தமிழர் தலைநகரில் சிங்கள பௌத்த மயமாக்கல்…. பேரினவாத ஆக்கிரமிப்பில் பறிபோகும் திருகோணமலை…. நவீனன்

(தாயக மண்ணில் தமிழர் மரபுரிமைச் சின்னங்கள் இருந்த இடங்கள் தொல்லியல் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு அவ்விடங்கள் வேகமாக சிங்கள பௌத்த மயமாக்கப்படுகின்றன. இதன் தொடரச்சியே திருகோணமலையில் இந்த விவாகரமான விகாரை எழுந்துள்ளது)
பௌத்த பேரினவாத நிகழ்ச்சி நிரலின் தொடர்ச்சியாக திருகோணமலை கடற்கரை சூழலில் இந்த விவாகரமான விகாரை எழுந்துள்ளது. திடீரென தோன்றிய திருகோணமலை கடற்கரை பகுதியில் வைக்கப்பட்ட புத்தர் சிலை கடந்த ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 16 இரவு பொலிஸார் மூலம் அகற்றப்பட்டது. ஆயினும் மீண்டும் மறுநாள் திங்கட்கிழமை பகல் அதே இடத்தில் அந்த புத்தர் சிலையை திருகோணமலை துறைமுக பொலிஸாரின் பாதுகாப்புடன் மத சடங்குகளுடன் வைக்கப்பட்டது.
திருமலை மாநகர சபைக்குச் சொந்தமான பகுதியில் முன் அனுமதியின்றி சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட பெளத்த வணக்கஸ்தலத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டு சமய வழிபாடுகள் நடைபெறுகின்றன. தற்போது குறித்த பௌத்த விகாரைக்காக பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
பௌத்த மயமாக்கலும் இன மோதலும்:
இலங்கையில் இன மோதலுக்கு வழிவகுத்த முக்கிய காரணிகளில் பௌத்த மயமாக்கலும் முக்கிய அடிப்படையாக அமைகின்றது. இலங்கை ஒரு பௌத்த சிங்கள நாடு என பொய்யான பரப்புரைகளை சிங்களவர்கள் மத்தியில் இன்னமும் விதைத்த வண்ணம் உள்ளனர்.
வரலாற்றை முன்னோக்கி பார்த்தால் இலங்கையில் சிங்கள பௌத்த மதம் பின்பற்ற
தொடங்கும் வேளையில் சிங்கள மொழியே இருக்கவில்லை. பௌத்தம் அறிமுகப்படுத்தப்பட்டு பல ஆண்டுகளுக்கு பின்பே சிங்கள மொழி இலங்கையில் தோற்றம் பெற்றது என்பதே உண்மையாகும்.
போர் மௌனித்த பின்னர், இன்றுவரை இன அழிப்புக்கு பரிகார நீதியும் கிடைக்கவில்லை. இன அழிப்புச் செயற்பாடுகள் நிறுத்தப்படவுமில்லை. மாறாக, தாயக மண்ணில் தமிழர் மரபுரிமைச் சின்னங்கள் இருந்த இடங்கள் தொல்லியல் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு அவ்விடங்கள் வேகமாக சிங்கள பௌத்த மயமாக்கப்படுகின்றன.
ஜனாதிபதி அனுர அவர்களின் அரசியல் நிலைப்பாடுகள் குறிப்பாக அவரின் கடந்த கால அணுகுமுறைகள் பற்றி தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டியுள்ளது. இதுவரை காலமும் சிங்கள தலைமைகள் புத்த மேலாதிக்க மனோநிலையோடு அதிகாரத்திற்கு வந்துள்ளன.
ஜேவிபியின் ஒரு வருட ஆட்சியில்:
ஜேவிபி அதிகாரத்திலிருக்கும் ஒரு வருட காலத்தில், குருந்தூர்மலை சட்டவிரோத விகாரை சூழலிலுள்ள தமிழ் விவசாயிகளின் நிலங்களை அழித்து தொல்லியல் தளம் என்கின்ற அறிவித்தல் பலகைகளை அமைத்திருக்கின்றார்கள்.
அதே சமயம் வவுனியா வடக்கு சட்டவிரோத சப்புமல்கஸ்கட விகாரை சூழலில் தியான மண்டபம் உட்பட புதிய கட்டுமானங்களை நிறுவியிருக்கின்றார்கள். பாணமை உகந்தை முருகன் ஆலய சூழலில் புதிய புத்தர் சிலையொன்றை வைத்திருக்கின்றார்கள்.
வடக்கில் யாழ்ப்பாணம் சட்டவிரோத தையிட்டி விகாரையில் புதிய கட்டுமானங்களை நிறுவி அரச அதிகாரியான பொலிஸ் அதிகாரி மூலம் திறந்து வைத்திருகின்றார்கள்.
அத்துடன் கந்தரோடையை மையப்படுத்திய தொல்லியல் புதிய ஆய்வு மூலம் மேலும் பல பௌத்த ஸ்தூபிகளின் அடித்தளங்களை கண்டறிந்ததாகவும், கந்தரோடை ஒரு சிங்கள பௌத்த புனித நகரம் என்கின்ற கருதுகோள்களை உறுதி செய்திருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.
கிழக்கை துண்டாடும் திட்டம் :
அத்துடன் கிழக்கை துண்டாடும் திட்டம் நிறைவேற திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் அளவில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு 26க்கும் அதிகமான விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள சில பாரம்பரிய தமிழ்க் கிராமங்களை சிங்கள மாவட்டங்களுடன் இணைத்து வடக்கையும் கிழக்கையும் துண்டாடும் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
இவற்றில் பல நீதிமன்றத் தீர்ப்புகளை மீறுபவை. இனஅழிப்பு நடவடிக்கைகளால் அதிகம் விழுங்கப்பட்ட ஒரு மாவட்டம் திருகோணமலை ஆகும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு புறம் சிங்கள பௌத்த மயமாக்கல் நடந்து வருகிறது. இன்னொரு புறம் நிலப்பறிப்பு தொடர்கிறது. உதாரணமாக 3000 குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கான கால்நடை சார்ந்த பொருளாதாரத்தை அழிக்கும் நோக்கத்தோடு மயிலத்தமடு, மாதவனை போன்ற இடங்களில் மேய்ச்சல் தரைகளை அரச அனுசரணையோடும் பாதுகாப்போடும் சிங்கள விவசாயிகள் ஆக்கிரமித்து வருகிறார்கள். இங்கேயும் நீதிமன்றத் தீர்ப்புகள் மீறப்படுகின்றன.
அதேவேளை வாகரை, கதிரவெளியில் கனிமவள அகழ்வு மக்களின் எதிர்ப்பை மீறி முன்னெடுக்கப்படுகின்றது. வாகரையில் இறால் பண்ணைகள் மக்களுடைய எதிர்ப்பை மீறி முன்னெடுக்கப்படுகின்றன. இவ்விரண்டு விடயங்களும் மக்களுடைய வாழ்வாதாரத்தைப் பாதிப்பவை. சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு எதிரானவையும் கூடவே.
அம்பாறை மாவட்டத்தில் கல்முனை வடக்கு தமிழ்ப் பிரதேச செயலர் பிரிவை முழுமையான ஒரு பிரதேச செயலர் பிரிவாகத் தரம் உயர்த்துமாறு தமிழ்மக்கள் தொடர்ச்சியாகப் போராடி வருகிறார்கள். இன்றுவரை ஆட்சிக்கு வந்த எந்த ஓர் அரசாங்கமும் அந்தப் பிரச்சினையைத் தீர்க்க விரும்பவில்லை. இனஅழிப்பு நடவடிக்கைகளால் அதிகம் விழுங்கப்பட்ட மற்றொரு மாவட்டம் இதுவாகும்.
வடக்கில் தமிழ்மண் ஆக்கிரமிப்பு:
வடக்கில் முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் குருந்தூர் மலை, வெடுக்கு நாறிமலை, நீராவியடி ஆகிய இடங்களில் தமிழ் மரபுரிமைச் சின்னங்கள் அமைந்திருக்கும் சிறுமலைகளில் அரச திணைக்களங்களும் பிக்குகளும் அரச படையினரும் பௌத்த கட்டுமானங்களை உருவாக்கி வருகிறார்கள்.
அங்கேயும் நீதிமன்றத் தீர்ப்புகள் மீறப்படுகின்றன. இக்கட்டளைகளை வழங்கிய ஒரு நீதிபதி நாட்டைவிட்டுத் தப்பியோடும் நிலைக்குத் தள்ளப்பட்டார். அதற்காக வெட்கப்படவேண்டிய அரசாங்கம் அவரைத் தனிப்பட்ட முறையில் சிறுமைப்படுத்தியது.
யுத்தம் முடிவடைந்த பின்னர் முல்லைத்தீவில் மட்டும் 67 பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவில் பொதுமக்கள் மற்றும் இராணுவம் இடையிலான
விகிதம் 2:1 ஆக இன்னமும் இருக்கின்றது. சுமார் 100க்கும் மேற்பட்ட படையினர் முகாம்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் அமைக்கப்பட்டுள்ளன.
வவுனியா மாவட்டத்தில் கொக்கச்சான் குளம் என்ற தமிழ் மக்களின் பாரம்பரிய விவசாயக் குடியிருப்பு இராணுவப் பாதுகாப்புடனும் அரச அனுசரணையுடனும் ஆக்கிரமிக்கப்பட்டு ‘கலாபோபஸ்வேவ’ என்ற பெயருடைய சிங்களக் கிராமமாக மாற்றப்பட்டு மிகக்குறுகிய காலத்துக்குள் அந்த கிராமத்துக்குத் தேவையான சகல உட்கட்டுமான வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று, அம்பாந்தோட்டையிலிருந்து கொண்டுவரப்பட்டவர்களை அரசின் அனுசரணையோடு குடியமர்த்தி ‘நாமல்கம’ என்ற ஒரு கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில், கனிம வளம் பறிக்கப்படுகின்றது. அங்குள்ள முள்ளிக்குளம் கிராமத்தை ஆக்கிரமித்து வைத்திருக்கும் ஸ்ரீலங்கா கடற்படையானது அக்கிராமத்தின் பூர்வ குடிகளான தமிழ் மக்களை அங்கு முழுமையாக மீளக் குடியமர விடாமல் தடுத்து வருகின்றது.
பறிபோகும் தமிழர் தலைநகர்:
கடந்த சிங்கள அரசுகளால் உருவாக்கப்பட்ட பேரினவாத கொள்கையின் கீழ் மட்டக்களப்பு நெடியகல்மலை பகுதியில் புதிய விகாரை ஒன்றை நிர்மாணித்து வருகின்றார்கள்.
மேலும் வெருகல் வட்டவான் பகுதியில் 290 ஏக்கர் விவசாய நிலங்கள் உட்பட 10 இடங்களை பௌத்த தொல்லியல் நிலங்களாக அடையப்படுத்தி இருக்கின்றார்கள்.
தமிழர் தலைநகர் திருகோணமலை 64 ஆம் கட்டை ராஜவந்தான்மலை பிள்ளையார் ஆலய சூழலில் 300 ஏக்கர் விவசாய நிலங்களை ஆக்கிரமித்து நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரையை முழுமைப்படுத்தி இருக்கின்றார்கள்.
இது போதாதென்று தொல்லியல் ஆலோசனை குழு என்கின்ற பேரில் ஸ்ரீ இரத்னபால உபாலி நாயக்க தேரர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழுவில் 3 பௌத்த பிக்குகள் உள்ளடங்கலாக 19 சிங்களவர்களை நியமித்திருக்கின்றார்கள்.
திருகோணமலையில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் பாணமுரே திலகவன்ச தேரருக்கு அமைச்சரவை பாதுகாப்பை உறுதி படுத்தி இருக்கின்றார்கள்.
குருந்தூர் மலை சூழலில் விவசாய நிலங்களை தயார்படுத்திய விவசாயிகளை தொல்லியல் நிலங்களை சேதப்படுத்தினார்கள் என குற்றம் சாட்டி சிறையில் அடைத்திருகின்றார்கள்.
அனுர அரசின் நடவடிக்கை ?
நீண்ட பல ஆண்டுகளாக நிலப்பறிப்பும் சிங்கள பௌத்த மயமாக்கலும் தமிழர் பகுதிகளில் தொடர்கிறது. தற்போதய அனுரவின் அரசு எந்தவித நடவடிக்கைகளையும் எடுப்பதாக தெரியவில்லை.

தாயக மண்ணில் தமிழர் மரபுரிமைச் சின்னங்கள் இருந்த இடங்கள் தொல்லியல்திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு அவ்விடங்கள் வேகமாக சிங்கள பௌத்த மயமாக்கப்படுகின்றன. இதன் தொடரச்சியே திருகோணமலையில் இந்த விவாகரமான விகாரை எழுந்துள்ளது.
தற்போது அனுர அரசும் சிங்கள ,புத்த மேலாதிக்க மனோநிலையோடு அதிகாரத்திற்கு உள்ளது என்பது தெளிவாக புலப்படுகிறது. இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுர அவர்களின் அரசியல் நிலைப்பாடுகள் குறிப்பாக அவரின் JVP கடந்த கால தமிழ் விரோத அணுகுமுறைகள் பற்றி தமிழ் மக்கள் நீண்டகாலமாக அறிந்துள்ளார்கள்.
![]()