உலகம்

ஒன்று ஒப்பந்தம், இல்லையேல் அழிவு; ஈரானுக்கு ட்ரம்பின் கடும் எச்சரிக்கை

ஈரான் பேச்சு நடத்தி ஒரு சுமுகமான ஒப்பந்தத்திற்கு வரவில்லையென்றால் முற்றிலும் அழிக்கப்படும்’ என, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

சீன பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், செய்தியாளர்களிடம் பேசுகையில், ”ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது. இதில் உறுதியாக உள்ளோம். ஈரான் கதை முடிந்தது.

அவர்களுக்கு இப்போது இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன. ஒன்று, எங்களுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும்; இல்லையென்றால், கூண்டோடு அழிய நேரிடும்,” என்று மிக ஆக்ரோஷமாகப் பேசினார்.

மேலும் ஈரானின் மிக முக்கியமான, ‘கார்க்’ தீவை வெறும் நான்கைந்து நிமிடங்களில் அமெரிக்க ராணுவத்தால் முற்றிலும் நிர்மூலமாக்க முடியும் என்று டிரம்ப் சவால் விடுத்துள்ளார்.

தற்போதைய நிலவரப்படி, ஈரானின் 90 சதவீத கச்சா எண்ணெயைச் சீனாதான் வாங்குகிறது என்பதும், இரு நாடுகளுக்கும் இடையே நெருக்கமான ராணுவ உறவு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே ஈரானுக்கு சீனா வழங்கி வரும் ஆதரவு குறித்து ட்ரம்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது.அதற்குப் பதிலளித்த அவர், ”அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஒரு சுமுக ஒப்பந்தம் ஏற்படுவதையே அதிபர் ஷீ ஜின்பிங் விரும்புகிறார்.

இதற்குத் தம்மால் இயன்ற உதவியையும் செய்யத் தயாராக இருப்பதாக என்னிடம் கூறினார். ஈரானுக்கு எந்தவிதமான ராணுவ தளவாடங்களையும், ஆயுதங்களையும் சீனா வழங்காது என்று அவர் எனக்கு உறுதியளித்துள்ளார்.

ஈரான் அணு ஆயுதம் வைப்பதில் சீனாவுக்கும் விருப்பமில்லை என்றே நான் கருதுகிறேன்,” என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button