இலங்கை

ஐ.எஸ். முகாம்களில் தற்கொலைத் தாக்குதல் பயிற்சி பெற்ற 300 க்கும் மேற்பட்டோரால் நாட்டுக்கு ஆபத்து வரலாம்!

தற்கொலைத் தாக்குதல் எண்ணங்களுடன் ஐ.எஸ். முகாம்களில் பயிற்சி பெற்ற 300க்கும் மேற்பட்டோர் நாட்டுக்குள் உலாவுகின்றனர் என்றும் இவர்களை கண்டுபிடித்து புனர்வாழ்வுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை போன்று இன்னுமொரு தாக்குதல் நாட்டில் நடக்கலாம் என்றும் பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பிவித்துறு ஹெல உறுமய கட்சித் தலைமையகத்தில்  நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

எனது புத்தகமானது ராஜபக்‌ஷக்களை காப்பாற்றும் முயற்சி என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் இந்தப் புத்தகம் ஊடாக இராணுவத்தினரையே நாங்கள் காப்பாற்றியுள்ளோம். இராணுவத்தினரை காப்பாற்றும் முயற்சியின் இன்னுமொரு பலனால் ராஜபக்‌ஷக்கள் தப்பிப்பது வேறு விடயமாகும். ராஜபக்ஷக்கள் தப்பிப்பார்கள் என்பதற்காக இராணுவத்தினரை காப்பாற்றும் வேலையை கைவிட்டால் அது தேசத் துரோக செயற்படாகும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மூவரடங்கிய நீதிமன்றங்கள் ஏழு அமைக்கப்பட்டுள்ளன. கேகாலை, புத்தளம், மட்டக்களப்பு, கொழும்பு ஆகிய இடங்களில் இந்த நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் நௌபர் மௌலவி என்ற இயக்கத்தின் பிரதித் தலைவர் உள்ளிட்ட 26 பேருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளன. ஆனால் இவர்களுக்கு தண்டனை வழங்குவதன் ஊடாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வுக் கிடைக்கப்போவதில்லை. இப்போதும் அவர்களின் அடிப்படைவாத கொள்கையை பயின்ற தற்கொலை செய்யுமளவுக்கு மனதை தயார்படுத்திக்கொண்டுள்ள மற்றும் ஐஎஸ் முகாம்களில் பயிற்சி பெற்ற 300க்கும் மேற்பட்டோர் எமக்கு மத்தியில் நடமாடுகின்றனர். இவர்களை கண்டுபிடிக்க வேண்டும்.

இந்நிலையில் இவர்களுக்கு சிறைத்தண்டனை வழங்க வேண்டும் என்று கூறவில்லை. இவர்கள் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றே கோருகின்றோம். இறுதி நேரம் வரையில் எமது இராணுவத்தினரை கொலை செய்வதற்காக ஆயுதங்களுடன் இருந்து தோல்வியை தழுவிக்கொண்டு சரணடைந்த 11,600 விடுதலைப் புலிகளுக்கு நாங்கள் தண்டனை வழங்கவில்லை. அவர்கள் புனர்வாழ்வுக்கே உட்படுத்தப்பட்டனர். இதனால்தான் 2019 மே 19ஆம் திகதிக்கு பின்னர் விடுதலைப் புலிகளின் எந்வொரு வெடிச் சத்தமும் கேட்கவில்லை. இவ்வாறு நாங்கள் பரிசோதித்து பார்த்த முறைமைகள் உள்ளன. ஆனால் அது முஸ்லிம் அடிப்படைவாதிகள் விடயத்தில் பயன்படுத்தப்படவில்லை.

அதேபோன்று சஹ்ரான், சைனி, நெளபர், தௌபீக் ஆகியோர் அரசாங்கத்தினால் பதிவு செய்யப்பட்ட இஸ்லாம் மத்ராசாக்களில் ஆசிரியர்களாக இருந்துள்ளனர். பயங்கரவாதிகள் ஆசிரியர்களாக இருந்துள்ளனர். இதனால் இவற்றை கட்டுப்படுத்துவதையே செய்ய வேண்டும். இன்னும் சஹ்ரான்கள் உருவாகும் விடயங்களை வைத்துவிட்டு நாங்கள் சஹ்ரானின் பின்னால் ஓடுகின்றோம்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி தொடர்பில் ஆரம்பத்தில் இருந்து ஒவ்வொருவரின் பெயர்கள் கூறப்பட்டன. அபுஹிம், சொனிக் சொனிக், ஜமீல் மொஹமட், பிள்ளையான், சுரேஷ் சலே, கோதபய ராஜபக்‌ஷ, இந்தியா, அமெரிக்கா என்றெல்லாம் ஒவ்வொரு பெயராக கூறப்பட்டன.

நினைத்தவாறு கூறாமல் சரியான சாட்சிகள் இருக்க வேண்டும். பிரதான சூத்திரதாரி கலந்துரையாடலை முடிவுக்கு கொண்டுவந்து தண்டனை வழங்கும் செயற்பாட்டை நீதிமன்றம் பார்த்துக்கொள்ளும்.

ஆனால் மீண்டும் இவ்வாறான தாக்குதல் நாட்டில் நடக்கக்கூடாது. இந்த அடிப்படைவாதத்தை கட்டுப்படுத்தல் மற்றும் புனர்வாழ்வளித்தல் ஆகிய இரண்டு விடயங்களையும் செய்யாவிட்டால் கூடிய விரைவில் எதிர்காலத்தில் இன்னுமொரு வெடிப்பு இடம்பெறும். இந்த விடயம் தொடர்பில் ஆழமாக ஆராய்ந்தவர் என்ற ரீதியில் இந்த எச்சரிக்கையை விடுக்கின்றேன். இதனால் வெடிக்கவுள்ள எரிமலை மீதிருந்து செய்யும் நாடகத்தை நிறுத்தி உண்மையான பிரச்சினை தொடர்பான கலந்துரையாடலை செய்வோம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *