தமிழ் மொழிக்கு அங்கீகாரம் தராத அநுர அரசு!… ஜெனீவா வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றுமா?… நவீனன்

(அநுர அரசின் அதிகாரப்பூர்வ வெளியீடுகளும் வலைத்தளங்களும் நாட்டின் மூன்று அதிகாரப்பூர்வ மொழிகளையும் பயன்படுத்த வேண்டும் என்று கூறுகிறது. இவ்வாறு தேசிய மக்கள் கட்சி அரசாங்கம் முறையான மாற்றத்திற்கான வாக்குறுதியை அளித்தது. ஆனால் அந்த மாற்றம் தற்போது தமிழ் மொழி எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதில் தெளிவாகத் தெரியவில்லை. கிட்டத்தட்ட ஒவ்வொரு அதிகாரப்பூர்வ அறிக்கையும் பெரும்பான்மையி சிங்கள மொழியில் மட்டுமே வெளியிடப்படுகிறது.
தற்போதைய புதிய அரசியல் சூழலில் இந்த போக்கே இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதை மறுக்க முடியாது. பேச்சளவிற்கு இன ஒற்றுமை என்ற பெயரில், தமிழ் மொழி இன்னமும் இரண்டாம் தர மொழியாகவே சிறிலங்காவில் இருக்கிறது)
இலங்கையின் முப்பது ஆண்டுகால யுத்தத்திற்கான மூல காரணம் மொழி – குறிப்பாக, சிறுபான்மை தமிழ் மொழி உரிமைகளை புறக்கணித்ததே இனவெறிக்கு வித்திட்டது. இதை எதிர்த்து தமிழ் மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். தற்போதைய சூழ்நிலையில் இந்த அரசு ஒரு புதிய இன ஒற்றுமையை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்று கூறினாலும், தென் இலங்கையில் அதன் மாற்றத்தை காண முடியவில்லை.
யுத்தத்தின் மூல காரணமான மொழி:
நடந்த யுத்தத்திற்கான மூல காரணம் மொழி என்பது வெளிப்படையாக இருந்தாலும், அநுரவின் அரசு அனைத்து அதிகாரப்பூர்வ வெளியீடுகளும் வலைத்தளங்களும் நாட்டின் மூன்று அதிகாரப்பூர்வ மொழிகளையும் பயன்படுத்த வேண்டும் என்பது பேச்சளவிலேயே உத்தரவிட்டுள்ளது.
2025 தேர்தலுக்கு முன்பாக தேசிய மக்கள் கட்சி அரசாங்கம் முறையான மாற்றத்திற்கான வாக்குறுதியை அளித்தது. ஆனால் அந்த மாற்றம் தற்போது உள்ளடக்கத்திற்காக மொழி எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதில் தெளிவாகத் தெரியவில்லை. கிட்டத்தட்ட ஒவ்வொரு அதிகாரப்பூர்வ அறிக்கையும் பெரும்பான்மையின சிங்கள மொழியில் மட்டுமே வெளியிடப்படுகிறது என்று கூறப்படுகிறது.
இது வெறும் தொடர்பு அணுகல் பற்றியது மட்டுமல்ல, ஏனெனில் மொழி அனைத்து இனக்குழுக்களிடையேயும் ஒற்றுமையை வளர்ப்பதற்கான ஒரு அடிப்படை கருவியாகும். அதனை மறந்தே தற்போதய அரசும் செயல்படுகிறது.
1956 தனிச் சிங்களம் :
1956இல் ஆட்சியைக் கைப்பற்ற எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க கையில் எடுத்த ஆயுதம் தனிச் சிங்கள-பௌத்த தேசியம். எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க பொறுத்தவரையில் ‘சிங்கள-பௌத்த தேசியத்தை’ அவர் எப்போதோ கையிலெடுத்துவிட்டார். 1937இலேயே சிங்கள மகாசபையை பண்டாரநாயக்க உருவாக்கியிருந்தார்.
மேலைத்தேயம் சார்பான ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி பௌத்த கலாசாரத்தை சீரழிக்கிறது. இது ஒரு கிறிஸ்துவர்கள் சார்பான மேட்டுக்குடி ஆட்சி. 1948இல் இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தது என்பதில் உண்மையில்லை என்று பொதுநலவாயத்திலிருந்து இலங்கை விலகுகிறதோ அன்றைக்குத்தான் இலங்கைக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கும் என தனது ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டார் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க.
1949ஆம் ஆண்டு சுதந்திரதின விழாவில்கூட இரு மொழிகளிலும் தேசிய கீதம் பாடப்பட்டது. 1956 தேர்தலையொட்டி எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க தனது ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதக் கொள்கையைப் பலப்படுத்துவதற்காக சிங்கள மொழியை மட்டும் இலங்கையின் உத்தியோகபூர்வ மொழியாக பிரகடனம் செய்வேன் என சூளுரைத்தார்.
இலங்கை அரசியல் வரலாற்றை மாற்றிப் போட்ட புள்ளியாக எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் ‘தனிச் சிங்களச் சட்டம்’ அமைந்தது. பண்டாரநாயக்கவின் புத்துணர்ச்சியுடன் எழுச்சிபெற்ற ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதமும், ‘பஞ்ச மா பலவேகய’வும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெரும் சவாலாக மாறியது.
அதுவும் தேர்தல் இடம்பெற்ற 1956ஆம் ஆண்டானது கௌதம புத்தர் பரிநிர்வாணம் அடைந்ததன் 2500ஆவது ஆண்டு நிறைவாகவும், விஜயன் இலங்கையில் காலடி எடுத்து வைத்ததன் 2500ஆவது ஆண்டு நிறைவாகவும் இருந்ததானதும் ‘சிங்கள-பௌத்த’ தேசியவாத உணர்ச்சிகளுக்கு இன்னும் உயிரூட்டுவதாகவும் அமைந்தது.
இலங்கைக்கு ஐநாவில் அழுத்தம்:
இலங்கையின் முப்பது ஆண்டுகால யுத்தம், பல தசாப்தங்களாக ஆதிக்கம் செலுத்தி வந்த
வன்முறை மற்றும் தண்டனையின்மை சுழற்சிகளிலிருந்து மீள்வதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பை இலங்கை தற்போது பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் (Volker Türk) வோல்கர் டர்க் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் தன்னிச்சையான கைதுகள் மற்றும் தடுப்புக்காவல்களுக்கு உடனடி தடை விதிக்குமாறு இலங்கை அரசாங்கத்தை வோல்கர் டர்க் வலியுறுத்தியுள்ளார்.
செப்டம்பர் 2025இல் ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பாக அறிக்கையை சமர்பித்து உரையாற்றும் போதே அவர் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார். மாற்றத்தக்க சீர்திருத்தம், பொறுப்புக்கூறல், உண்மை மற்றும் நீதி ஆகியவற்றிற்காக நாடு முழுவதிலுமிருந்தும், அரசாங்கத்திற்கு தெளிவான ஆணை கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் அவற்றை நிறைவேற்ற அரசு தயாராக இல்லை என்பதற்கான சாத்தியங்களே அதிகம் தெரிகின்றன.
நாட்டின் மிக நீண்டகால பிரச்சினைகளுக்கு புதிய திசை நோக்கிய பயணத்திற்கு அந்த நாட்டின் தலைமை உறுதியளித்துள்ளதாகவும் வோல்கர் டர்க் கூறியுள்ளார். இந்தநிலையில், புதிய அணுகுமுறை, ஒத்திசைவானதும், காலக்கெடுவை வழங்கக்கூடியதாகவும் அமைய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும்
பொறுப்புக்கூறல், நீதியை வழங்குதல், நீண்டகாலமாக இலங்கை மக்கள் அனுபவித்துவரும் அரசியல் ரீதியான பாகுபாடுகள் மற்றும் பிரிவினையை நீக்குதல் போன்ற விடயங்களில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் வோல்கர் டர்க் தெரிவித்துள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கின் இராணுவமயமாக்கல், காணிகளை திருப்பியளித்தல் மற்றும் அனைத்து மட்ட ஆட்சிக்கும் அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட விரிவான பாதுகாப்புத் துறை சீர்திருத்தத்திற்கான அவசரத் தேவை உள்ளதாகவும் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் மொழி அங்கீகாரம் இல்லை ?
அநுர அரசின் அதிகாரப்பூர்வ வெளியீடுகளும் வலைத்தளங்களும் நாட்டின் மூன்று அதிகாரப்பூர்வ மொழிகளையும் பயன்படுத்த வேண்டும் என்று கூறுகிறது. இவ்வாறு தேசிய மக்கள் கட்சி அரசாங்கம் முறையான மாற்றத்திற்கான வாக்குறுதியை அளித்தது. ஆனால் அந்த மாற்றம் தற்போது தமிழ் மொழி எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதில் தெளிவாகத் தெரியவில்லை. கிட்டத்தட்ட ஒவ்வொரு அதிகாரப்பூர்வ அறிக்கையும் பெரும்பான்மையி சிங்கள மொழியில் மட்டுமே வெளியிடப்படுகிறது.
பண்டாரநாயக்காவின் சிங்களம் மட்டும் கொள்கை எவ்வளவு தீங்கு விளைவித்தது என்பதை மீண்டும் விளக்க வேண்டிய அவசியமில்லை. அதன் விளைவுகள் நன்கு அறியப்பட்டவை. மொழி ஒரு சக்திவாய்ந்த கருவி – அதைப் புரிந்துகொள்ள வேண்டிய நேரமிது. மொழி மூலம் அமைதியைக் கட்டியெழுப்ப வேண்டும். இதை எத்தனை முறை சொன்னாலும், இனவாத ஆணவம் பலரை அனுபவமுள்ளவர்களின் ஞானத்தைக் கேட்பதைத் தடுக்கின்றன. அந்தப் பாடங்களை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டிய காலமாகும்.
சிங்கள மட்டும் உத்தியோக மொழியா ?
சிங்கள மொழியை மட்டும் இலங்கையின் உத்தியோகபூர்வ மொழியாக மாற்றியமை இலங்கை அரசியல் வரலாற்றை புரட்டிப் போட்டதொரு நிகழ்வாகும். அதுவே இன்னும் தொடர்கின்றதா என்ற கேள்விக்குறியும் உள்ளது.
1956ஆம் ஆண்டின் 33ஆம் இலக்க உத்தியோகபூர்வ மொழிச் சட்டம், சுருக்கமாக ‘தனிச் சிங்களச் சட்டம்’ இலங்கை இனப்பிரச்சினை வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனை. தமிழர்களின் தனிவழி அரசியலுக்கான தேவை உருவாகத் தொடங்கியது இங்குதான். மொழியுரிமைப் பிரச்சினையை ஆரம்பித்து வைத்ததன் மூலம், இலங்கையின் எதிர்கால அரசியலை இனப்பிரச்சினை எனும் காலனிடம் பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கம் கையளித்தது.
1956ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது வழங்கிய சிங்கள மொழியை இந்நாட்டின் உத்தியோகபூர்வ மொழியாக்குவேன் என்ற உறுதிமொழியை நிறைவேற்றும் முகமாக, தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து விரைவிலேயே உத்தியோகபூர்வ மொழிச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
சிங்கள மொழி இலங்கையின் ஒரே உத்தியோகபூர்வ மொழியாக இருக்கும் அச்சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அன்றைய நிலவரத்தின்படி இலங்கையில் சிங்களவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 70 சதவீதம்.
சிங்கள-பௌத்த தேசியத்தின் மீட்பராக, அதையே இலங்கையின் சுதேசியமாக, மேற்கத்தேய காலனித்துவத்திலிருந்து பெறும் விடுதலையாக வியாக்கியானம் செய்த பண்டாரநாயக்க, இலங்கையிலுள்ள சிறுபான்மையினரின் நலன்கள் பற்றிச் சிந்திக்காது, தான் செய்யப் போகும் காரியம் இந்நாட்டின் எதிர்காலத்தை எவ்வாறு பாதிக்கும் எனும் தூரதரிசனத்தை துறந்து செயற்பட்டார். இதன் விளைவுகளையே இந்த நாடு இன்று வரை அனுபவிக்கிறது.
ஆனால் தற்போதைய புதிய அரசியல் சூழலில் இந்த போக்கே இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதை மறுக்க முடியாது. பேச்சளவிற்கு இன ஒற்றுமை என்ற பெயரில், தமிழ் மொழி இன்னமும் இரண்டாம் தர மொழியாகவே சிறிலங்காவில் இருக்கிறது.

![]()