முச்சந்தி

பிபிசியின் ஊடக தர்மமும் !… டிரம்பின் அடாவடி அரசியலும் !!…  ஐங்கரன் விக்கினேஸ்வரா

(பிபிசியின் இரண்டு இயக்குனர்கள் ராஜினாமா செய்ததை அடுத்து, பல தசாப்தங்களில் மிகப்பெரிய நெருக்கடியை பிபிசி எதிர்கொள்கிறது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இழப்பீடாக ஒரு பில்லியன் டாலர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அச்சுறுத்தியுள்ளார்)
உலகளாவிய ஊடகங்களில் நீண்டகாலமாக இயங்கும் பிபிசியின் இயக்குனரும், செய்திப் பிரிவு முதன்மை அதிகாரியுமான இருவரும் ஒரே நாளில் ராஜிநாமா செய்திருப்பது இங்கிலாந்தில் இதுவரையிலும் நடந்திராத ஒன்று.
இத்தனைக்கும் காரணம் 2021-ஆம் ஆண்டு ஜனவரி 6-ஆம் தேதி வாஷிங்டன் டி.சி.யில் டிரம்ப் ஆற்றிய உரையை திரிபுபடுத்தி வெளியிட்டமையே முதன்மைக் காரணம் ஆகும். நாம் கேபிடல் ஹால் நோக்கி நடக்கப் போகிறோம். நமது செனட்டர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பெண்களை உற்சாகப்படுத்தப் போகிறோம் என்றார் டிரம்ப்.
ஆனால் பிபிசியின் பனோரமா ஆவணப்படத்தில் அவர் கூறியதாக காட்டப்பட்ட உரையில், “நாம் கேபிடல் நோக்கி நடக்கப் போகிறோம். நான் உங்களுடன் இருப்பேன். நாம் போராடுவோம். நாம் கடுமையாக போராடுவோம் என்றிருக்கிறது. இதுவே பலத்த ஊடக விவாதமாக இங்கிலாந்தில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
சுமார் ஐம்பது நிமிட இடைவெளியில் பேசப்பட்ட இரண்டு விஷயங்கள் மாற்றம் (எடிட்) செய்யப்பட்டு ஒன்றாக இணைக்கப்பட்டு அந்த ஆவணப் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
பிபிசியின் ஊடக தர்மம்:
பிபிசியின் அடிப்படை கொள்கையின் படி, அவர்களின் ஊடக தர்மம் என்பது, தங்களின் செய்தி அறிக்கைகளை நம்பகத்தன்மையுடனும், பாரபட்சமின்றியும் வெளியிடுவதை அடிப்படையாகக் கொண்டதாகும். போலிச் செய்திகளுக்கு எதிராக, “போலிச் செய்திகளைத் தாண்டி” (Beyond Fake News) போன்ற திட்டங்களை நடத்தி, தவறான தகவல்கள் எவ்வாறு பகிரப்படுகின்றன என்பது குறித்து ஆய்வு செய்கிறது.
மேலும், தங்களின் பிபிசி செய்தியாளர்களுக்குத் தடையற்ற, நேர்மையான பணியை மேற்கொள்ள ஊடக சுதந்திரத்தை வலியுறுத்துகிறது.
அத்துடன் பிபிசி, உலகில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து நம்பகமான தகவல்களை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. உலகை பிளவுபடுத்தும் இத்தகைய சூழலில், நம்பகமான தகவல்களின் அவசியம் குறித்து பிபிசி எப்போதும் கவனம் செலுத்துகிறது.
ஊடகங்கள் தங்களின் அறம் சார்ந்த மற்றும் தர்மம் சார்ந்த நெறிகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என பிபிசி தார்மீக நெறியை வலியுறுத்தி நம்புகிறது.
டிரம்ப் உரை திரிபு ?
தற்போது பிபிசியின் இரண்டு மூத்த பத்திரிகையாள இயக்குனர்கள் பாரபட்சமான குற்றச்சாட்டுகளுக்காக ராஜினாமா செய்ததை அடுத்து, பல தசாப்தங்களில் மிகப்பெரிய நெருக்கடியை பிபிசி எதிர்கொள்கிறது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இழப்பீடாக ஒரு பில்லியன் டாலர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அச்சுறுத்தியுள்ளார். இந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் உரையை திரித்து வெளியிட்டதாக எழுந்த விவகாரத்தில் பிபிசி டைரக்டர் டிம் டேவி, செய்திப்பிரிவு தலைவர் டெபோரா டர்னஸ் ஆகியோரே ராஜினாமா செய்துள்ளனர்.
பிபிசி ஊடக தர்மத்தை மீறி, அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி ஆற்றிய உரை, கேபிடல் ஹில் கலவரத்தை தூண்டும் விதமாக இருந்தது என்று பிரபல செய்தி நிறுவனமான பிபிசி, ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டமை வேண்டுமென்றா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஏனெனில் இந்த ஆவணப்படத்தில், டிரம்ப் பேசிய இரண்டு தனித்தனி வீடியோக்கள், எடிட் செய்யப்பட்டு ஒன்றாக இணைக்கப்பட்டிருந்தன.ஒரே வீடியோ போன்று தோற்றம் அளிப்பது போல் இந்த ஆவணப்படம் வெளியாகி இருந்தது.
இதன் மூலம் தன் உரையை திரித்து வெளியிட்டதாக டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பிபிசிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது போலியான செய்தி என்றும் குற்றம் சாட்டினர். இது பற்றி விசாரணைக்கு பிபிசி நிறுவனம் உத்தரவிட்டது.
முன்னாள் ஆலோசகரான மைக்கேல் பிரெஸ்காட் தலைமையிலான பிபிசியின் ஆசிரியர் வழிகாட்டுதல் குழு தொகுத்த 19 பக்க உள்தகவல் அறிக்கையில், டிரம்ப் கலவரத்தை தூண்டியது போன்ற பிம்பத்தை ஆவணப்படம் உருவாக்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இது பிபிசிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியது.
பிபிசிக்கு நிதி உதவி?
டிரம்ப் உரையின் இரண்டு பகுதிகளை ஒன்றாக இணைத்து, அவரது ஆதரவாளர்கள் கேபிட்டல் ஹில்லை முற்றுகையிட்ட நாளில், அவர் வன்முறைக்கு அழைப்பு விடுத்தார் என்ற தோற்றத்தை உருவாக்கிய பனோரமா ஆவணப்படத்திற்காக தற்போது பிபிசி நிறுவனம் முழுமையான மன்னிப்பு கேட்டுள்ளது.
இந்த விவகாரத்தின் பின்னர் எதிர்காலத்தில் பிபிசிக்கு நிதியளிப்பது எப்படி என்பதை பிரித்தானிய அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டி இருக்கிறது. பிரிட்டனில் உள்ள அனைத்து தொலைக்காட்சி பார்க்கும் குடும்பங்களும் செலுத்தும் உரிமக் கட்டணத்தின் மூலம் பிபிசி நிறுவனத்திற்கு நிதியளிக்கப்படுகிறது.
2024/25 ஆம் ஆண்டில், இது 3.8 பில்லியன் பவுண்டுகளை ($ 5.1 பில்லியன் டாலர்கள்) ஈட்டியது, அதே நேரத்தில் வணிக வருமானம் மொத்த வருவாயை 5.9 பில்லியன் பவுண்டுகளாக உயர்த்தியது.
பிபிசியின் நிதியுதவி 2027 இல் மீதமாகவுள்ள அதன் சமீபத்திய பத்து ஆண்டு அரச சாசனத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. பல பார்வையாளர்கள் நெட்ஃபிலிக்ஸ் மற்றும் பிற ஸ்ட்ரீமிங் தளங்களுக்குத் திரும்பும்போது உரிமத்தைப் பாதுகாப்பது கடினமாகி வருவதால், இந்த ஆண்டு இறுதிக்குள் அரசாங்கம் வெவ்வேறு நிதி மாதிரிகளுக்கான விருப்பங்களை அமைக்க வேண்டியிருக்கும்.
அத்துடன் உரிமக் கட்டணத்தை செலுத்துபவர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. இது கடந்த நிதியாண்டின் இறுதியில் 23.8 மில்லியனாக இருந்தது, இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 25.3 மில்லியனாக இருந்தது. ராய்ட்டர்ஸின் வாடிக்கையாளராக இருக்கும் பிபிசி, பிரிட்டனில் மிகவும் நம்பகமான மற்றும் அதிகம் பயன்படுத்தப்படும் செய்தி வழங்குநராகும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.
