தமிழகத்திற்கு பதிலளிப்பதற்காக அநுர கச்சதீவு செல்லவில்லை

தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் கருத்துக்களுக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கச்சதீவு பயணத்திற்கும் இடையில் தொடர்புகள் கிடையாது என்றும், சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பில் ஆராய்வதற்காகவே ஜனாதிபதி அங்கு சென்றார் என்றும் அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது, ஜனாதிபதியின் கச்சதீவு பயணம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முதலாவது அரச தலைவராக கச்சதீவுக்கு சென்றுள்ளார். இதற்கான காரணம் என்ன? தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு பதிலளிப்பதற்காகவா அவர் அங்கு சென்றார்? என்று கேள்வியெழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அமைச்சரவை பேச்சாளர் கூறுகையில்,
கச்சதீவுக்கு ஜனாதிபதி சென்றதில் விசேஷம் எதுவும் கிடையாது. எவ்வாறாயினும் தென்னிந்தி அரசியல்வாதிகள், அரசியல் தலைவர்கள் வாக்குகளை நோக்கமாக கொண்டு அடிக்கடி கச்சதீவு தொடர்பிலோ வடக்கு பிரச்சினை தொடர்பிலோ எதனையாவது கூறுவர். ஆனால் கச்சதீவு தொடர்பில் மீண்டும் பேசுவதற்கான தேவை கிடையாது. அது எமக்கு சொந்தமான நிலமாகும். நாங்கள் சுற்றுலாத் துறையை இலக்காக கொண்டு அபிவிருத்தி தொடர்பில் அந்தப் பக்கத்திற்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தென்னிந்தியாவின் கருத்துக்களுக்கும் ஜனாதிபதியின் கருத்துக்கும் இடையில் தொடர்புகள் கிடையாது. அரச தலைவர் என்ற வகையில் எமது நாட்டின் சகல இடங்களுக்கும் செல்வதற்கும், அந்த இடங்களின் அபிவிருத்தி தொடர்பில் ஆராய்வதற்கும் முடியுமாக இருப்பது நல்லதே. யாழ்ப்பாணம் சென்றபோது கச்சதீவு சென்றமை பெறுமதியானது என்றார்.
![]()