இலங்கை

தமிழர்களின் கோபத்தில் அரசியல் செய்ய நினைக்கும் நரித்தனம் – அருட்தந்தை சத்திவேல் குற்றச்சாட்டு

அரசை பாதுகாப்புக்கான சட்டம் கொண்டு வர நினைப்பது இன்னுமொரு சுற்றில் தமிழர்களையும் ஒடுக்குவதற்கே என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“வெடுக்கு நாறி மலையில் உள்ள மத அடையாளங்கள் அனைத்தும் பௌத்த மதத்திற்குரியவை. அதனை பாதுகாக்க வர்த்தமானி அறிவித்தல் வரும்” என புத்தசாசன அமைச்சர் கூறி உள்ளமை சிங்கள பௌத்தர்களுக்கு புது வருட பரிசா? எனக் கேட்பதோடு இது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முகம் கொடுக்கும் அரசியல் தோல்வியை மறைத்து தமிழர்களின் கோபத்தில் அரசியல் செய்ய நினைக்கும் நரித்தனமாகும்.

இதனை வடக்கு- கிழக்கு தமிழர் தாயக அரசியல் கோட்பாட்டினின்று வன்மையாக கண்டிக்கின்றோம்.

கடந்த கால அரசாங்கங்கள் தங்களின் பிழையான பொருளாதார மற்றும் அபிவிருத்தி கொள்கையாலும் ஊழல்,கொள்ளை காரணமாகவும் நாடு பாதாளத்தில் வீழ்ந்தப்போதெல்லாம் ஆட்சியாளர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள இனவாதத்தை கையில் எடுத்தனர்.

அதனை பாதுகாத்துக் கொள்ள சிங்கள பௌத்தத்தை முன்னிலை படுத்தியே மக்களை மயக்கி நாட்டை அழிவு பாதைக்கு இட்டுச் சென்றனர் என்பதே வரலாறு. அதே பாதையிலேயே தற்போது தேசிய மக்கள் சக்தியும் பயணிக்க முனைவது ஆச்சர்யமான விடயமல்ல. இவர்களுக்கு வாக்களித்து ஏமாந்த தமிழர்கள் உணர்கின்ற காலம் இது எனலாம்.

மாற்றத்தை மகுடமாக்கி ஆட்சியை தமதாக்கிய தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலையில் நிலக்கரி ஊழல் காரணமாக மக்கள் முன் மூக்குடைப்பட்டு நிற்கையில் புத்த சாசன அமைச்சர் சிங்கள பௌத்தத்தை சூட்சுமமாக பாவித்து தமிழர்களை போராட்டத்திற்குள் தள்ளி தெற்கினை வடக்கிற்கு எதிராக கிளர்ந்தெழ செய்யவிட்டு இன சமய முறுகல்களில் அரசியல் பாதுகாப்பு தேடுவது நாகரீகமற்ற அரசியலாகும்.

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான தொடர் போராட்டம் இரண்டு வருடங்களுக்கு மேலாக நடந்து வருகின்றது.

நடந்த பிழையினை ஏற்றுக்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்ட தவறிய ஜனாதிபதி அப் போராட்டத்தினை கொச்சைப்படுத்தும் நோக்கில் கருத்து தெரிவித்தமை நாம் அறிவோம்.

தற்போது வவுனியா வெடுக்குநாறி கோயில் வளாகம் அதன் பூமி பிரதேசத்தையும் தொல்லியல் திணைக்களமூடாக சிங்கள பௌத்த ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர முனைவது தமிழர்களின் தாயக கோட்பாட்டை சிதைக்கும் மூலோபாயம் என்றே கூறலாம்.

தமிழ் சைவர்களின் பூர்வீக பக்தி பண்பாட்டுத்தளமான வெடுக்குநாறி மலை பிரதேசத்தை தொல்லியல் திணைக்களம் ஊடாக பறிக்க வர்த்தமானி அறிவித்தல் விடுக்க உள்ளதாக கூறுவது கடந்த கால செயற்பாட்டை தொடர்வதற்கே.

ஆயுத யுத்தம் நடந்து கொண்டிருந்த போது அதற்கான ஆதரவினை அன்றைய அரசாங்கத்திற்கு நேரடியாக வழங்கியதோடு மட்டும் நின்று விடாது இளைஞர்களை திரட்டி கொடுத்து போரை தீவிரப்படுத்தி தமிழர் நிலங்களை ஆக்கிரமித்த மக்கள் விடுதலை முன்னணி தற்போது மக்களின் காணிகளை விடுவிப்பதாக கூறிக்கொண்டு எந்த விதமான சேதாரமும் இன்றி தொல்லியல் திணைக்களம் ஊடாக தமிழர் தாயகத்தை பௌத்த ஆக்கிரமிப்புக்குள் கொண்டு வர துடிப்பது இராணுவத்தின் செயற்பாட்டினை வேறு வகையில் முன்னெடுப்பதற்கே.

பாரம்பரிய கட்சிகளின் அரசியலால் தொடர் ஏமாற்றம் அடைந்த தெற்கு மாற்றத்திற்காக நடத்திய காலிமுகத்திடல் போராட்டத்தினை தமது அரசியல் கட்சியின் வெற்றிக்கு சாதகமாக்கி கொண்ட தேசிய மக்கள் சக்தி புலமைசார் கல்வியாளர்களின் ஆதரவினையும் தமதாக்கிக் கொண்டது.

தற்போது தேசிய மக்கள் சக்தியின் அரசியல் செயல்பாடுகள் காரணமாக அத்தகைய புலமை சார் கல்வியாளர்கள் முன் கதவாலும் பின் கதவாலும் பகிரங்கமாகவும் மறைமுகமாகவும் வெளியேறிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் சிங்கள பௌத்தத்தின் ஆதரவு தளத்தினை தேடி அரசியல் செய்ய நினைப்பதாகவே தோன்றுகின்றது.

அரச பயங்கரவாதத்தையும் அதனை பாதுகாப்பதற்காக பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாப்புக்கான சட்டம் கொண்டு வர நினைப்பது இன்னுமொரு சுற்றில் தமிழர்களையும் ஒடுக்குவதற்கே.

தமிழர்களை பொறுத்தவரையில் தொல்லியல் திணைக்களமும் இன்னுமொரு ஆக்கிரமிப்பு இராணுவமே. அதேபோன்றே புத்த சாசன அமைச்சுமாகும்.

புத்தசாசன அமைச்சர் ஆக்கிரமிப்பு படை தளபதியாகவே செயல்பட முனைகின்றார். இது தொடர்ந்தால் புத்தசாசன அமைச்சருக்கு மார்சல் பட்டமும் கிடைக்கலாம்.

வடக்கு கிழக்கு தமிழர்களின் தேசிய அரசியலுக்கு எதிராகவும் தாயக கோட்பாட்டிற்கு எதிராகவும் தற்போதைய அரசு தீவிர செயல்பாட்டை முன்னெடுப்பது தெளிவு. தெற்கின் அரசியல் செயற்பாடுகள் தமிழ் தேச தாயக கோட்பாட்டினை சிதைக்கும் முனைப்பு காட்டுகையில் தமிழர் தாயக அரசியலில் ஒன்றான கொள்கையோடு செயல்படல் வேண்டும்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடத்துவதற்காக ஆயத்தப்படுகின்ற காலகட்டத்தில் அங்கு ஏற்றுகின்ற தியாகசுடர் உயிர் தியாகிகளுக்கு மட்டுமல்ல. தமிழர் தேசத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற எங்களுக்குமானதே. எமது அரசியல் போராட்டமே இருண்ட தேசத்திலிருந்து எம்மை விடுக்கும் என தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *