நாட்டில் ஒழுக்கமற்ற கலாசாரத்தை உருவாக்குவதற்கு எந்தவொரு அரசாங்கத்துக்கும் இடமளிக்க முடியாது

ஓரின சேர்க்கை திருமணங்களைப் பதிவு செய்வதற்காக பல்வேறு வழிகளில் நாட்டுக்குள் பல செயற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளித்து சமூக சீரழிவை ஏற்படுத்த முயற்சிக்கும் அரச அதிகாரிகள் எந்தளவு உயர் அதிகாரத்தில் இருந்தாலும் அவர்களை பதவி நீக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டில் ஒழுக்கமற்ற கலாசாரத்தை உருவாக்குவதற்கு எந்தவொரு அரசாங்கத்துக்கும் நாம் இடமளிக்கப் போவதில்லை என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
திஹாரிய தேவாலயத்தில் இடம்பெற்ற விசேட ஆராதனையின் போதே பேராயர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது நாட்டில் சில சமூக சீரழிவுகள் இடம்பெற்று வருகின்றன. இவை ஆட்சியமைக்கும் அரசாங்கங்களின் தீர்மானங்கள் அல்ல. ஆனால் குறிப்பிட்ட சில நிறுவனங்கள் அல்லது அமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்களாகும்.
அண்மையில் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை ஓரின சேர்க்கையாளர்கள் நாட்டுக்கு பயணம் செய்து சுற்றுலாத்துறையூடாக வருமானத்தை ஈட்டுவதற்கு அனுமதியளிக்குமாறு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதை இந்நாட்டு ஆட்சியாளர்கள் அறிவார்களா? எதிர்கால சந்ததியினரை இவ்வாறு சமூக சீர்கேடுகளுக்குள் தள்ள முடியுமா? நாட்டில் சிறந்த வளம் மனித வளமாகும்.
மனித வளத்தில் முக்கியமானது பிள்ளைகளாகும். அவ்வாறிருக்கையில் பிள்ளை வளம் வேண்டாம் எனக் கூறி, பாலியலை மாத்திரம் முன்னிருத்தும் கலாசாரத்தை எவ்வாறு அங்கீகரிக்க முடியும்? இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எந்தவொரு அரசாங்கத்துக்கும் எம்மால் இடமளிக்க முடியாது.
எமது பிள்ளைகளை நாம் பாதுகாக்க வேண்டும். அவர்களே நாட்டின் எதிர்காலமாவர். ஓரின சேர்க்;கையை பிறவிக்குணமாகக் கொண்டவர்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும்.
அவர்களது உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களை ஓரங்கட்டுவது சிறந்ததல்ல. ஆனால் அதனை வாழ்க்கை முறைமையாக மாற்றுவதற்கு இடமளிக்க முடியாது.
இதனை பிள்ளைகள் மீது சுமத்துவதற்கும் இடமளிக்க முடியாது. ஓரின சேர்க்கையாளர்களான சுற்றுலாப்பயணிகளுக்கு எமது எதிர்கால சந்ததியினரை இரையாக்க முடியாது.
தற்போது சிறுவர்கள் பாதுகாக்கப்படாவிட்டால் நாடு அழிவடையும். இது அமெரிக்காவோ, அவுஸ்திரேலியாவோ அல்லது பிரித்தானியாவோ அல்ல. இது இலங்கையாகும். இலங்கைக்கு இவை அநாவசியமானவை.
இவை நாட்டின் கலாசாரங்களை அழிக்கும் செயற்பாடுகளாகும். நாட்டில் ஒழுக்கமற்ற கலாசாரத்தை உருவாக்குவதற்கு எந்தவொரு அரசாங்கத்துக்கும் நாம் இடமளிக்கப் போவதில்லை.
நாட்டில் அதியுயர் பதவியிலிருப்பவருக்கு இது தெரியுமா என்பது எமக்கு தெரியாது. இது குறித்து தெரிந்தால் அதனை நிறுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
ஓரின சேர்க்கை திருமணங்களைப் பதிவு செய்வதற்காக பல்வேறு வழிகளில் நாட்டுக்குள் பல செயற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அண்மையில் பெண்கள் இருவர் தேவாலயமொன்றில் அருட்தந்தையொருவரை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர்.
இதன் மூலம் எதிர்பார்க்கப்படுவது என்ன? கிருஸ்தவர்கள் எனக் கூறிக் கொள்ளும் சில மேற்குலக நாடுகளில் கலாசாரம் சீரழிந்துவிட்டது. வருமானத்துக்காக அந்த கலாசாரங்களை எமது நாட்டில் ஊடுருத்த ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது.
அவ்வாறான வருமானம் எமக்கு தேவையில்லை. நாம் வறுமையைப் பழகிக் கொள்கின்றோம். நாட்டு மக்கள் வறுமையிலிருக்கின்றோம் என்பதை ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் எமக்கு ஒழுக்கமான கொள்கையொன்று இருக்க வேண்டும். இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளித்தால் நாட்டில் பிரச்சினைகள் அதிகரிக்கும்.
எனவே இவற்றுக்கு அனுமதியளிப்பது குறித்து சிந்திக்க வேண்டாம் என அரச தலைவர்களுக்கும் கூறிக் கொள்கின்றோம். கலாசார சீரழிவுகளுக்கு இடமளிக்கும் அதிகாரிகள் எந்தளவு உயர்ந்த அதிகாரத்தில் இருந்தாலும் அவர்களை பதவி நீக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.
![]()