அக்கினிக்குஞ்சின் சாதனைப் பயணம்!… கிறிஸ்டி நல்லரெத்தினம் வாழ்த்துச் செய்தி

அவுஸ்திரேலியாவிலிருந்து கடந்த பதினாறு ஆண்டுகளாகத் தடையின்றி இயங்கி வரும் அக்கினிக்குஞ்சு இணையத்தளம், எதிர்வரும் மாதம் 6ம் திகதி தனது 16-ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடுவது உண்மையில் ஒரு சாதனையே!
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் – அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு; தழல்
வீரத்தில் குஞ்சென்னும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்.
மகாகவி பாரதியார் தனது இந்த ஞானப்பாடலில் தீப்பொறி என பொருள்படும் அக்கினிக்குஞ்சு எனும் ஒரு சொல்லை ஆழமான குறியீடாகப் பயன்படுத்தினார். இச்சொல் பல மறைமுக அர்த்தங்களைக் கொண்டிருந்தாலும். அவற்றில் ஒன்று: சிறிய தீப்பொறி எப்படி ஒரு காட்டுத்தீயை உருவாக்கும் ஆற்றல் கொண்டதோ, அதைப்போலவே ஒரு சிறிய உணர்ச்சியும், எழுச்சியும் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கும் வல்லமை பெற்றது. இதைத்தான் அக்கினிக்குஞ்சு இணைய இதழ் கடந்த பல ஆண்டுகளாக ஆஸ்திரேலிய மண்ணில் சாதித்து வருகிறது. ஊடகத்துறையில் பல மாற்றங்களுக்கு வித்திட்டு அவற்றை அரவணைத்து பயணிக்கும் அக்கினிக்குஞ்சிற்கு இப்பெயர் பொருத்தமானதே!
யாழ் எஸ். பாஸ்கர் அவர்களை ஆசிரியராகக் கொண்டு இயங்கும் அக்கினிக்குஞ்சு, புலம்பெயர் தமிழ் மக்களின் குரலாகவும், கலை மற்றும் இலக்கியத்தின் அரிய தளமாகவும் திகழ்ந்து தமிழுக்கு ஆற்றி வரும் பணிகள் மகத்தானவை.
பதினாறு ஆண்டுகள் என்பது வெறும் காலக்கணக்கு அல்ல; அது தமிழுக்காகவும், தமிழ் படைப்பாளிகளுக்காகவும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு உன்னதமான பயணம்.
இலங்கை, இந்தியா மற்றும் உலகச் செய்திகளைத் துல்லியமாக வழங்குவதோடு மட்டுமல்லாமல், கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் மற்றும் தொடர் நாவல்கள் எனப் பல்வேறு இலக்கியப் படைப்புகளுக்குக் களம் அமைத்துக் கொடுக்கிறது.
றிமுக மற்றும் இளம் படைப்பாளிகளை ஊக்குவிப்பதிலும், மூத்த எழுத்தாளர்களின் ஆக்கங்களைப் போற்றுவதிலும் அக்கினிக்குஞ்சு தனித்துவமான முத்திரையைப் பதித்துள்ளது. என்னை ஒரு ஓவியனாகவும் எழுத்தாளனாகவும் அறிமுகப்படுத்தி என் ஆக்கங்களுக்கு ஒரு களம் அமைத்துக்கொடுத்தது மட்டுமல்லாமல் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி என்னைக் கெளரவித்ததை இவ்வேளையில் நன்றியுடன் நினைவுகூருகிறேன்!
உண்மையை உண்மையாகச் சொல்லும் பத்திரிகைத் தன்மையும், படைப்பாளிகளுக்குத் தளம் அமைத்துக் கொடுக்கும் அர்ப்பணிப்பும் அக்கினிக்குஞ்சின் வெற்றியின் முக்கிய அடித்தளம் என்பது நிஜமே!
இவ்விணையதளத்தின் 16-ஆவது ஆண்டுவிழாவை முன்னிட்டு, எதிர்வரும் ஜூன் மாதம் 6-ஆம் திகதி “இசையருவி” என்ற மாபெரும் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என்பது ஒரு மகிழ்ச்சியான செய்தி!
இந்நிகழ்ச்சியில் தமிழ் நாட்டு பாடகர்கள் மட்டுமல்லாது, என்றும் போல், அவுஸ்திரேலியாவில் வாழும் இளம் பாடகர்களைத் தெரிவு செய்து, அவர்களை மேடையேற்றி விருது வழங்கி கௌரவிக்க இருப்பது இந்நிகழ்ச்சியின் இன்னொரு சிறப்பு! தமிழுடன் இசையையும் வளர்க்கும் நோக்கில், பாடகர்களுக்குத் துறை சார்ந்த இசை மேதைகள் மூலம் விருதுகள் வழங்கி கௌரவித்து வருவது பாராட்டப்பட வேண்டியதோன்றாகும்.
தமிழ்ப் பணியைத் தம்மிரு கண்களாகக் கொண்டு உழைத்து வரும் ஆசிரியர் யாழ் எஸ். பாஸ்கர் அவர்களுக்கும், அக்கினிக்குஞ்சு குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்!
அக்கினிக்குஞ்சு மென்மேலும் வளர்ந்து, உலகத் தமிழர்களின் அறிவின் சுடராகவும், இலக்கிய ஒளியாகவும் பல்லாண்டு காலம் செழித்து வளர வாழ்த்துகிறேன்.
வாழ்க அக்கினிக்குஞ்சு! வளர்க அதன் தமிழ்ப் பணி!.
![]()