கட்டுரைகள்

நாடோடி – ஸ்வீட் சிக்ஸ்டி… ச.சுந்தரதாஸ்

சிவாஜியை விட்டுப் பிரிந்து , எம் ஜி ஆரை அணுகி அவரை ஆயிரத்தில் ஒருவன் என்று அடையாளம் கண்டு படம் எடுத்து வெற்றி கண்ட பி. ஆர். பந்துலு தனது அடுத்தப் படத்தில் எம் ஜி ஆரை நாடோடி ஆக்கிவிட்டார் ! ஆமாம் அவர் எம் ஜி ஆர் நடிப்பில் தயாரித்து இயக்கி 1966ல் வெளிவந்த படம் நாடோடி. ஆயிரத்தில் ஒருவனை கலரில் , வெளிப்புற படப்பிடிப்புகளோடு எடுத்தவர் இப் படத்தை கருப்பு வெள்ளையில் லோ பஜெட்டில் எடுத்திருந்தார்.

தென்னகத்து திரையுலகில் உன்னத இடத்தைப் பிடித்த சரோஜாதேவி, ஜெயலலிதா இருவரையும் திரையுலகிற்கு தான் தயாரித்து , இயக்கிய கன்னடப் படங்கள் மூலம் அறிமுகப்படுத்திய பெருமை பந்துலுவுக்கு உண்டு. ஆயிரத்தில் ஒருவனில் எம் ஜி ஆருக்கு ஜெயலலிதாவை முதல் முறையாக ஜோடியாக்கியவர் , நாடோடியில் சரோஜாதேவியை ஜோடியாக நடிக்க வைத்தார்.

ஆனால் இப் படத்தின் மூலம் புதுமுகமாக பாரதியை அறிமுகப் படுத்திய பந்துலு அவரை எம் ஜி ஆருடன் ஒரு பாடலுக்கு டூயட் பாடவும் வைத்தார். ஆக பின்னர் பிரபலமான பாரதிக்கு நாடோடி முதல் படியானது.

அதே போல் ஒரு காலத்தில் கதாநாயகனாக நடித்து புகழ் பெற்றிருந்த நடிப்பிசைப் புலவர் கே ஆர் ராமசாமி பட வாய்ப்புகளை இழந்திருந்த சமயம் எம் ஜி ஆரின் ஆலோசனைப் படி இந்தப் படத்தில் அவருக்கு ஒரு முக்கிய வேடத்தை பந்துலு வழங்கியிருந்தார். மனோ தத்துவ டாக் டர் வேடத்தில் வரும் அவரின் நடிப்பு கவனத்தைக் கவர்ந்தது.

படத்தில் இரண்டு வில்லன்கள். ஒருவர் வி. கே ராமசாமி, மற்றையவர் நம்பியார். ஒரிஜினல் வில்லன் ராமசாமி . சய்லண்ட் கில்லர். ஆரம்பத்தில் நல்லவராக , அப்பாவியாக அறிமுகமாகும் நம்பியாரைப் பார்த்து அதிசயிக்கிறோம். ஆனால் அவரையும் கொடியவனாக்கி விடுகிறார் ராமசாமி. அதன் பின் நம்பியாரின் கை ஓங்கி விடுகிறது. எம் ஜி ஆர் , சரோஜாதேவி, ராமசாமி என்று எல்லோரையும் அடக்கி ஆள்கிறார் அவர்.

ஊருக்கெல்லாம் சாதி ஒழிப்பு பற்றி மேடை ஏறி பிரசாரம் செய்யும் தர்மலிங்கம் தன் மகள் மீனா தாழ்ந்த சாதியை சேர்ந்த தியாகுவை காதலிப்பது தெரிந்ததும் தடை போடுகிறார். தடையை மீற முடியாத மீனா தன் உயிரை மாய்த்துக் கொள்கிறாள். அவளின் தங்கை ராதாவோ அக்காவுக்கு ஏற்பட்ட அநீதிக்கு பழி வாங்கும் விதத்தில் அவளின் காதலனை கண்டு பிடித்து கல்யாணம் செய்வதாக சபதம் போடுகிறாள். தியாகுவோ காதலியை இழந்த சோகம், வளர்ப்புத் தந்தையை இழந்த துயரம், எல்லாவற்றாலும் சொத்துகளை தொழிலாளர்களுக்கு எழுதி வைத்து விட்டு நாடோடியாக அலைகிறான். இதனிடையே தர்மலிங்கத்தால் பாதிக்கப் பட்ட ஜம்பு அவரை பழி வாங்கும் விதத்தில் ராதாவை கடத்தி சென்று டெம்ப்ரரியாக பார்வையற்றவளாக்கி தெருவில் பிச்சை எடுக்க விடுகிறான். அவளை காப்பாற்ற வந்த தியாகுவையும் தற்காலிக பார்வையற்றவனாக்கி விடுகிறான். ஆக ஹீரோ, ஹீரோயின் இருவரும் பார்வை அற்றவராகி படத்தின் கதையையும் தடுமாற வைக்கிறார்கள்.

தன்னுடைய பழைய நண்பன் சிவாஜிக்கு தெரிவு செய்த கதையில் எம் ஜி ஆரை பந்துலு நடிக்க வைத்தது விட்டாரோ என்னவோ! ஆரம்ப பாடல் காட்சியில் மட்டும் அழகாக உடுத்து களையாக காட்சி தரும் எம் ஜி ஆர் அதன் பின் படம் முழுவதும் லுங்கி ( சாரம் ) அணிந்து , சாதாரண சட்டையுடன் படம் முழுதும் வருகிறார். பாசம் படத்துக்கு பிறகு இந்தப் படத்தில் தான் இப்படி யாருமின்றி நாடோடியாக அலைகிறார். கண்களை இழந்தவராக வரும் கட்சியில் அவரின் நடிப்பு பாராட்டும் படி உள்ளது. சரோஜாதேவியும் அதே போல் பார்வையின்றி வந்து அனுதாபத்தை பெறுகிறார்.

எம் ஜி ஆருக்கு படம் முழுவதும் சரோஜாதேவிக்கு உதவி, ஒத்தாசை செய்யும் வேலைத்தான். நம்பியார் அடக்கமாக காய் நகர்த்துகிறார். எம் .ஆர் .ராதாவுக்கு போயிருக்க வேண்டிய வேடம் வி .கே . ராமசாமிக்கு கிடைத்தது . அவரும் தன் பங்கை நிறைவேற்றி விட்டார். அதே போல் பந்துலுவின் மனைவி எம் .வி .ராஜம்மா செய்ய வேண்டிய அம்மா வேடம் பி. கே. சரஸ்வதிக்கு கிட்டியது. ஆனாலும் நாகேஷ் செய்ய வேண்டிய வேடம் அவருக்கே கிடைத்து அவரை தவிர்க்க முடியாத நடிகராக நிரூபித்தது. இவர்களுடன் வி. கோபாலகிருஷ்ணன், திருப்பதிசாமி, பேபி ஷகிலா, குண்டுமணி, ஜெய்குமாரி , வெங்கடாசலம் ஆகியோரும் நடித்திருந்தனர். இவர்களுடன் பந்துலுவும் ஒரு காட்சியில் நடித்திருந்தார்.

படத்தின் பிளஸ் பாயிண்ட் பாடல்கள்தான். தன்னுடைய படங்களுக்கு இனி வாலி தான் பாடல்கள் எழுதுவார் என்று சொல்லியிருந்த எம் ஜி ஆர் இப் படத்தின் ஒரு பாடல் தவிர்த்து எல்லாவற்றையும் கண்ணதாசன் எழுத அனுமதித்திருந்தார். இதனால் அவர் இயற்றிய காதலர் தினப் பாடலான உலகம் எங்கும் ஒரே மொழி, தேசப் பற்றை வலியுறுத்தும் நாடு அதை நாடு, காதலை உணர்த்தும் அன்றொரு நாள் இதே நிலவில், கடவுளை தட்டிக் கேட்கும் கடவுள் செய்த பாவம் ( படத்தில் கடவுள் செய்த பாடம் என்று ஒலித்தது ) வாலியின் திரும்பி வா ஒளியே திரும்பி வா பாடல்கள் இனிமை, அருமை என்று சொல்லும் வண்ணம் அறுபத்தாண்டுகள் கழித்தும் ஒலிக்கின்றன. எம் எஸ் விஸ்வநாதன் தந்த இசை எக்சலன்ட்!

படத்தின் கதையை ஜி . பாலசுப்ரமணியம் எழுதியிருந்தார். தவணை முறையில் கண் பார்வையை இழந்து மீண்டும் பெறும் மூலிகையை எங்கே கண்டு பிடித்தாரோ தெரியவில்லை. போலீசாரிடம் சென்று முறையிடாமல் நாயகனும், நாயகியும் ஏன் அலைகிறார்களோ அதுவும் புரியவில்லை. ஆனாலும் சாதி ஒழிப்பு, தீண்டாமை, ஊருக்கு உபகாரம் என்று சீர்திருத்த கருத்துக்களை படத்தில் சொல்லியிருப்பதை பாராட்டலாம்.

படத்துக்கு வசங்களை ஆர் .கே . சண்முகம் எழுதினார். சில காட்சிகளில் வசனங்கள் கருத்தோடு அமைந்தன. ஆர். தேவராஜன் படத் தொகுப்பை கவனிக்க , வி. ராமமூர்த்தி ஓளிப்பதிவை கையாண்டார். படத்தின் இறுதியில் எம் ஜி ஆர், நம்பியார் போடும் சண்டைக் காட்சி சூப்பர்.

ஆயிரத்தில் ஒருவன் பட வெற்றியைத் தொடர்ந்து வந்த நாடோடி சாதாரணப் படமானது. ஆனாலும் எம் ஜி ஆர், பந்துலு நட்புக்கு பங்கம் வராமல் அமைந்தது. இல்லா விட்டால் சிவாஜியை விட்டு எம் ஜி ஆரிடம் வந்த பந்துலு பின்னர் செல்ல இடமின்றி நாடோடி ஆகியிருப்பாரோ! 1966ம் ஆண்டு எம் ஜி ஆரின் நடிப்பில் நாடோடி, ஏவி. எம் . ராஜன் நடிப்பில் நம்ம வீடு லஷ்மி, ரவிச்சந்திரன் நடிப்பில் எங்க பாப்பா என்று மூன்று படங்களை எடுத்துத் தள்ளினார் பந்துலு. மூன்றுமே சுமாரான வெற்றியையே பெற்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *