பலதும் பத்தும்

விசில் சின்னத்தை கோலமாக வரைந்த தொண்டர்கள்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் விடுத்த வேண்டுகோளை ஏற்று, அக்கட்சியின் பெண் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தங்களது வீட்டு வாசல்களில் ‘விசில்’ சின்னத்தை கோலமாக வரைந்து தங்களது ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கட்சியின் முழுமையான தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், குறிப்பாக மகளிரணி தொண்டர்களிடம் ஒரு உணர்ச்சிப்பூர்வமான கோரிக்கையை முன்வைத்தார். “தமிழக வெற்றி கழகத்தின் அக்காக்கள், தங்கைகள் மற்றும் அம்மாக்கள் அனைவரும் உங்கள் வீட்டு வாசலில் நமது கட்சியின் விசில் சின்னத்தை கோலமாக போட வேண்டும், இது உங்கள் விஜய்க்கு நீங்கள் கொடுக்கும் மிகப்பெரிய ஆதரவாக அமையும்” என்று அவர் பேசியிருந்தார்.

விஜய்யின் இந்த வேண்டுகோள் வெளியான சில மணி நேரங்களிலேயே தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள் உற்சாகத்துடன் வீட்டு வாசலில் வரையப்படும் கோலத்தை ஒரு தேர்தல் பிரச்சார யுக்தியாக மாற்றியுள்ளார். தலைவரின் வேண்டுகோளைத் தட்டாமல் ஏற்ற பெண்கள், அதிகாலையிலேயே தங்கள் வீட்டு வாசல்களில் வண்ணமயமான கோலப்பொடிகளால் விசில் சின்னத்தை வரைந்து அசத்தியுள்ளனர்.

இந்தக் கோலங்கள் வெறும் ஓவியங்களாக மட்டுமில்லாமல், “நமது அண்ணனுக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள்” மற்றும் “நமது சின்னம் விசில்” போன்ற முழக்கங்களுடன் வரையப்பட்டுள்ளன. வழக்கமான கோலங்களுக்கு பதிலாக அரசியல் சின்னத்தை வீட்டு வாசலில் வரைவதன் மூலம், அந்த தெருவில் வசிக்கும் மற்ற பொதுமக்களின் கவனத்தையும் ஈர்க்கும் ஒரு நுணுக்கமான பிரச்சாரமாக இது பார்க்கப்படுகிறது.

சமூக வலைதளங்களிலும் இந்த விசில் கோல பிரச்சாரம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பெண்கள் தாங்கள் வரைந்த கோலங்களை ஒளிப்படங்களாக எடுத்து, சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். “தலைவர் சொன்னால் செய்வோம்” என்ற வாசகத்துடன் பகிரப்படும் இந்தத் தகவல்கள் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *