முச்சந்தி

வாகன விபத்துக்கள் பெரிதும் அதிகரிப்பு!; விபத்துக்கள், நீரில் மூழ்கி 80 பேர் பலி

நாட்டில் கடந்த ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் வாகன விபத்துக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.

நேற்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட பிரதி பொலிஸ் மா அதிபர், குறித்த காலப்பகுதியில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் உயிரிழப்புடன் கூடிய விபத்துக்களின் எண்ணிக்கை 18 ஆல் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

“இந்த மாதம் 10 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியை எடுத்துக்கொண்டால், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் உயிரிழப்பு விபத்துக்கள் 18 ஆக அதிகரித்துள்ளன. விபத்துக்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் பாரதூரமான விபத்துக்கள் 94 ஆகவும், சிறு விபத்துக்கள் 49 ஆகவும் அதிகரித்துள்ளன. சொத்து சேதங்களை ஏற்படுத்திய விபத்துக்கள் 48 ஆக அதிகரித்துள்ளன.

விபத்துக்களைத் தடுக்க ஊடகங்கள் வாயிலாக விழிப்புணர்வு செய்தோம், பாதுகாப்பு கடமைகளிலும் ஈடுபட்டோம். அவ்வாறான நிலையில் இவ்வாறானதொரு சூழல் காணப்படுகிறது. எனவே, பாரதூரமான வாகன விபத்துக்களைக் குறைக்க எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பொதுமக்களிடமும் சாரதிகளிடமும் கேட்டுக்கொள்கிறோம்.” என்றார்.

80-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

இதேவேளை புத்தாண்டு காலத்தில் ஏற்பட்ட வீதி விபத்துக்கள் மற்றும் நீரில் மூழ்கிய சம்பவங்களினால் சுமார் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன.

இந்தக் காலப்பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 53 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

அதிகளவிலான விபத்து மரணங்கள் ஏப்ரல் 10 மற்றும் 13 ஆகிய திகதிகளில் பதிவாகியுள்ளன.

அதேவேளை, நீரில் மூழ்கிய சம்பவங்களினால் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில், இந்த வருட புத்தாண்டு காலத்தில் வீதி விபத்துக்கள் மற்றும் நீரில் மூழ்கிய சம்பவங்களினால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button