவனத்தின் இந்தக் கப்பல் அரிசி, மாவு மற்றும் உணவு பொருட்களை ஏற்றி சைப்ரஸின் லர்னாகா துறைமுகத்தில் இருந்து பயணத்தை ஆரம்பித்தது.
கடந்த 2005-ம் ஆண்டுக்குப் பிறகு ஐரோப்பாவிலிருந்து காசாவுக்கு நிவாரணப் பொருள்களைக் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும். இந்தத் திட்டத்திற்கு ஐக்கிய அரபு இராச்சியமே அதிக நிதி உதவி அளித்திருப்பதோடு, ஸ்பெயின் தொண்டு நிறுவனம் இறகப்பலை வழங்கியது. ஆனாலும் இந்த கப்பலையும் இஸ்ரேல் அரசு தடை செய்து நடுக்கடலில் திருப்பி அனுப்பியது அறிந்ததே.

காசாவில் குறிப்பாக வடக்கு காசாவுக்கான உதவிப் பொருட்கள் செல்வதை இஸ்ரேல் தொடர்ந்து தடுத்து வரும் சூழலில் அங்கு ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக மக்கள் உயிரிழந்து வருகின்றனர். காசாவில் பஞ்சம் ஏற்படுவது பற்றி ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உதவி அமைப்புகள் எச்சரித்து வருகின்றன.

இஸ்ரேலின் கடல்வழி முற்றுகை:

காசாவில் 2023 ஒக்டோபர் ஏழாம் திகதி போர் வெடித்தது தொடக்கம் அந்தப் பகுதியை வெளியுலகில் இருந்து இஸ்ரேல் முடக்கி இருக்கும் நிலையிலேயே அங்கு நேரடி உதவி விநியோகத்திற்கு தொண்டு நிறுவனங்கள் முயன்றுள்ளன.
இஸ்ரேல் ராணுவத்தினரின் தொடர் தாக்குதலால் நிலைகுலைந்து போயுள்ள காசா நகரில் மக்கள் கடும் நெருக்கடியில் வாழ்ந்து வருகின்றனர்.

Screenshot

உணவு, குடிநீர், மருந்துப் பொருட்கள் போன்ற அத்தியாவசியமான பொருட்கள் எதுவுமின்றியும், மின்சாரம் இல்லாமலும் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
உணவு இல்லாததால் பட்டினிச் சாவை எதிர்நோக்கியுள்ள அந்த மக்களுக்கு தற்போது தரை வழியாகவும், வான் வழியாகவும் அளிக்கப்பட்டு வரும் நிவாரணப் பொருள்கள் போதுமான அளவில் இல்லை.

இதனாலேயே வெளிநாடுகளில் இருந்து உதவிகள் திரட்டப்பட்டு காசாவுக்கு அனுப்ப பல தடவைகள் முயற்சி செய்யப்பட்டன. 2007 ஆம் ஆண்டு காசாவில் ஹமாஸ் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் இஸ்ரேல் அந்தப் பகுதி மீது கொண்டுவந்த கடல்வழி முற்றுகை முடிவுக்கு வரவில்லை.

மேற்குலக இரட்டை நிலைப்பாடு:

மேற்கத்திய நாடுகளின் இரட்டை நிலைப்பாடுகளும் இங்கு விமர்சிக்கப்படுகின்றன. உலகின் சில பகுதிகளில் மனித உரிமை மீறல்களை கடுமையாக கண்டிக்கும் சக்திவாய்ந்த நாடுகள், காசா விவகாரத்தில் மௌனமாக இருப்பதாக பலர் குற்றஞ்சாட்டுகின்றனர். குறிப்பாக பொதுமக்கள் மீதான தாக்குதல்கள், மருத்துவமனைகள் மற்றும் அகதி முகாம்கள் மீது நடத்தப்படும் குண்டுவீச்சுகள் போன்றவை உலக மனசாட்சியை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளன.

இஸ்ரேல் தனது பாதுகாப்பு உரிமையை முன்வைத்தாலும், மனிதாபிமான உதவியைத் தடுக்கிற நடவடிக்கைகள் உலகளவில் அதன் அரசியல் மற்றும் நெறிமுறைப் புகழை பாதிக்கின்றன. காசாவில் வாழும் மக்கள் ஆயுதப்படையினரல்ல. அவர்கள் அனைவரும் அப்பாவி பொதுமக்கள். பட்டினி, நோய், இடம்பெயர்வு ஆகியவற்றின் நடுவே வாழ்வதற்காக போராடும் மனிதர்கள். அவர்களிடம் உதவி கொண்டு செல்ல முயன்றவர்களை கைது செய்வது, மனிதாபிமான உணர்வுகளுக்கே எதிரான செயல் எனப் பார்க்கப்படுகிறது.

இந்த சம்பவம் உலக சமூகத்திற்கு ஒரு முக்கியமான சவாலாகும். மனிதாபிமான உதவி அரசியல் எல்லைகளைக் கடந்து செல்ல வேண்டியது அவசியம். போரிலும் மனிதநேயம் உயிருடன் இருக்க வேண்டும். காசா மக்களின் துயரத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு வெறும் இராணுவ தீர்வுகள் போதாது; நீதி, உரிமை, மனிதாபிமான அணுகுமுறை மற்றும் நிலையான அரசியல் தீர்வே தேவைப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button