முச்சந்தி

ஹாங்காங்கில் பத்திரிகை சுதந்திரம் மறுப்பு: ஊடக ஆளுமை ஜிம்மி லாய்க்கு சிறை தண்டனை!… ஐங்கரன் விக்கினேஸ்வரா

(தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் 2020 ஆகஸ்ட் முதல் சிறையில் அடைக்கப்பட்ட ஜிம்மி லாய் மீது தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணை ஐந்து ஆண்டுகள் நீடித்தன. தாம் சீனாவின் கடுமையான துன்புறுத்தலுக்கு ஆளாகிய ஓர் அரசியல் கைதி என்று லாய் நீதிமன்றத்தில் தெரிவித்தார்)

ஹாங்காங்கின் புகழ்பெற்ற செய்தி நிறுவனமான ஆப்பிள் டெய்லி (Apple Daily) என்ற செய்தி நிறுவனத்தை 78 வயதான ஜிம்மி லாய் (Jimmy Lai) பல ஆண்டுகளுக்கு முன்பாக நிறுவினார். நீண்ட காலமாக ஜனநாயக ஆதரவு ஊடகமாக லாய் அதனை தொடர்ந்து நடத்தி வந்தார். மேலும் இந்த ஊடகத்தின் வாயிலாக சீனாவின் மனித உரிமை மீறல்களை கடுமையாக விமர்சித்தும் வந்தார்.

2019ல் நடந்த மிகப்பெரிய ஜனநாயக ஆதரவு போராட்டங்களுக்கு பின், ஹாங்காங்கில் புதிய தேசிய பாதுகாப்பு சட்டம் ஒன்றை சீனா கொண்டு வந்தது. நாட்டுக்கு எதிராக செயல்பட்டதாக, இந்த சட்டத்தின் கீழ், 2020 ஆகஸ்டில் லாய் கைது செய்யப்பட்டார். தற்போது வழக்கின் முடிவில் ஜிம்மி லாய்க்கு, இருபது ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

20ஆண்டு சிறை தண்டனை:

சீனாவின் சுயாட்சி பிராந்தியமாக ஹாங்காங் செயல்பட்டு வருகிறது. ஆங்கிலேயர் காலனியாதிக்கத்தில் இருந்து வந்த ஹாங்காங், 1997ஆம் ஆண்டில் சீனாவிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. அப்போது, ஒரே நாடு, இரண்டு ஆட்சி முறை என்ற கொள்கையின் கீழ் ஹாங்காங்கை ஆட்சி செய்ய சீனா ஒப்புக் கொண்டது. அதன்படி, சீனாவில் வசிக்கும் மக்களுக்கு இல்லாத உரிமைகள் ஹாங்காங் வாசிகளுக்குக் கிடைக்கும் என்று கூறப்பட்டது.

எனினும், ஜனநாயக சீர்திருத்தங்களை வலியுறுத்தி அந்தப் பிராந்தியத்தில் நடைபெற்ற போராட்டத்தை அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்கியது. மேலும், சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சீன நாடாளுமன்றம் கடந்த 2020ஆம் ஆண்டு நிறைவேற்றியது. அந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி, ஏராளமான ஜனநாயக ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

அதன் ஒரு பகுதியாக, ஜனநாயகத்துக்கு ஆதரவான கருத்துகளை வெளியிட்டு வந்த ஹாங்காங்கின் ‘ஆப்பிள் டெய்லி’ நாளிதழ் நிறுவனரான ஜிம்மி லாய் மீது சீன அரசு பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி சிறையில் அடைத்தது. அரசின் நெருக்கடி காரணமாக அந்த நாளிதழ் பின்னர் நிறுத்தப்பட்டது. தற்போது ஹாங்காங் ஊடக அதிபர் ஜிம்மி லாய்க்கு 20 ஆண்டு சிறை தண்டனை மூலம் சீன அரசு ஜனநாயக உரிமைகளை மீறியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஹாங்காங்கின் ஜனநாயக ஆதரவு ஊடக அதிபரும், சீன அரசு குறித்த தீவிர விமர்சகருமான ஜிம்மி லாய்க்கு, தேசிய பாதுகாப்பு தொடர்பான வழக்கின் தீர்ப்பு அண்மையில் வழங்கப்பட்டது. இருபது ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளதை மனித உரிமை அமைப்புகள் கடுமையாக எதிர்த்துள்ளன.

வெளிநாட்டு சக்திகளுடன் சதி:

சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சீன நாடாளுமன்றம் 2020-ஆம் ஆண்டு நிறைவேற்றியது. அந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி, ஏராளமான ஜனநாயக ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர்.அதன் ஒரு பகுதியாக, ஜனநாயகத்துக்கு ஆதரவான கருத்துகளை வெளியிட்டு வந்த ஹாங்காங்கின் ‘ஆப்பிள் டெய்லி’ நாளிதழ் நிறுவனரான ஜிம் லாய் மீது சீன அரசு பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி சிறையில் அடைத்தது.

ஜிம்மி லாய் வெளிநாட்டு சக்திகளுடன் சதி செய்து தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தினார் என்றும் சீன அரசை வீழ்த்த அமெரிக்காவுக்கு தொடர்ந்து அழைப்பு விடுத்தார் என்றும் தெரிவிக்கப்பட்டு அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

2020 ஆகஸ்ட் முதல் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பெரும்பாலும் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்ட அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்திருந்த நிலையில், தற்போது ஜிம்மி லாய்க்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு சட்டம்:

தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் 2020 ஆகஸ்ட் முதல் அவர் சிறையில் அடைக்கப்பட்ட ஜிம்மி லாய் மீது தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணை கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் நீடித்தன. தாம் சீனாவின் கடுமையான துன்புறுத்தலுக்கு ஆளாகிய ஓர் அரசியல் கைதி என்று லாய் நீதிமன்றத்தில் தெரிவித்தார். வெளிநாட்டு கூட்டு சதியில் ஈடுபட்டதாகவும் தேசத் துரோக வெளியீடுகளை வெளியிட்டதாகவும் இவரது கைது நடவடிக்கை அப்பட்டமான பொய் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் தனது அரசியல் சுதந்திரத்தை நசுக்கும் செயல் என அவர் குறிப்பிட்டார்.

2019ல் ஜனநாயக ஆதரவான ஆர்ப்பாட்டங்கள் மோசமான வன்முறைகளில் முடிந்ததால் பெய்ஜிங், தேசியப் பாதுகாப்பு சட்டத்தை ஹாங்காங்கில் அறிமுகப்படுத்தியது. அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள், ஹாங்காங் அல்லது சீனாவுக்கு எதிராக தடைகள், விரோத நடவடிக்கைகள் விதிக்க வேண்டும் என்றும், வெளிநாட்டுச் சதிக்கு 78 வயது லாய் மூளையாகச் செயல்பட்டதாக சீன அரசு குற்றம்சாட்டியது.

மேலும் அவர் சீன அரசாங்கத்திற்கு எதிரான அதிருப்தி வெளியீடுகளை வெளியிட்டு தேசத் துரோகத்தில் ஈடுபட்டதாகவும் வழக்கறிஞர்கள் குறிப்பிட்டனர். தீர்ப்பு வழங்கிய நீதிபதி எஸ்தர் டோ, சீனா மீது லாய்க்கு பல ஆண்டுகளாக வெறுப்பு இருந்ததில் சந்தேகமில்லை என்றார்.

சீன தேசிய பாதுகாப்பு கொள்கை:

இந்த விவகாரத்தில் தற்போது ஹாங்காங்கின் தேசியப் பாதுகாப்புக் குறித்துச் சீனா கொள்கை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. ஹாங்காங்கில் தேசியப் பாதுகாப்பு விவகாரங்களைப் பொறுத்தவரை, பெய்ஜிங்கிற்கு அடிப்படைப் பொறுப்பு இருப்பதாகச் சீனா வலியுறுத்தி வருகிறது.

ஹாங்காங், தேசியப் பாதுகாப்பைக் கட்டிக்காக்க அதன் சட்டத்துறைக் கட்டமைப்பைத் தொடர்ந்து மேம்படுத்தும் என்று சீன அரசின் அறிக்கை தெரிவிக்கிறது.
ஹாங்காங் அரசுத் தலைவர் ஜான் லீ, இந்த வெள்ளை அறிக்கையை வரவேற்றார். தேசியப் பாதுகாப்புக்கு ஊறுவிளைவிக்கும் நடவடிக்கைகளைக் கையாள அதிகாரிகள் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

ஆனால் சீனா நடைமுறைப்படுத்திய சட்டத்தின்கீழ் லாய்க்கு விதிக்கப்பட்ட தண்டனை, ஆகக் கடுமையானதாகக் கருதப்படுகிறது. அது அனைத்துலக அளவில் கடும் குறைகூறலுக்கு உள்ளானது. அமெரிக்கா, பிரிட்டன், தைவான், ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், மனித உரிமைக் குழுக்கள் முதலியவை சீன அரசின் நிலைப்பாட்டை கடுமையாக சாடினர்.

ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் மனித உரிமைப் பிரிவுத் தலைவர் வோல்கர் டுர்க், ஜிம்மி லாய்க்கு எதிரான தண்டனையைக் கடுமையாகக் கண்டித்தார். அனைத்துலகச் சட்டத்துடன் அது பொருந்திப் போகவில்லை என்றும் கூறினார்.

ஹாங்காங்கின் ஜனநாயக உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல்கொடுத்த ஆப்பிள் டெய்லி நாளிதழின் நிறுவனர் ஜிம்மி லாயும் அவரது சகாக்களும் சீனாவின் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தண்டிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை ஹாங்காங்கின் ஜனநாயக சுதந்திர விடுதலை ஒரு நெடிய போராட்டமாகத்தான் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் கருத்து வேறுபாடுகளையும் ஜனநாயக ஆதரவுக் குரல்களையும் ஒடுக்குவதற்கு தேசியப் பாதுகாப்புச் சட்டம் பயன்படுத்தப்படுவதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

ஹாங்காங் ஜனநாயக உரிமை:

சீனாவில் நடைமுறைப் படுத்தப்பட்டுவரும் தேசியப் பாதுகாப்புச் சட்டமானது, அந்நியர்களுடன் சேர்ந்து நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிக்க முயல்பவர்களைப் பத்தாண்டுகள் முதல் ஆயுட்காலம் வரையிலும் சிறையில் அடைக்க வகை செய்கிறது. ஹாங்காங்கில் தொடர்ந்து எழுப்பப்படும் தன்னாட்சி அதிகாரத்துக்கான குரல்களை அடக்கி ஒடுக்க வேண்டும் என்பதே இந்தச் சட்டத்தின் பிரதான நோக்கம். இதன் காரணமாக ஜிம்மி லாயும் ஹாங்காங் தன்னாட்சிக்குப் போராடும் விடுதலைச் செயல்பாட்டாளர்களும் அமெரிக்க ஆதரவுடன் கூட்டுச்சதியில் ஈடுபட்டதாகத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குற்றஞ் சாட்டப்பட்டனர்.

2019இல் கருத்துரிமையை முடக்குவதற்கு சீன அரசு முயன்ற அதே நேரத்தில், பத்திரிகைச் சுதந்திரத்துக்கு ஆதரவாக ஹாங்காங் மக்கள் திரண்டெழுந்து நின்றனர். அக்காலத்திலேயே ஜிம்மி லாய் கைதானார். அவர் கைதாகி அடுத்த நாள் அதிகாலையிலேயே மக்கள் வரிசையில் காத்திருந்து ‘ஆப்பிள் டெய்லி’ நாளேட்டை வாங்கிச் சென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கூடுதல் பிரதிகளை வாங்கி மற்றவர்களுக்கு விநியோகித்தார்கள். இதன் பின்னர் ‘ஆப்பிள் டெய்லி’ நாளேட்டை வெளியிடும் ‘நெக்ஸ்ட் டிஜிட்டல்’ நிறுவனத்தின் பங்குகள், அவரின் கைது நடவடிக்கைக்கு அடுத்த நாள் மூன்று மடங்கும், அதற்கடுத்த நாளில் ஐந்து மடங்கும் மதிப்பு உயர்ந்தன என்பதும் முக்கியமான விடயமாகும். 2020இல் அவர் கைதாகி
பிணையில் வெளிவந்து பத்திரிகை அலுவலகத்துக்குத் திரும்பிய ஜிம்மி லாய்க்கு ஒரு கதாநாயகனைப் போல வரவேற்பு அப்போது அளிக்கப்பட்டது.

சீன அரசுக்கு எதிராக பத்திரிகையாளர்கள் அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் உண்மையின் பக்கம் நின்ற போது மக்களும் அவர்களுக்கு ஆதரவாக நிற்பார்கள் என்பதற்கு ஜிம்மி லாயின் கைது ஓர் வரலாற்று உதாரணமாகி இருக்கிறது. ஹாங்காங்கின் ஜனநாயக உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல்கொடுத்துவரும் ‘ஆப்பிள் டெய்லி’ நாளிதழின் நிறுவனர் ஜிம்மி லாயும் அவரது சகாக்களும் சீனாவின் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தண்டிக்கப்பட்டதற்கு சர்வதேச அரங்கில் பெரும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button