வர்த்தக நிலையத்திலிருந்த வயோதிபத் தம்பதி கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு படு கொலை; ஹட்டன் டிக்கோயா நகரில் சம்பவம்

ஹட்டன் டிக்கோயா நகரில் உள்ள கடையொன்றில் தனியாக வசித்து வந்த வயோதிப தம்பதியினர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .
இவ்வாறு கொலை செய்யப்பட்டவர்கள் எஸ். காளிமுத்து சத்திவேல் (82 வயது) மற்றும் அவரது மனைவியான சகுந்தலாதேவி (82 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொல்லப்பட்ட தம்பதியினரின் பிள்ளைகள் கொழும்பு பகுதியில் வசித்து வருவதாகவும், கொலை செய்யப்பட்ட தம்பதியினர் சில காலமாக கடையை நடத்தி வந்ததாகவும், தற்போது கடையை மூடிவிட்டு தனியாக வசித்து வந்ததாகவும் ஹட்டன் பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் யாராவது கடைக்குள் நுழைந்து, இருவரையும் கொன்றுவிட்டு தப்பிச் சென்றார்களா? அல்லது இது குடும்பத் தகராறா? என்பது குறித்து ஹட்டன் பொலிஸார் பல்வேறு வழிகளில் விசாரணையை நடத்தி வருகின்றனர் .
தம்பதியினர் வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டு,பெண் மாத்திரம் இழுத்துச் செல்லப்பட்டு படிக்கட்டுகளில் வீசப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர் .
இறந்தவரின் பிள்ளைகள் 21 ஆம் திகதி பிற்பகல் முதல் தங்கள் பெற்றோருக்குப் தொடர்ந்து பலமுறை தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய போதும் பெற்றோர் அதற்குப் பதிலளிக்காததால், அயலவர்களிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்து, கடையைத் திறந்து பார்க்கும் படி கூறிய போதே இருவரும் கொலையுண்டு கிடப்பது தெரியவந்துள்ளது. அதன் பிறகு ஹட்டன் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
கொலை நடந்த இடத்திற்கு வந்த ஹட்டன் மாவட்ட நீதிபதி மற்றும் நீதவான் பீற்றர் போல், சம்பவ இடத்திலே ஆய்வு நடத்தி, டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் தடயவியல் வைத்தியரின் உதவியுடன், பிரேத பரிசோதனைக்காக சடங்கலை டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் தடயவியல் வைத்தியரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
![]()