சந்திரோதயம் – ஸ்வீட் சிக்ஸ்டி…. ச.சுந்தரதாஸ்

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தவர் எம் ஜி ஆர். அதே போல் தமிழ் பத்திரிக்கை உலகில் சூப்பர் ஸ்டாராக விளங்கியவர் சி . பா. ஆதித்தனார். இவர் ஆரம்பித்து நடத்திய தினத் தந்தி நாளிதழ் பத்திரிகை உலகில் ஒரு சகாப்தத்தை ஏற்படுத்தியது. எம் ஜி ஆர் படங்களை எப்படி பாமர மக்கள் பார்த்து ரசித்தார்களோ அதே போல் பாமர மக்களும் படித்து செய்திகளை புரிந்து கொள்ள கூடிய விதத்தில் அவரின் தினத் தந்தி சாதனை நிலை நாட்டியது. இவ்வாறு பாமர, சாதாரண மக்களின் வழிகாட்டிகளாக விளங்கிய திரை நட்சத்திரமும், பத்திரிகை நட்சத்திரமும் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொள்ளும் காலமும் அறுபது ஆண்டுகளுக்கு முன் நடந்தேறியது. இந்த மோதலின் ஒரு வெளிப்பாடே எம் ஜி ஆரின் சந்திரோதயம் திரைப் படம்.
எம் ஜி ஆருடன் தொடர்ந்து நடித்து வந்தவர் எம் . ஆர் . ராதா. தொழிலாளி படப்பிடிப்பின் போது
அவர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் தொடர்ந்து எம் ஜி ஆர் படங்களில் நடிக்கும் வாய்ப்பு ராதாவுக்கு கிடைக்கவில்லை.
இந்த மோதலின் பின் ஏற்கனவே அவர்கள் நடித்துக் கொண்டிருந்த தாழம்பூ படத்தில் மட்டுமே ராதா நடித்தார். தேவர் படம் உட்பட வேறு படங்கள் எதுவும் எம் ஜி ஆருடன் அவருக்கு கிட்டவில்லை. இந்த நிலையில் சந்திரோதயம் படத்தில் எம் ஜி ஆருடன் நடிக்கும் திடீர் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அப்படி அவருக்கு கிடைத்த பாத்திரம் ஆதித்தனாரை பிரதிபடுத்துவதாக அமைந்தது. ஆக ஒரு எதிரியை படத்தில் மட்டம் தட்ட தன்னுடன் முரண்டு பிடித்த மற்றொருவரை எம் ஜி ஆர் சாமர்த்தியமாக பயன் படுத்திக் கொண்டார்!
எம் ஜி ஆர், ஆதித்தனார் இருவரும் தி மு கவை சேர்ந்தவர்கள். சினிமா மூலம் ஒருவரும், பத்திரிகை மூலம் ஒருவரும் கட்சியை அடித்தட்டு மக்கள் வரை எடுத்து சென்று சேர்த்தார்கள். இதனால் அறிஞர் அண்ணாவுக்கு இருவரும் வேண்டப்பட்டவர்களாகத் திகழ்ந்தார்கள். ஆனாலும் இருவரிடமும் நீண்ட கால பனிப் போர் நிகழ்ந்த வண்ணமே இருந்தது. எம் ஜி ஆரை கிண்டல் செய்தும், மட்டம் தட்டியும் கார்ட்டூன்கள் தந்தியில் அடிக்கடி வெளிவரும். அவர் நடித்த படங்களும் மோசமாக விமர்சிக்கப் படும்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தான் நடிக்கும் படத்தின் கதையை உருவாக்க எண்ணிய எம் ஜி ஆர் அதற்காக ரவீந்தர் மூலம் ஒரு கதையை உருவாக்கினார். காஜா முகைதீன் என்ற பேர் கொண்ட ரவீந்தர் எம் ஜி ஆரின் அறிமுகம் கிடைத்த நாள் தொட்டு அவருடனேயே சேர்ந்து பயணித்தவர். ரவீந்தர் என்ற பெயரும் எம் ஜி ஆரால் அவருக்கு சூட்டப்பட்டது. எம் ஜி ஆர் நடித்த நாடோடி மன்னன், காலை அரசி போன்ற படங்களுக்கு இவர் வசனம் எழுதியும் உள்ளார். இந்த ரவீந்தர் எம் ஜி ஆரின் வேண்டுகோளுக்கு அமைய ஆதித்தனாரை மட்டம் தட்டி சந்திரோதயம் படத்தின் கதையை எழுதினார்.
தினக்கவர்ச்சி பத்திரிகையின் ஆசிரியர், வெளியீட்டாளர் துரியோதனன். தன் பத்திரிகையின் விற்றபனைக்காக எத்தகைய கீழ்த்தரமான, ஆபாசமான செய்திகளையும், பொய்களையும் பிரசுரிக்கத் தயங்காதவன். படத் தயாரிப்பாளரிடம் பணம் வாங்கி கொண்டு ஒரு நடிகரின் படத்தை தூக்கியும், போட்டி நடிகரின் படத்தை தாக்கியும் பட விமர்சனம் செய்பவன். தன்னிடம் உதவியாளராக பணிபுரியும் பெண்ணை ஆசை நாயகியாகவும் வைத்திருப்பவன். துரியோதனனிடம் தன்னை இழந்தவள் லஷ்மி . துரியோதனனால் ஏமாற்றப்பட்டு, கை விடப்பட்ட அவள் தங்களுக்கு பிறந்த குழந்தையை அந்நியனிடம் வளர்க்கக் கொடுத்து விட்டு கோடீஸ்வரரான பொன்னம்பலத்தின் தாயில்லா பெண்ணான தேவியை வளர்த்து வருகிறாள். தினக்கவர்ச்சியில் நிருபராகப் பணிபுரியும் சந்திரன் சமுதாயத்தில் இடம் பெறும் அக்கிரமங்களை தட்டிக் கேட்கத் தயங்காதவன். ஏழைகளுக்கு குரல் கொடுக்க பின் வாங்காதவன். துரியோதனன் கீழ்த்தரமான முறையில் பத்திரிகை நடத்துவதை அடிக்கடி கண்டிப்பதால் இருவரிடையே அடிக்கடி வாய்த் தர்க்கம் ஏற்படுகிறது. துரியோதனனின் முகத்திரையை கிழித்தெரிய படுபடுகிறான் சந்திரன்.
ரவீந்திரன் எழுதிய இந்தக் கதையுடன் ஆங்கிலத்தில் வெளியான It happened one night
என்ற படத்தின் ஒரு பகுதியையும் சேர்த்து முழு கதையாகியிருந்தார்கள். ஆனாலும் படத்தின் முழுக் கதையும் பத்திரிகை அதிபரை தாக்குவதாகவே அமைந்தது. ரவீந்தர் எழுதிய இந்த கதைக்கு உயிர் கொடுப்பவர் எம் .ஆர் . ராதா. துரியோதனனாக வரும் அவர் நிதானமாக ஆனால் தன் இயல்பு கெடாமல் நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். பத்திரிகை என்றால் ஐம்பது வீதம் செக்ஸ் , ஐம்பது வீதம் கிரைம் இருக்க வேண்டும் என்று சொல்வதும், ஆபிஸ் அறையில் பெண் உதவியாளரை அணைத்தபடி வா தமிழ் தொண்டு செய்யலாம் என்று கூறுவதும் ரசிகர்களின் கரகோசத்தை பெற்று கொண்டது. அவரோடு எம் ஜி ஆர் வாதாடும் காட்சிகளும் ஜோர்.
மனோரமாவிடம் நாகேஷ் அடி வாங்கி வருவதும், அவருக்கு எம் ஜி ஆர் லெமென் ஜூஸ் கொடுத்து ஆசுவாசப் படுத்துவதும் , தொடர்ந்து வரும் காசிக்கு போகும் சன்யாசி உன் குடும்பம் என்னாகும் நீ யோசி பாடலும் சூப்பர். நம்பியார், அசோகன், பண்டரிபாய் , புஷ்பமாலா , எஸ். என். லஷ்மி, திருப்பதிசாமி ஆகியோரும் படத்தில் உள்ளனர்.
படத்தில் எம் ஜி ஆரின் நடிப்பு இடல்பாக இருந்தது . ஜெயலலிதா ஹீரோயின். இப்படியும் ஒரு பெண்ணை வளர்ப்பார்களா என்று எண்ண வைக்கும் பலவீனமான பாத்திரம். அவரின் பாத்திரம் அசட்டுத்தனமாக இருந்தது. ஆனால் தன் நடிப்பால் ஈடு செய்கிறார் அவர். புது நடிகை பாரதிக்கு எம் ஜி ஆருடன் இரண்டாவது படம். ஆனால் அவரின் பாத்திரமும் வீணடிக்கப் பட்டுள்ளது. படத்தில் வில்லனாக வரும் நம்பியாரின் கையாள் குலதெய்வம் ராஜகோபால். மாடப்புறா படப்பிடிப்பின் போது எம் ஜி ஆருடன் முரண்பட்டு அவருடன் நடிக்கும் வாய்ப்பை இழந்த ராஜகோபாலுக்கு இந்தப் படத்தில் எம் ஜி ஆருடன் மீண்டும் நடிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. M G R is generous !
ஜி .என் . வேலுமணி தயாரித்த படம் என்றால் மியூசிக் சூப்பர் என்பது உத்தரவாதம். இந்தப் படத்திலும் அது உறுதியானது. பாரதிதாசனின் புதியதோர் உலகம் செய்வோம், வாலியின் எங்கிருந்தோ ஆசைகள் எண்ணத்திலே ஓசைகள், சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ, புத்தன் யேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக, கெட்டி மேளம் கொட்டுற கல்யாணம் பாடல்கள் எம் எஸ் விஸ்வநாதன் இசையில் உச்சம் தொட்டன . இன்றும் இனிமையாக நெஞ்சில் நிலைத்துள்ளன!
படத்தின் வசனங்களை ஏ .கே . வில்வம் எழுதினார். ஒளிப்பதிவு தம்பு. வேலுமணி படம் என்றல் கே. சங்கர் இயக்கம் என்பது இப் படத்திலும் தொடர்ந்தது. பன்னிரெண்டு நாட்களில் எம் ஜி ஆர் சம்பந்தப் பட்ட நான்கு பாடல்கள், மூன்று சண்டைகள் மற்றும் காட்சிகளை படமாக்கினர் சங்கர். எம் ஜி ஆர் மனசறிந்து படத்தை இயக்கியிருந்தார்., உயிருடன் இருக்கும் ஒருவரை உருவகப் படுத்தி படம் எடுக்கக் கூடாதென்பது சென்சார் விதி. ஆனால் அதையும் சமாளித்து எப்படியோ படம் வந்தது. ஆனாலும் சுமாரான வரவேற்பையே பெற்றது.
1967ல் அண்ணா அமைக்கவிருந்த மந்திரிசபை லிஸ்ட் எம் . ஆர். ராதாவால் சுடப்பட்டு
மருத்துவமனையில் இருந்த எம் ஜி ஆரிடம் காண்பிக்கப்பட்டது. அதில் ஆதித்தனார் பேர் இருந்தது கண்டு எம் ஜி ஆர் வெகுண்டு விட்டார். பின்னர் ஆதித்தனாருக்கு சபாநாயகர் பதவி அண்ணாவால் வழங்கப் பட்டது. அதன் பின்னரும் எம் ஜி ஆர், ஆதித்தனார் போர் தொடர்ந்தது. 1972ல் வெளியான இதய வீணை படத்துக்கு பிறகு தான் நடிக்கும் பட விளம்பரம் தினத்தந்தியில் வரக் கூடாதென எம் ஜி ஆர் தடா போட்டார். அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து எம் ஜி ஆர், ஆதித்தனார் இடையில் உறவு சீரானது. அதனைத் தொடர்ந்து எம் ஜி ஆர் நடித்த ஊருக்கு உழைப்பவன் பட விளம்பரம் 1976ல் தந்தியில் வெளிவந்தது. அதற்கு அடுத்த ஆண்டு எம் ஜி ஆர் தமிழ் நாட்டின் முதல்வர் ஆன செய்தியும் தினத் தந்தியில் வெளியானது!
![]()