முச்சந்தி

ஆப்கான் போர்க்குற்றத்தில் ஆஸி படைகள்…. தனித்துவமான விசாரணையும் முறை தவறாத நீதியும்!…  ஐங்கரன் விக்கினேஸ்வரா

(ஆப்கானிஸ்தானில் நடந்ததாக கூறப்படும் போர் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் முறையில், அவுஸ்திரேலிய அணுகுமுறை தனித்துவமான தன்மையை வெளிப்படுத்துவதாகவும் பார்க்கப்படுகிறது)

அவுஸ்திரேலிய உயரிய ராணுவ விருது பெற்ற வீரரான பென் ராபர்ட்ஸ்-மித், போர்க் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சிட்னி விமான நிலையத்தில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். ஆப்கானில் பணியாற்றிய போது கைதிகள் கொல்லப்பட்ட சம்பவங்களில் இவருக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் முறைப்பாடுகள் தொடர்பில் அவுஸ்திரேலிய பொலிஸார் விசாரணை நடத்தி நடத்தி வந்தனர். முன்னதாக, ஊடகங்களுக்கு எதிராக இவர் தொடர்ந்த அவதூறு வழக்கில், இவர் மீதான குற்றச்சாட்டுகள் உண்மையானவை என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேலும் இந்த முக்கிய வழக்கில்்பென் ராபர்ட்ஸ்-ஸ்மித் (Ben Roberts-Smith) போன்ற உயரிய விருது பெற்ற வீரர்கள் மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

ஆனாலும் பல்வேறு மேல்முறையீடுகள் தோல்வியடைந்த நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுகள் காழ்ப்புணர்ச்சி கொண்டவை என்று அவர் தொடர்ந்து மறுத்து வந்தார். இந்நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை அவுஸ்திரேலிய ராணுவ வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவங்கள் அவுஸ்திரேலிய ராணுவத்தின் வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாகக் கருதப்படுகிறது.

போர்க்குற்றத்தில் அவுஸ்திரேலிய படை:

நியூயோர்க் இரட்டைக் கோபுரம் 2001 செப்டம்பரில் தாக்குதலுக்கு உள்ளாகியது. அதன்போது மூவாயிரம் வரையான பொது மக்கள் கொல்லப்பட்டனர். அதனால் அமெரிக்கா மட்டுமல்ல, உலகமே அதிர்ச்சிக்கு உள்ளாகியது. இத்தாக்குதலை ஆப்கானில் உள்ள தலிபான்களே தொடுத்தனர் என்றும், அதனுடைய விளைவாக தலிபானுக்கு எதிரான அமெரிக்காவின் யுத்தம் ஆரம்பமாகியது. அமெரிக்காவுடன் கூட்டாளிகளாக இணைந்த அவுஸ்திரேலியத் துருப்புக்கள் 2002ல் ஆப்கானிஸ்தானில் களம் புகுந்தன.

அவுஸ்திரேலியாவின் விசேட படைப்பிரிவினர் ஆப்கானில் போரில் நின்றனர். அங்கு நடந்த போர்க்குற்றங்களில் 39 பேரை அவுஸ்திரேலியா படுகொலை செய்தனர் என்ற அதிர்ச்சி அறிக்கை 2020 இல் வெளியானது. அவுஸ்திரேலிய விசேட படைப்பிரிவினர் இழைத்த போர்க்குற்றங்கள் குறித்து இடம்பெற்ற விசாரணைகளின் முடிவை அவுஸ்திரேலிய பாதுகாப்பு படை அப்போது வெளியிட்டது. இதன் போது அவுஸ்திரேலியாவின் விசேட படைப்பிரிவினர் ஆப்கானிஸ்தானில் 39 பொதுமக்களை கொலை செய்தனர் என்ற அதிர்ச்சி தகவல் விசாரணை மூலம் உறுதியாகியது.

ஆப்கானில் 57 சம்பவங்கள் தொடர்பில் 300க்கும் அதிகமானவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முடிவில் இந்த அறிக்கை வெளியாகியது. 25 படையினர் குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர் அல்லது குற்றங்களிற்கு உதவியுள்ளனர் என விசாரணை அறிக்கை தெரிவித்தது.

2009 முதல் 2013 முதல் சிறைக்கைதிகள், விவசாயிகள், பொதுமக்களை கொலை செய்தமைக்காக பல படைவீரர்களை விசாரணை செய்யவேண்டும் என விசாரணை அறிக்கை பரிந்துரை செய்தது. அவுஸ்திரேலியாவின் விசேட வான்சேவை படையணியை சேர்ந்தவர்களே இந்த போர்க்குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரிய வந்தது.

நம்பகமான போர்க்குற்ற ஆதாரங்கள்:

அதேவேளை ஆப்கானிஸ்தானில் 2005-2016 காலகட்டத்தில் அவுஸ்திரேலிய சிறப்புப் படை வீரர்கள் 39 ஆப்கானிய குடிமக்கள் மற்றும் கைதிகளை சட்டவிரோதமாகக் கொன்றதற்கான “நம்பகமான ஆதாரங்கள்” உள்ளதாக 2020 பிரெரெட்டன் அறிக்கை (Brereton Report) உறுதிப்படுத்தியுள்ளது.

இளம் வீரர்களைக் கொல்வதற்குத் தூண்டும் “ப்ளடிங்” (blooding) கலாச்சாரம் மற்றும் போர்க்குற்றங்களை மூடிமறைத்தல் ஆகியவை இதில் அடங்கும். இதன் முக்கிய குற்றச்சாட்டாக 23 சம்பவங்களில் 39 பேர் சட்டவிரோதமாகக் கொல்லப்பட்டனர். ஆரம்ப கட்ட விசாரணையின் முடிவில் படை வீரர்கள் மீது குற்றவியல் விசாரணை நடத்த பரிந்துரைக்கப்பட்டது.

ஆரம்ப நடவடிக்கையாக அவுஸ்திரேலிய பாதுகாப்புப்படை (ADF) விசாரணைகளைத் தொடர்ந்து, சில அதிகாரிகளின் பதக்கங்கள் பறிக்கப்பட்டு, போர்க் குற்றங்களுக்காகச் சிறப்பு புலனாய்வு அலுவலகம் (OSI) விசாரணை நடத்தியது. மேலும் போர்க் குற்றங்களால் பாதிக்கப்பட்ட ஆப்கான் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க அவுஸ்திரேலிய அரசு திட்டமிட்டது.

அவுஸ்திரேலிய ராணுவ வரலாற்றில் கரும்புள்ளி

இந்த போர்க்குற்ற சம்பவங்கள் அவுஸ்திரேலிய ராணுவத்தின் வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாகக் கருதப்படுகிறது. அவுஸ்திரேலியாவின் மிகப் புகழ்பெற்ற ராணுவ வீரர்களில் ஒருவரான திரு பென் ராபர்ட்ஸ்-ஸ்மித் (Ben Roberts-Smith) மீது குற்றஞ்சாட்டப்பட்டமை பாரிய அவமானத்தை ஏற்படுத்தியது.

ஆப்கானிஸ்தானில் ஆயுதமேந்தாமல் இருந்த கைதிகளைக் கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் 47 வயது ராபர்ட்ஸ்-ஸ்மித், 2009க்கும் 2012க்கும் இடைப்பட்ட காலத்தில் ஆப்கானிஸ்தானில் பணியாற்றியபோது பல்வேறு கொலைக் குற்றங்களைப் புரிந்ததாக நம்பப்படுகிறது. இதனாலேயே திரு ராபர்ட்ஸ்-ஸ்மித் மீது “போர்க்குற்றம்-கொலைக் குற்றம்” என்ற பெயரில் ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. குற்றம் நிரூபிக்கப்பட்டால் திரு ராபர்ட்ஸ்-ஸ்மித்துக்கு அதிகபட்சம் ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.
ஆஸியில் அதி மேன்மைக்குரிய போர் நாயகனாகப் போற்றப்பட்ட திரு ராபர்ட்ஸ்-ஸ்மித் 2011ஆம் ஆண்டில் அவருக்கு விக்டோரியா குரோஸ் (Victoria Cross) பதக்கம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தனித்துவமான போர் குற்ற விசாரணை

இரண்டாம் உலகப் போரின் பின்னர், வியட்நாமில் “Mỹ Lai” மைலாய் படுகொலைக்காக அமெரிக்க இராணுவ லெப்டினன்ட் வில்லியம் காலே 22 தென் வியட்நாம் பொதுமக்களைக் கொன்றதற்காக வழக்குத் தொடரப்பட்டது. அதன்பின் 2003 இல் ஈராக்கில் அபு கிரைப் சிறை துஷ்பிரயோகம், அமெரிக்க வீரர்கள் சார்லஸ் கிரானர், லின்டி இங்கிலாந்து மற்றும் பலர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

2006 இல் 14 வயது ஈராக் சிறுமியை கற்பழித்து கொலை செய்ததற்காகவும், அவரது குடும்பத்தினரைக் கொன்றதற்காகவும் அமெரிக்க துருப்புக்கள் மீது வழக்குத் தொடரப்பட்டது. 2007ல் நான்கு அமெரிக்க பிளாக்வாட்டர் தனியார் இராணுவ ஒப்பந்தக்காரர்களால் 17 ஈராக் குடிமக்கள் கொல்லப்பட்டமைக்கும் வழக்குத் தொடரப்பட்டது.

2010ல் மூன்று ஆப்கானிஸ்தான் குடிமக்களை கொலை செய்ததற்காக அமெரிக்க துருப்புக்கள் தண்டிக்கப்பட்டனர். 2012ல் “காந்தகார் படுகொலை” என்று அழைக்கப்படும் – 16 ஆப்கானிஸ்தான் குடிமக்களை கொலை செய்ததற்காக அமெரிக்க இராணுவ துப்பாக்கி சுடும் ராபர்ட் பேல்ஸ் மீது வழக்குத் தொடரப்பட்டது.

இப் போர்க்குற்ற நிகழ்வுகள் அமெரிக்காவை போரில் பொறுப்புக்கூறலை சர்வதேச போர்க்குற்றவியல் வேண்டியது. ஆனாலும் மேலே பட்டியலிடப்பட்டுள்ள போர்க்குற்ற வழக்குகள் அனைத்தும் அமெரிக்காவால் நிராகரிக்கப்பட்டது.

ஈராக் படையெடுப்பிற்கு ஜார்ஜ் டபிள்யூ. புஷ் நிர்வாக உறுப்பினர்கள் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் சேர்க்கப்பட்ட வழக்கை அமெரிக்கா நிராகரித்து மறுத்துவிட்டது. ஆனால் ஆப்கானிஸ்தானில் நடந்ததாக கூறப்படும் போர் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் முறையில், அவுஸ்திரேலிய அணுகுமுறை அதன் முக்கிய கூட்டாளி நாடுகளிலிருந்து வேறுபட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர். நாட்டின் மிக உயர்ந்த விருதுகள் பெற்ற முன்னாள் வீரர் பென் ராபர்ட்ஸ்-ஸ்மித் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருப்பது, இந்த விசாரணைகளில் ஒரு முக்கிய முன்னேற்றமாகவும், அவுஸ்திரேலிய தனித்துவமான தன்மையை வெளிப்படுத்துவதாகவும் பார்க்கப்படுகிறது.

மேலும் போர்க்குற்ற அறிக்கை வெளியான பின்னர் அவுஸ்திரேலியாவின் அன்றைய சிரேஷ்ட இராணுவ அதிகாரியான ஜெனரல் அங்கஸ் ஜோன் காம்ப்பெல், ஆப்கானிஸ்தானிடம் மன்னிப்புக் கோரிமையும் குறிப்பிடத்தக்கது.

போரின் வெட்கக்கேடான பதிவுகள்

ஆப்கானிஸ்தானில் நடந்ததாக கூறப்படும் போர் சாட்டுக்களையடுத்து நவம்பர் 2020இல் அவுஸ்திரேலியா பல சிறப்புப் படை வீரர்களுக்கு பணிநீக்கம் தொடர்பான அறிவித்தலை அனுப்பியது. இதனை அநநாட்டு ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (ABC) உறுதிப்படுத்தி அறிவித்தது.
இந்த விசாரணைகளின் போது ஒரு போர் வீரக் கலாச்சாரத்தின் வெட்கக்கேடான பதிவுகள் வெளியாகியுள்ளன என அவுஸ்திரேலிய பாதுகாப்பு படையின் (ADF)தலைவர் தெரிவித்தார். இந்த கொலைகள் எவற்றையும் மோதலின் உச்சகட்டத்தின் போது நிகழ்ந்தவைகள் என தெரிவிக்க முடியாதவை என்றும் தெரிவித்தார்.

குற்றவாளியின் நோக்கம் தவறானதாகவோ தெளிவற்றதாகவோ அல்லது குழப்பமானதாகவோயிருந்த தருணத்தில் இந்த குற்றங்கள் நிகழவில்லை என அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் விசாரணைகளை மேற்கொண்ட ஒவ்வொருவரும் யுத்தசட்டங்கள் எவ்வாறு போரிடவேண்டும் என்பதை நன்கு அறிந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளார். சில விசேட படைப்பிரிவினர் சட்டத்தினை தங்கள் கைகளில் எடுத்தனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் நடந்ததாக கூறப்படும் போர் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் முறையில், அவுஸ்திரேலிய அணுகுமுறை அவுஸ்திரேலிய தனித்துவமான தன்மையை வெளிப்படுத்துவதாகவும் பார்க்கப்படுகிறது

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *