முச்சந்தி

மேற்கு சஹாரா எதிர்காலத்தை தீர்மானிக்கும் சஹ்ராவி மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டம்… ஐங்கரன் விக்கினேஸ்வரா

(சுயநிர்ணய உரிமையைப் பயன்படுத்தி, மேற்கு சஹாராவின் எதிர்காலத்தைத் தாங்களே தீர்மானிக்க வேண்டும் என்பதே சஹ்ராவி மக்களின் கோரிக்கை. ஐக்கிய நாடுகள் சபையின் கீழ், ஒரு வாக்கெடுப்பு நடத்தி, சஹ்ராவி மக்களுக்குத் தங்கள் எதிர்காலத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை வழங்க வேண்டும் என அவர்கள் நீண்டகாலமக கோருகின்றனர்)
சஹ்ராவி மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டம் என்பது மேற்கு சஹாராவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க, சஹ்ராவி மக்களுக்குத் தன்னாட்சி அதிகாரம் அல்லது சுதந்திரம் கோரும் ஒரு நீண்டகாலப் போராட்டமாகும்.
ஐக்கிய நாடுகள் சபையின் புதிய தீர்மானம், சஹ்ராவி மக்களின் சுதந்திரப் போராட்ட ஆதரவாளர்களால், பல தசாப்தங்களாகத் தொடரும் ஏமாற்றத்தின் மற்றும் துரோகத்தின் உச்சகட்டமாகப் பார்க்கப்படுகிறது. அத்துடன் ஐ.நா. தனது அடிப்படைக் கடமையிலிருந்து தவறி, சஹ்ராவி மக்களின் சுயநிர்ணய உரிமையைப் புறக்கணித்துவிட்டது என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மொராக்கோவின் ராஜதந்திர வெற்றி:
மொராக்கோ கொண்டாடும் அளவிற்கு இது ஒரு மாபெரும் ராஜதந்திர வெற்றி என்று கருதப்படுகிறது. ஆனால் சஹ்ராவி மக்களின் சுதந்திரத்தை ஆதரிப்பவர்களின் பார்வையில் பாரிய தோல்வியாக கருதப்படுகிறது. இது ஐக்கிய நாடுகள் சபை தனது சொந்தத் தீர்மானங்களுக்கும், ஒரு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அது வழங்கிய உறுதிமொழிக்கும் செய்த வரலாற்றுத் துரோகமாகவே பார்க்கப்படுகிறது.
இந்த உரிமைக்கான அவர்களின் போராட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஸ்பெயினின் காலனித்துவ ஆட்சியிலிருந்து பிரிந்து சென்ற பின், மொராக்கோவின் கட்டுப்பாட்டின் கீழ் அவர்கள் தேசம் வந்தது. பின்னர் பிரான்சின் உதவியுடன் இது தீவிரமடைந்தது. இந்த உரிமைப் போராட்டம், ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பில், மேற்கு சஹாராவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஒரு வாக்கெடுப்புக்கான கோரிக்கையை முன்வைத்தது.  இதில் சுயநிர்ணய உரிமையின்படி சுதந்திரம் அல்லது மொராக்கோவுடன் ஒருங்கிணைக்கப்படுவது போன்ற விருப்பங்களின் கீழ் வாக்களிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஸ்பெயின் வசம் இருந்த மேற்கு சஹாராவை 1975-ல் மொராக்கோ கைப்பற்றியது. இதன் விளைவாக, சஹ்ராவி மக்களின் தன்னாட்சி உரிமை மறுக்கப்பட்டதோடு, ஐக்கிய நாடுகள் சபையின் தலையீட்டுக்குள்ளான ஒரு பிரச்சினையாக இது மாறியது.
சுயநிர்ணய உரிமையைப் பயன்படுத்தி, மேற்கு சஹாராவின் எதிர்காலத்தைத் தாங்களே தீர்மானிக்க வேண்டும் என்பதே சஹ்ராவி மக்களின் கோரிக்கை. ஐக்கிய நாடுகள் சபையின் கீழ், ஒரு வாக்கெடுப்பு நடத்தி, சஹ்ராவி மக்களுக்குத் தங்கள் எதிர்காலத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை வழங்க வேண்டும் என அவர்கள் கோருகின்றனர்.
தற்போதைய நிலையின் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பின் கீழ் அமைதியான தீர்வை எட்ட முயற்சிகள் நடந்து வருகின்றன. ஆனால் பிரான்சுடனான பிராந்திய பதட்டங்கள் மற்றும் அரசியல் ரீதியான முரண்பாடுகள், போராட்டத்தை மேலும் சிக்கலாக்குகி விட்டன.
பொலிசாரியோ முன்னணி:
சஹ்ராவிகள் முதன்மையாக பூர்வீக பெர்பர் மற்றும் அரேபிய மக்கள் ஆவார்கள். பல நூற்றாண்டுகளாக மேற்கு சஹாராவில் வசித்து வருகின்றனர். அவர்களின் கலாச்சாரம், மரபுகள் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவை சஹாரா பாலைவனம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை உள்ளடக்கியது. இப்பகுதியின் பாலைவன சூழலுடன் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளனர்.
சஹ்ராவிகள் நாடோடிகளாக கால்நடை வளர்ப்பு, வர்த்தகம் மற்றும் கைவினைத்திறன் ஆகியவற்றின் வளமான வரலாற்றைக் கொண்டுள்ளனர். அது அவர்களின் அடையாளத்தையும் சமூக அமைப்பையும் வடிவமைத்துள்ளது.
சஹ்ராவிஸ் வட ஆபிரிக்காவில் சர்ச்சைக்குரிய பிரதேசமான மேற்கு சஹாரா பகுதி மக்களைக் குறிக்கிறது. மொராக்கோவிற்கும் பொலிசாரியோ முன்னணிக்கும் இடையில் மேற்கத்திய சஹாராவின் இறையாண்மை தொடர்பான மோதல் காரணமாக சஹ்ராவி மக்கள் அரசியல் சவால்களை எதிர்கொண்டுள்ளனர். பல சஹ்ராவிகள் தங்கள் வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்து அண்டை நாடுகளில் உள்ள அகதிகள் முகாம்களில் வாழ்கின்றனர். மனிதாபிமான கஷ்டங்களையும் நிச்சயமற்ற எதிர்காலத்தையும் அனுபவித்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது.
இந்த சவால்கள் இருந்தபோதிலும், சஹ்ராவிகள் தங்கள் பாரம்பரியத்தில் வலுவான சமூகம், பின்னடைவு மற்றும் கலாச்சார பெருமை ஆகியவற்றைப் பேணுகிறார்கள். சஹ்ராவி மக்களின் போராட்டங்களும் அபிலாஷைகளும் அவர்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் மனித உரிமைகளுக்கான தேடலில் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளன.
ஸ்பெயினின் காலனித்துவம்:
சஹ்ராவிஸின் சொந்த மொழி ஹசானியா ஆகும். மேற்கு சஹாராவின் பெனி ஹாசன் அரேபிய பழங்குடியினரால் முதலில் பேசப்படும் அரபு வகை மொழியாகும்.
ஸ்பெயினின் காலனித்துவ காலத்தில் பாரம்பரியமாக பெண்கள் சஹ்ராவி கலாச்சாரத்திலும், காலனித்துவத்தை எதிர்ப்பதற்கான முயற்சிகளிலும், தங்கள் பிராந்தியத்தில் வெளிநாட்டு தலையீட்டிலும் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.
மேற்கு சஹாரா பிராந்தியத்தில் சஹ்ராவி மக்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் போராடும் ஒரு தீவிர இயக்கம் உள்ளது.மேற்கு சஹாராவின் முக்கிய இனக்குழு சஹ்ராவிகள், ஒரு நாடோடி அல்லது பெடோயின் இனக்குழுவான அரபியின் ஹசானியா பேச்சுவழக்கு உள்ளவர்கள். மேலும் இந்த மொழி மொரிட்டானியாவின் பெரும்பகுதியிலும் பேசப்படுகிறது.
சஹ்ராவி பிராந்தியத்தின் ஒரு பகுதி பெரும்பாலும் குடியேற்றப்படாத பகுதியாகும். இதனை பொலிசாரியோ முன்னணி ஆனது, சஹ்ராவி அரபு ஜனநாயக குடியரசாக கட்டுப்படுத்துகிறது.
சஹ்ராவிகள் மக்கள் தங்களை வெளிப்படுத்தவும் கலை மூலம் தங்கள் தேசிய போராட்டத்தை உருவாக்கவும் ஊக்கமளித்து வருகிறார்கள். மேலும் அல்ஜீரியா சஹ்ராவி சுதந்திர இயக்கத்தை ஆதரிக்கிறது.
1991-இன் உறுதிமொழி:
1991 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை (MINURSO) ஒரு அமைதித் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. இதன் முக்கிய நோக்கம், மேற்கு சஹாராவில் போர் நிறுத்தத்தை அமல்படுத்துவதும். சஹ்ராவி மக்கள் சுதந்திரமாகச் செயல்படுவதா அல்லது மொராக்கோவுடன் இணைவதா என்பதைத் தீர்மானிக்க ஒரு பொது வாக்கெடுப்பை நடத்துவதும் ஆகும்.
ஆனால் இந்த வாக்கெடுப்பு 30 ஆண்டுகளுக்கும் மேலாகியும் ஒருபோதும் நடைபெறவில்லை. வாக்காளர் பட்டியலைத் தீர்மானிப்பதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைக் காரணம் காட்டி, இந்தச் செயல்முறை காலவரையின்றி முடக்கப்பட்டது.
சஹ்ராவி ஆதரவாளர்கள் இதை ஐ.நா.வின் முதல் பெரிய துரோகமாகக் கருதுகின்றனர். இந்தத் தாமதம், மொராக்கோ தனது கட்டுப்பாட்டை அப்பகுதியில் வலுப்படுத்திக்கொள்ளவே உதவியது என்பது அவர்களின் வாதம்.
இந்த நீண்ட முடக்க காலத்தில், மொராக்கோ மேற்கு சஹாராவின் பெரும்பகுதியை தனது ராணுவ மற்றும் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. அங்கு குடியேற்றங்களை ஊக்குவித்ததுடன், அப்பகுதியின் முக்கிய இயற்கை வளங்களான பொஸ்பேட், மீன்வளத்தை பெருமளவில் சுரண்டுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
பொலிசாரியோ முன்னணியின் ஆதரவாளர்கள், ஐக்கிய நாடுகள் சபை இந்த “நில ஆக்கிரமிப்பை” கண்டிக்கத் தவறியது மட்டுமின்றி, மொராக்கோவின் நடவடிக்கைகளுக்கு எதிராக எந்தத் தடையையும் விதிக்காமல் மௌனம் காத்தது என்று குற்றம் சாட்டுகின்றனர். இந்த மௌனம், மொராக்கோவின் செயல்களுக்கு ஒரு மறைமுக அங்கீகாரத்தை வழங்கியதாக அவர்கள் வாதிடுகின்றனர். மேலும், சுதந்திரத்திற்கு ஆதரவான சஹ்ராவி மக்களின் போராட்டங்கள் ஒடுக்கப்படுவதாகவும், மனித உரிமை மீறல்கள் நடப்பதாகவும் அவர்கள் தொடர்ந்து புகாரளித்து வருகின்றனர்.
புதிய தீர்மானம்: இறுதி அத்தியாயமா?
சமீபத்திய ஐநாவின் த(Resolution 2797) புதிய தீர்மானம், “சுதந்திரத்திற்கான பொது வாக்கெடுப்பு” என்ற கருத்தை முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டது.
அதாவது மாற்றப்பட்ட இலக்காகவும், இது பேச்சுவார்த்தைக்கான அடிப்படையாக மொராக்கோவின் “தன்னாட்சித் திட்டத்தை” (Autonomy Plan) “மிகவும் சாத்தியமான” மற்றும் “நம்பகமான” தீர்வு என அங்கீகரிக்கிறது.
இந்த தீர்மானத்தின் மூலம், ஐ.நா. சபை “சுதந்திரம் வேண்டுமா?” என்ற கேள்வியையே நீக்கிவிட்டு, “மொராக்கோவின் இறையாண்மையின் கீழ் எவ்வளவு தன்னாட்சி?” என்பதை மட்டுமே விவாதிக்க அனுமதிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
சஹ்ராவி மக்களின் சுயநிர்ணய உரிமையை (சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்கும் உரிமையை) முற்றிலுமாகப் புறக்கணிக்கும் செயல் என்றும், இது மொராக்கோவின் நிலைப்பாட்டிற்கு ஐ.நா. வழங்கிய நேரடி ஆதரவு என்றும் அவர்கள் கடுமையாகக் கண்டிக்கின்றனர்.
தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் புதிய தீர்மானம், சஹ்ராவி மக்களின் சுதந்திரப் போராட்ட ஆதரவாளர்களால், பல தசாப்தங்களாகத் தொடரும் ஏமாற்றத்தின் மற்றும் துரோகத்தின் உச்சகட்டமாகப் பார்க்கப்படுகிறது. ஐ.நா. தனது அடிப்படைக் கடமையிலிருந்து தவறி, சஹ்ராவி மக்களின் சுயநிர்ணய உரிமையைப் புறக்கணித்துவிட்டது என்று விடியலை நோக்கி செல்லும் மக்கள் கூறுகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *