இலங்கை

யாழ். மக்களின் நம்பிக்கையைச் சிதைக்கமாட்டோம்! பொங்கல் விழாவில் ஜனாதிபதி உறுதிமொழி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீது யாழ். மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை சிறிதளவேனும் வீழ்ச்சியடைய இடமளிக்காது இனவாதமற்ற தேசிய ஒற்றுமை மிக்க நாட்டை உருவாக்க தாம் உறுதியளிப்பதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், வேலணை, ஐயனார் கோயில் விளையாட்டு மைதானத்தில்  நடைபெற்ற வடக்கு மாகாண தைப்பொங்கல் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

“தமிழ் மக்களின் முக்கியமானதொரு கலாசார தினமாக தைப்பொங்கல் தினத்தில் உங்களுடன் இணைவதற்கு வாய்ப்புக் கிடைத்தமையைப் பாக்கியமாகக் கருதுகின்றேன்.

கடந்த காலங்களில் பல்வேறு இடங்களில் இனவாத மோதல்கள் மற்றும் இனவாத போக்குகள் இடம்பெற்றன. இனவாதமற்ற தேசிய ஒற்றுமை நிறைந்த வளமான நாடே எமக்குத் தேவை.

எங்கு பிறந்தாலும் எந்த மொழி பேசினாலும் எந்த மதத்தைப் பின்பற்றினாலும் எத்தகைய கலாசாரச் சூழலில் வாழ்ந்தாலும் அனைவருக்கும் எமது நாட்டில் கௌரவமான பிரஜையாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்துவதே எமது அபிலாஷையாகும்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எம் மீது நம்பிக்கை வைத்து யாழ்ப்பாணம் மாவட்டத்தை முதன்முறையாக வெற்றிகொள்ள வைத்துள்ளீர்கள். நீங்கள் எம் மீது நம்பிக்கை வைத்துள்ளீர்கள். அந்த நம்பிக்கையை சிறிதளவாவது வீழ்ச்சியடைய இடமளிக்காது.

இனவாதமற்ற தேசிய ஒற்றுமை மிக்க நாட்டை உருவாக்குவோம். உங்கள் பிள்ளைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க எதிர்பார்க்கின்றோம். அனைவருக்கும் மகிழ்ச்சியோடும் நிம்மதியோடும் வாழும் நாட்டை நாம் உருவாக்குவோம். இங்கு திரண்டுள்ள மக்களின் பிரதான எதிர்பார்ப்பு அதுதான் என்பதை நாம் அறிவோம்.

மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காக நாம் தயக்கமின்றி எமது பொறுப்பை நிறைவேற்றுவோம். நாம் பிரியாதிருப்போம் என்று இந்தத் தைப்பொங்கல் தினத்தில் பிரார்த்தனை செய்வோம்.” – என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button