முச்சந்தி

விவசாயிகளுக்கு பெரும் நெருக்கடி இராணுவம் உடனடியாக வெளியேற வேண்டும்

விவசாயிகள் நெல் சந்தைப்படுத்தல் சபையினூடாக தமது நெல்லை சந்தைப்படுத்துவதற்கு பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வரும் நிலையில்,தமிழ் மக்களிடமிருந்து ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளில் உற்பத்தி செய்யப்பட்ட தமது நெல்லினை இராணுவத்தினர் அடாவடியாக நெல்சந்தைப்படுத்தல் சபையூடாக சந்தைப்படுத்தல் செய்துள்ளதாக வன்னிமாவட்ட எம்.பி.துரைராசா ரவிகரன் குற்றம்சாட்டினார்

முல்லைத்தீவு, நீராவிப்பிட்டிப் பகுதியில் அமைந்துள்ள நெல்சந்தைப்படுத்தல் சபைக்குரிய நெற்களஞ்சியசாலையில் 24ஆம் திகதி விவசாயிகள் தமது நெல்லினை சந்தைப்படுத்துவதற்காக காத்திருந்தபோது அடாவடியாக அங்கு நுழைந்த இராணுவத்தினர் இவ்வாறு தமது 70 மூட்டைகளுக்கும் மேற்பட்ட நெல்லினை சந்தைப்படுத்தல் செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் இராணுவத்தின் இத்தகைய அடாவடிச் செயற்பாட்டை வன்மையாக கண்டித்துள்ள அவர் , முல்லைத்தீவு உட்பட வடக்கு கிழக்கெங்குமுள்ள இராணுவத்தினர் உடனடியாக வெளியேறவேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

இவ்விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் நெல்சந்தைப்படுத்தல் சபைக்குரிய நெற்களஞ்சியசாலைகளில் ஏற்கனவே 2025சிறுபோகத்தில் கொள்வனவுசெய்யப்பட்ட நெல்மூட்டைகள் அகற்றப்படாமல் நிறைந்திருப்பதால் தமக்கு களஞ்சியசாலை வசதி இல்லாத சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், எனவே விவசாயிகளிடமிருந்து 2025 – 2026ஆம் ஆண்டுகளுக்குரிய பெரும்போகத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்லினை கொள்வனவு செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துவந்தது.

இந்நிலையில் விவசாயிகளிடமிருந்து நெற்கொள்வனவு உடனடியாக ஆரம்பிக்கப்படவேண்டுமென பாராளுமன்றில் பேசியதுடன், அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்கூட்டங்களிலும் வலியுறுத்தினேன். அத்தோடு ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டங்களிலும் விவசாயிகளிடமிருந்து உடனடியாக நெற்கொள்வனவு மேற்கொள்ளப்படவேண்டுமென தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தேன்.

அதற்கமைய தற்போது 14வீதம் மற்றும் 14வீதத்திற்கும் குறைந்த ஈரப்பதனுடைய நெல்லை, ஒரு விவசாயியிடமிருந்து 2500கிலோ என்ற மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நெல் சந்தைப்படுத்தல் சபை நெற்கொள்வனவை ஆரம்பித்துள்ளது.இந்நிலையில் பெருத்த சிரமங்களுக்கு மத்தியில் நெல் மூடைகள் ஏற்றப்பட்ட உழவியந்திரங்களை வரிசையில் நிறுத்தி விவசாயிகள் நெல்லை சந்தைப்படுத்துவதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

இவ்வாறு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நெற்கொள்வனவு இடம்பெறுவதால் தமது மிகுதி நெல்லினை குறைந்தவிலையில் தனியார் கொள்வனவாளர்களுக்கு விற்பனைசெய்யவேண்டியநிலை காணப்படுவதாகவும் விவசாயிகள் எம்மிடம் முறையீடுகளையும் செய்துவருகின்றனர்.

இத்தகைய சூழலில் இவ்வாறு விவசாயிகள் தமது நெல்லினை சந்தைப்படுத்துவதில் பாரிய இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துக்கொண்டிருக்கும்போது, இராணுவத்தினர் எமது பகுதிகளில் அத்துமீறி கையகப்படுத்தி வைத்திருக்கின்ற எமது தமிழ் மக்களின் காணிகளில் நெற்பயிற்செய்கை மேற்கொண்டு அந்த நெல்லினை நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு விற்பனைசெய்கின்ற சம்பவங்களும் இடம்பெற்றுவருகின்றன.

குறிப்பாக 24.02.2026 செவ்வாய்கிழமை இரவு 7.30மணியளவில் முல்லைத்தீவு நீராவிப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள நெல் சந்தைப்படுத்தல் சபைக்குரிய நெற்களஞ்சியசாலையில் இவ்வாறு இராணுவத்தினரால் 70மூட்டைகளுக்கும் மேற்பட்ட நெல்லினை சந்தைப்படுத்தல் செய்துள்ளனர். ஏற்கனவே எமது விவசாயிகள் தமது நெல்லினை சந்தைப்படுத்தல் செய்வதற்கென வீதியில் நெல்மூட்டைகள் ஏற்றப்பட்ட உழவியந்திரங்களை நிறுத்தி காத்துக்கொண்டிருக்கும்போது இராணுவத்தினர் இவ்வாறு அடாவடித்தனமாக நுழைந்து இராணுவ வாகனத்தில் ஏற்றிவந்த நெல்லை விற்பனை செய்துவிட்டுச் சென்றதாக விவசாயிகளால் எமக்கு முறையீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் நெல் சந்தைப்படுத்தல் சபைக்குரிய முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர் இராணுவத்தினரிடமிருந்து நெற்கொள்ளவைச் செய்வதற்கு மறுப்புத் தெரிவித்திருந்த நிலையிலும், நெல் சந்தைப்படுத்தல் சபையின் வடமாகாண பொறுப்பதிகாரியின் உத்தரவின்பேரிலேயே நெல் சந்தைப்படுத்தல் சபையினால் நெற்கொள்வனவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் எமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

எமது விவசாயிகள் தமது நெல்லை சந்தைப்படுத்துவதற்கு பலத்த நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துவருகின்ற நிலையில், இராணுவத்தினர் இவ்வாறு எமது விவசாயிளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்ற விதத்தில் அடாவடித் தனமாகச் செயற்படுவதை வன்மையாக் கண்டிக்கின்றேன்.

இராணுவத்தினர் எமது தமிழ் மக்களின் பயிர்ச்செய்கை நிலங்களையும் ஆக்கிரமித்து அங்கு பயிர்ச்செய்கை மேற்கொண்டு, இவ்வாறு எமது விவசாயிகளின் வாழ்வாதரத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்ற விதத்திலும் செயற்படுகின்றனர்.

இதுதவிர வடக்கு கிழக்கில் அதிகரித்துள்ள இராணுவப் பிரசன்னத்தால் எமது தமிழ் மக்கள் ஒருவித அச்சுறுத்தல் நிலையுடனே வாழ்ந்துவருகின்றனர்.எனவேதான் வடக்கு, கிழக்கில் அதிகரித்துக்காணப்படுகின்ற பாதுகாப்பு படைகளை இங்கிருந்து அகற்றுமாறு எம்மால் தொடர்ச்சியாக ஆட்சியாளர்களிடம் வலியுறுத்தப்படுகின்றது.

அதிகரித்துள்ள இராணுவத்தினரின் பிரசன்னத்தால் எமது மக்கள் அச்சுறுத்தல் நிலையுடன் தொடர்ந்தும் தமது வாழ்வைக் கழிக்கமுடியாது. இராணுவத்தினரால் இவ்வாறு எமது மக்கள் தொடர்ச்சியாக வாழ்வாதாரப் பாதிப்புக்களுக்கும் முகங்கொடுக்கமுடியாது.

எனவே இராணுவத்தினர் எமது மக்களின் நிலங்களை ஆக்கிரமித்துக்கொண்டிருந்து எமது மக்களுக்கு நெருக்கடிகளை கொடுத்துக்கொண்டிருக்காமல் இங்கிருந்து உடனடியாக வெளியேறவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button