உலகம்

இஸ்ரேலின் புதிய குடியேற்றங்களுக்கு பிரிட்டன் உட்பட 14 நாடுகள் கண்டனம்

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் புதிய யூத குடியேற்றங்களை அமைக்க இஸ்ரேல் அண்மையில் அளித்த அனுமதியை பிரான்ஸ், பிரிட்டன், ஜேர்மனி உள்ளிட்ட 14 நாடுகள் கண்டித்துள்ளன.

‘ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் 19 புதிய குடியேற்றங்களுக்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு அனுமதி அளித்ததை பெல்ஜியம், கனடா, டென்மார்க், பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஐஸ்லாந்து, அயர்லாந்து, ஜப்பான், மோல்டா, நெதர்லாந்து, நோர்வே, ஸ்பெயின், ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகள் கண்டிப்பதாக’ அந்நாடுகள் கூட்டாக வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘எந்த ஒரு இணைப்பு மற்றும் குடியேற்றக் கொள்கைகளின் விரிவாக்கத்தையும் தெளிவாக எதிர்க்கிறோம் என்பதை நாம் நினைவுகூர்கிறோம்’ என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புதிய குடியேற்றங்கள் தொடர்பிலான அறிவிப்பை இஸ்ரேலின் தீவிர வலதுசாரி நிதி அமைச்சரான பெசலல் ஸ்மொட்ரிச் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டிருந்தார். பலஸ்தீன நாடு ஒன்று உருவாவதை தடுக்கும் நோக்கத்துடன் இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறான தன்னிச்சையான செயற்பாடுகள் சர்வதேச சட்டத்தை மீறுவதோடு காசாவில் அமுலில் இருக்கும் பலவீனமான போர் நிறுத்தத்தை பாதிக்கச் செய்யும் என்று பதினான்கு நாடுகளின் கூட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முடிவு மற்றும் குடியேற்றங்களை விரிவுபடுத்துவதை மீளப் பெறும்படி மேற்படி நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

1967 போருக்கு பின்னரே மேற்குக் கரையை இஸ்ரேல் ஆக்கிரமித்தது. இதில் 1967 இல் கிழக்கு ஜெரூசலத்தை இஸ்ரேல் தனது ஆட்புலத்திற்கு சேர்த்தது. மேற்குக் கரையில் சுமார் மூன்று மில்லியன் பலஸ்தீனர்களுடன் 500,000 இற்கும் அதிகமான இஸ்ரேலியர் வசிக்கின்றனர்.

2023 ஒக்டோபரில் காசாவில் போர் வெடித்தது தொடக்கம் மேற்குக் கரையிலும் பதற்றம் அதிகரித்திருப்பதோடு அங்கு இஸ்ரேலியப் படைகள் அடிக்கடி சுற்றுவளைப்புகளை நடத்துவதோடு இஸ்ரேலிய குடியேறிகள் பலஸ்தீன கிராமங்களில் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த வன்முறைகளில் ஆயிரத்துக்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

மறுபுறம் காசாவில் கடந்த ஒக்டோபர் 10 ஆம் திகதி தொடக்கம் போர் நிறுத்தம் அமுலில் இருந்தபோதும் அங்கு இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

வடக்கு காசாவின் ஜபலியா பகுதியில் இஸ்ரேலிய படைகள் நிலைநிறுத்தப்பட்டிருக்கு இடத்திற்கு அருகே அந்தப் படைகள் நடத்திய துப்பாப்பிச் சூட்டில்   மேலும் ஒரு பலஸ்தீனர் கொல்லப்பட்டு மூவர் காயமடைந்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது தொடக்கம் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் காசாவில் 400 இற்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button