பிபிசியுன் செய்திகள் தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணைய மூலம் பெரியவர்களில் 67% பேரைச் சென்றடைகிறது என்று ஊடக ஒழுங்குமுறை ஆணையமான ஆஃப்காம் ஜூலை மாதம் கூறியது, இருப்பினும் 2019 முதல் அதன் பரவல் 11 சதவீத புள்ளிகள் குறைந்துள்ளது.
அத்துடன் YouGov போன்ற சில நிறுவனங்கள் நடத்திய ஒரு விரைவான கணக்கெடுப்பில், வினவப்பட்டவர்களில் பாதி பேர் பிபிசி அரசியல் ரீதியாக சார்புடையது என்று நம்புகின்றனர். இருப்பினும் அவர்கள் கட்சி அடிப்படையில் பிரிந்தனர். 31% பேர் இது பொதுவாக இடதுசாரிக் கருத்துக்களுக்கு ஆதரவாகச் சார்புடையதாகக் கூறியுள்ளனர், அதே நேரத்தில் 19% பேர் வலதுசாரிகளை ஆதரிப்பதாகக் கூறியுள்ளனர்.
டிரம்ப் உரை திருத்தம் கசிந்ததா ?
தொடர் சர்ச்சைகளும் பாரபட்சமாக செயல்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளும் பிபிசியை பின்தொடர, ஐந்து ஆண்டுகளாக அந்தப் பொறுப்பில் இருந்த இயக்குநர் டிம் டேவி நெருக்கடியை சந்தித்து வந்தார்.
2021-ஆம் ஆண்டு ஜனவரியில் அமெரிக்காவில் நடந்த கேபிடல் ஹில் கலவரங்களைத் தூண்டும் விதமாக டொனால்ட் டிரம்ப் வெளிப்படையாக பேசியதாகத் தோன்றும் வகையில், அவரது உரையின் இரு பகுதிகள் எடிட் செய்யப்பட்டு பனோரமா நிகழ்ச்சியில் பயன்படுத்தப்பட்டதாகக் கசிந்த பிபிசியின் உள் குறிப்பு (internal BBC memo) அடிப்படையில் ‘தி டெலிகிராப்’ பத்திரிகை செய்தி ஒன்றை அண்மையில் வெளியிட்டது.
இந்த ராஜிநாமாக்கள் மாற்றத்திற்கான வழியைத் திறக்கும் என பிரிட்டன் அரசியல் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதேசமயம் டிரம்ப் இதனை வரவேற்றிருக்கிறார்.
பிபிசிக்கு எதிராக விமர்சனங்கள்:
அந்த பிபிசி உள் குறிப்பு கசிந்தது பிபிசிக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை எழச் செய்தது. அதில் வெள்ளை மாளிகையும் இணைந்தது. மேலும் பிபிசியை 100% போலி செய்தி நிறுவனம் என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது.
இதுபற்றி டிரம்ப், ஜனவரி 6-ஆம் தேதி, நான் பேசிய அந்த சிறப்பான பேச்சை ஜோடித்து மாட்டிக் கொண்டதால் பிபிசியின் பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் தற்போது ராஜிநாமா செய்கிறார்கள் அல்லது வேலையில் இருந்து நீக்கப்படுகிறார்கள் என்று கூறியுள்ளார்.
காசா பற்றிய ஆவணப்படம்:
டிரம்ப்க்கை எதிரான சர்ச்சை மட்டுமல்லாமல், காசா பற்றிய ஆவணப்படத்திற்கு குரல் கொடுத்தவர் ஒரு ஹமாஸ் அதிகாரியின் மகன் என்பதை வெளிப்படுத்தாததால் பிபிசி நிறுவனம் சமீபமாக பல குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும் சந்தித்தது.
பங்க் இசை ஜோடி பாப் விலன் “இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளுக்கு (IDF) மரணம், மரணம்” எனக் கோஷமிட்ட கிளாஸ்டன்பரி நிகழ்ச்சியை பிபிசி ஒளிபரப்பியதும், ‘தீங்கு விளைவித்தல் மற்றும் குற்றம்’ குறித்த பிபிசியின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை பிரித்தானிய கலாசாரம், ஊடகம் மற்றும் விளையாட்டுக்கான எம்.பி.க்கள் குழு தலைவரான டேம் கரோலைன் டைனேஜ், தொடர்ச்சியான நெருக்கடிகள் மற்றும் தவறான நடவடிக்கைகள் காரணமாக பிபிசி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *