சுறுசுறுப்பாக இயங்கிய ஜப்பான்!…. விறுவிறுப்பாக தொடர்ந்த பயணம்!!… தொடர் – 02…. சங்கர சுப்பிரமணியன்


தமிழர் தம்மை தமிழராக உணர்ந்து ஓன்றிணைய வேண்டும். இளங்கோ சிலப்பதிகாரத்தை மலையாளத்தில் எழுதவில்லை தமிழில்தான் எழுதினார் என்பதை உணரவேண்டும். அதைவிட்டு நான் இந்தத் தமிழன் நீ அந்தத் தமிழன் என்று தமிழராகிய நாம் நமக்குள்ளேயே பிளவை ஏற்படுத்திக் கொண்டே செல்வோமானால் எந்த ஒரு செயலையும் ஆக்க பூர்வமாக செய்து முடிக்கமுடியாமல் வேறுபாட்டை விரிவுபடுத்தியே வீணாய்ப் போய்விடுவோம்.
இது நம் இனத்தையும் மொழியையும் அழிக்க நினைப்பவர்களுக்கு சாதகமாக முடியும்.
அப்படி உணர்ந்தால்தான் எங்கிருந்தாலும் தமிழரே என்பதை உணரமுடியும். சான்றாக ஒன்று சொல்வேன். மனதத்துவ முறையில் மனிதர்கள் ஒப்பிடுவதைப் பாருங்கள். தூத்துக்குடியில் ஒரே நேரத்தில் ஆறுபேரைக் கொன்ற ஆறுமுகம் நெருங்கிய உறவாக இருந்தாலும் சொல்ல மாட்டார்கள்.
அதே ஆறுமுகம் குடியரசுத் தலைவரிடம் விருது வாங்கினார் என்றால் தூரத்து உறவு என்றாலும் சொல்வார்கள். நமக்கு ஆறுபேரைக் கொன்ற ஆறுமுகம் என்றாலும் குடியரசுத் தலைவரிடம் விருதுபெற்ற ஆறுமுகம் என்றாலும் உறவு உறவுதான். முதலில் தமிழராகிய நாம் இதை உணரவேண்டும். இதை உணராதவரை தமிழர் வீழ்ச்சிக்கு எவரையும் குற்றம் சொல்லமுடியது.

தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும். விலகிச் சென்ற மனக்குதிரையைத் தடுத்து வழிக்கு கொண்டு வருகிறேன். ஜப்பானிய மொழியின் இலக்கணம் மற்றும் சொற்தொகுதியிலும் ஒற்றுமை நிறையவே உள்ளதால் ஒட்டுநிலை குடும்பத்தில் வருவதை உணரமுடியும். தமிழ் மற்றும் ஜப்பானிய மொழி இரண்டுமே வாக்கிய அமைப்பில் எழுவாய், செயப்படுபொருள் மற்றும் பயனிலை என்ற வரிசையையே பின் பற்றுகின்றன.
சான்றாக, நான் மாலையில் வருகிறேன் ஜப்பானிய மொழியிலும் யூஹடா நி கிமாசு என்ற வரிசையிலேயே சொல்கிறார்கள். மேலும் அம்மா(அம்மா), அண்ணன்(அண்ண), வா(வா), இரு(இரு), மெய்(மி ), தரை(தைரா), நிழல்(நிழ), ஊர்(ஊரு) போன்று எண்ணற்ற சொற்கள் இருமொழிகளிலும் ஒலிப்பிலும் பொருளிலும் ஒத்திருக்கின்றன.
பக்கு பக்கு (வக்கு வக்கு), சர சர(சர சர), கலகல( கர கர) பள பள( பெர பெர) இவை போன்று பல சொற்கள் தமிழைப் போல் இரட்டைக் கிளவியாக இருப்பதையும் காணலாம். இவ்வாறு பல தொடர்புகள் இருப்பினும் இருமொழிகளுக்கும் நேரடித் தொடர்பு இருக்கும் என்ற சொல்ல போதுமான சான்றுகள் இல்லை.
ஆனால் இன்றைய ஜப்பானியரின் முன்னொடிகளான யாயோய் மக்களுக்கும் பழந்தமிழர்களுக்கும் கடல்வழித் தொடர்பு இருந்திருக்கலாம் என்றும் நெருங்கிய நிலத்தொடர்பின் ஊடாகவும் இந்த மொழித்தொடர்பு நிகழ்ந்திருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
கி.மு. 500 முதல் கி.பி. 300 வரையில் 7000 கிலோமீட்டர் தூரம் பயணித்து ஜப்பானில் அரிசி விளைவிக்கும் முறையைக் கற்றுக் கொடுக்கச்சென்ற தமிழர்கள் தமிழ் மொழியையும் கற்றுக் கொடுத்திருக்க வேண்டும். அல்லது ஜப்பானிய மொழி தமிழில் இருந்து சொற்களைப் பெற்றிருக்க வேண்டும் என்பது ஓனோ அவர்களின் வாதமாகும்.
ஜப்பானிய மொழியின் எழுத்துமுறை சீன மொழியை அடிப்படையாகக் கொண்டது.
ஆனால் அப்படி எழுத்துமுறை கலக்கும் முன்பே தமிழ் கலந்துவிட்டது என்பது இவர் கருத்து. இவ்வாறு நன் படித்து அறிந்த செய்தி ஜப்பானுக்கு என்றாவது ஒருநாள் சென்றுவிட வேண்டும் என்ற ஆசையை என்னுள் துளிர்விட வைத்ததது.
அந்த ஆசை நிறைவேறும் காலம் கனிய என் ஜப்பான் பயணம் தொடங்கியது. நாங்கள் பயணித்த சீனா சதர்ன் ஏர்லைன்ஸ் விமானம் மெல்பனில் இருந்து பறப்பட்டது. எங்கும் தரை இறங்காமல் வானில் பறந்த விமானம் சரியாக ஒன்பது மணி நாற்பது நிமிடங்கள் வானில் பறந்தபின் குவாங்சௌ என்ற சீன விமான நிலையத்தில் தரை இறங்கியது.
ஒன்பதே முக்கால் மணிநேர பயணத்தின் அலுப்பு தெரியாமல் விமானமும் உபசரிப்பும் இருந்தது. அதிகமாக நான் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில்தான் பயணித்திருக்கிறேன். காரணம் உபசரிப்பும் விமானமும்தான். சீனா சதர்ன் ஏர்லைன்ஸ் விமானமும் கவனிப்பும் எப்படி இருக்குமோ என்று ஐயப்பாட்டுடன் சென்ற எனக்கு நான் எதிர்பார்ததைவிட சிறப்பாகவே இருந்தது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தைவிட இருக்கை வசதியாகவும் கால் வைக்கும் இடமும் பரந்த இடப்பரப்பு உடையதாக இருந்ததால் பயணத்தை மிகவும் இனிமையாக்கியது. ஒரே ஒருவேறுபாடு. விமானத்துக்குள் விளம்பரம்தான். இருக்கைகளின் மேலுள்ள பொதிகள் வைக்குமிடங்களில் உள்ள மூடும் கதவுகள் அனைத்திலும் கார்களைப் பற்றிய விளம்பரங்களாகவே இருந்தன.

அந்த ஒன்றுதான் நாம் விமானத்தில்தான் இருக்கிறோமா என்ற ஐயப்பாட்டை ஏற்படுத்தியது. ஏனென்றால் முதன்முதலாக விமானத்தினுள் விளம்பரத்தை அப்போதுதான் நான் பார்க்கிறேன். அடுத்ததாக உணவு எப்படி இருக்குமோ என்று கவலையும் இருந்தது. கவலையில் இருந்து விடுபட, முன்பதிவு செய்யும்போதே இந்து சைவ உணவைக் கேட்டிருந்தோம்.
இப்போது மாடசாமி அண்ணாச்சி என்னை நீ ஒரு சரியான பச்சோந்தி என்று சாடுகிறார். காரணம் தெரியவில்லையா? மதம் பிடிக்காது கடவுள் பிடிக்காது என்று சொல்லிவிட்டு இப்போது மட்டும் இந்து சைவ உணவா என்று குத்திக் காட்டுகிறார். அவர் சொல்வதிலும் தப்பொன்றும் இல்லை.
என்ன செய்வது? சீன புத்த உணவு என்றா கேட்க முடியும்? ஒருவேளை மரக்கறி என்று கேட்டு வெறும் இலை தழைகளைக் கொண்டு வந்து கொடுத்தால் என்ன செய்வது? ஆனால் அவர்கள் தந்த உணவு சிங்கப்பூர் விமானத்தில் கொடுக்கப்படும் உணவுக்கு எவ்விதத்திலும் குறைவில்லாமல் இருந்தது. கவனிப்பிலும் எவ்வித குறைபாடும் இல்லை.
விமானத்தில் நாங்கள் மட்டுமே தமிழராக இருந்திருப்போம் என்று எண்ணுகிறேன். அப்படி இல்லாவிட்டாலும் நாங்கள் மட்டுமே இந்திய பின்புலத்தைக் கொண்டவர்களாக இருந்திருப்போம். இதை எப்படிச் சொல்கிறேன் என்றால் விமானத்தில் ஏறியவுடனே நான்காவது வரிசையில் எங்களது இருக்கைகள் இருந்தன.
ஆதலால் மற்றவர்கள் எங்களைக் கடந்துதான் செல்லவேண்டும். அதிகமாக சீனர்களே காணப்பட்டார்கள். வேற்று நாட்டினர் மிகவும் சொற்பமே. விமானம் தரையிறங்க சீன மண்ணை இரண்டாவது முறையாக தொடுகிறேன். சீனா சதர்ன் விமானம் குவாங்சௌ விமான நிலையத்தில் சீன நேரப்படி காலை 5.30 மணிக்கு தரை இறங்கியது.
(தொடரும்….)
![]()