விருது பெற்ற ஈழத்து நாடகாசிரியர் ஷக்தி!

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஷக்தி என அனைவராலும் அழைக்கப்படும் ஆஸ்திரேலிய நாடகாசிரியர் எஸ். ஷக்தீதரன் (S. Shakthidharan), நாடகத் துறைக்கான $US175,000 ( A$250,000) மதிப்புடைய Windham-Campbell Prize விருதை வென்றுள்ளார்.
இந்த சர்வதேச விருது ஒவ்வொரு ஆண்டும் கற்பனை இலக்கியம், கட்டுரை, கவிதை மற்றும் நாடகம் போன்ற துறைகளில் சிறந்த படைப்புகளை வழங்கிய படைப்பாளிகளுக்கு வழங்கப்படுகிறது. இதன் தெரிவிற்கு சாதனையாளர்கள் ரகசியமாகவே பரிந்துரைக்கப்படுகிறார்கள்; அவர்கள் நேரடியாக விண்ணப்பிக்க முடியாது.

இலங்கைத் தமிழர்களின் புலம்பெயர் அனுபவங்களைப் பல தலைமுறைகளைக் கடந்து ஆராயும் அவரது ஆழமான மற்றும் விரிவான நாடகங்களுக்காக ஷக்தி இந்த விருதை பெற்றுள்ளார். அவற்றில், Counting and Cracking என்ற அவரது முதல் நாடகம் முக்கியமானதாகும். இந்த நாடகம், கலை இயக்குநர் Eamon Flack உடன் இணைந்து எழுதப்பட்டது; மேலும் இந்த நாடகம் 2020ஆம் ஆண்டு $100,000 மதிப்புள்ள நடகத்திற்கான விக்டோரிய மாநில விருதையும் வென்றது.
சில வாரங்களுக்கு முன்பு, இலங்கையில் ஒரு தாயும் மகனும் போரால் பிரிக்கப்பட்ட கதை சொல்லும் தனது முதல் திரைப்படமான The Laugh of Lakshmiஇன் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தபோது, மின்னஞ்சல் மூலம் இந்த வெற்றியை அவர் அறிந்துகொண்டார்.
கடந்த ஆண்டு, ஷக்தி தனது முதல் நினைவுக்குறிப்பு நூலான Gather Up Your World in One Long Breathயையும் வெளியிட்டார்.
Windham-Campbell விருது நடுவர் குழு, “காலத்தையும் இடத்தையும் கடந்து பயணிக்கும், ஆழமான உணர்ச்சியில் வேரூன்றிய அரிதான கதை சொல்லுபவர்” என்று ஷக்தியைப் பாராட்டியுள்ளது.
இவரின் வெற்றி புலம்பெயர் சமூகம் அனைத்தும் கொண்டாட வேண்டிய வெற்றியாகும்!
![]()
