இந்தியா

திருச்சி கிழக்கு தொகுதியில் இன்று விஜய் பிரசாரம்

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதி களில் போட்டியிடுகிறார். பெரம்பூர் தொகுதியில் நேற்று வீடு, வீடாக சென்று பிரசாரம் மேற் கொண்ட அவர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை திருச்சி கிழக்கு தொகுதியில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

இதற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் இன்று மதியம் 2.00 மணியளவில் விஜய் திருச்சிக்கு வருகிறார்.

பின்னர் பிற்பகல் 3.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு தனக்கு வாக்கு சேகரிக்க இருக்கிறார்.

திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட விமான நிலையம் அருகே உள்ள வயர்லஸ் சாலையில் தனது பிரசாரத்தை தொடங்கும் அவர் தென்றல்நகர், கே.கே.நகர் பஸ்நிலையம், காஜாமலை சாலை, இ.வி.ஆர்.கல்லூரி சாலை, தமிழ்நாடு ஓட்டல். கோழிப்பண்ணை சாலை, கொட்டப்பட்டு பகுதிகளில் திறந்த வாகனத்தில் நின்றபடியே வாக்கு சேகரிக்கிறார். பின்னர் மீண்டும் இரவு 7.00 மணி அளவில் விமான நிலையம் வந்தடைகிறார்.

இதற்காக தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது. இந்த நிலையில் திருச்சியில் விஜய் பிரசாரம் செய்வதற்கு தேர்தல் நடத்தும் அலுவலர் 10 பொதுவான நிபந்தனைகளுடன் காவல்துறை மற்றும் சம்பந்தப்பட்ட துறையினர் வழங்கும் நிபந்தனைகளை பின்பற்றுமாறும் கூறி அனுமதி அளித்துள்ளார்.

அதில், பிரசாரத்தின்போது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் வழிநெடுகிலும் கட்சிக்கொடிகள் அமைக்கக்கூடாது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறாமல் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும்.

பிரசாரம் மேற்கொள்ளும் இடத்தில் சுவரொட்டியோ, கட்சி கொடிகளோ, விளம்பர பதாகையோ அனுமதியின்றி வைக்கக்கூடாது.

ஆபத்து விளைவிக்கும் வெடிபொருட் களை வைக்கக்கூடாது. அனுமதிக்கப்பட்ட இடத்தில் நிர்ணயிக்கப்பட்ட திகதி மற்றும் நேரத்தில் மட்டுமே நிகழ்ச்சி நடத்த வேண்டும். என்பன உள்பட 27 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *