பலதும் பத்தும்

புத்தாண்டில் புதிய வீட்டை கையளித்த ஜனாதிபதி – அமோக வரவேற்பளித்த மக்கள்

டித்வா சூறாவளியினால் சேதமடைந்த, அரசாங்கத்தின் இழப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மீள நிர்மாணிக்கப்பட்ட இல்லத்தில் இடம்பெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க  (14) முற்பகல் பங்கேற்றுள்ளார்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு சுபநேரச் சடங்குகளில் இணைந்துகொள்ளும் வகையில், டித்வா சூறாவளியினால் சேதமடைந்த, அநுராதபுரம் – கல்நேவ பிரதேச செயலகப் பிரிவின் மல்பெலிகல கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த எச்.எம். இந்திரஜித் சம்பத் சேனாரத்னவின் புதிய வீட்டிற்குப் பால் காய்ச்சி குடிபுகும் நிகழ்விலும், புத்தாண்டு கொண்டாட்டத்திலும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டார்.

முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டின் கீழ், ஐந்து மாத காலப்பகுதிக்குள் இந்த வீடு கட்டி முடிக்கப்பட்டுள்ளதுடன், கல்நேவ பிரதேச செயலாளர் பிரிவில் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்காக நிர்மாணிக்கப்படும் ஆறு புதிய வீடுகளில் இதுவும் ஒன்றாகும்.

மேலும், இப்பிரதேச செயலாளர் பிரிவில் பகுதியளவில் சேதமடைந்த 66 வீடுகளுக்கான இழப்பீடுகளும் தற்போது வழங்கி முடிக்கப்பட்டுள்ளன.

பிரதேச மக்களுடன் இணைந்து புதிய இல்லத்தில் புத்தாண்டு சடங்குகளில் கலந்துகொண்ட ஜனாதிபதி, அங்கு வருகை தந்திருந்த மக்கள் அனைவருக்கும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

அதேபோன்று, ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பளித்த அப்பகுதி மக்கள், ஜனாதிபதிக்கும் தமது புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த, வர்த்தக, வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க, வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க, வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச, அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுசந்த குமார நவரத்ன உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், அநுராதபுர மாவட்டச் செயலாளர் ரஞ்சித் விமலசூரிய உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் சேனாரத்னவின் குடும்ப உறவினர்கள் உட்பட பிரதேசவாசிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *