இலங்கை

பாராளுமன்ற சிறப்புரிமைக்குள் ஏன் ஒழிக்கிறீர்கள்; பிரபாகரனின் ஆயுதங்கள் என்றால் சி.ஐ.டி.முன் துணிந்து கூற முடியுமா?

323 கொள்கலன்களில் பிரபாகரனின் ஆயுதங்கள் தான் இருந்ததாக பாராளுமன்ற சிறப்புரிமையில் இருந்து கொண்டு தைரியமாக கூறியவர்கள் இது உண்மையாயின் ஏன் குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலமளிக்க அச்சமடைய வேண்டும்.ஒன்று பொய்யுரைத்ததாக ஏற்றுக்கொள்ளுங்கள் அல்லது விசாரணைகளுக்கு செல்லுங்கள் என சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை பரிசோதனையின்றி 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எம்.பி. தயாசிறி ஜயசேகர முன்வைத்த விடயங்களுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க மேலும் கூறுகையில்,

பாராளுமன்றத்திற்குள் பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்திக் கொண்டும்,வெளியில் பேச்சுரிமையை பயன்படுத்திக் கொண்டும் எதிர்க்கட்சியினர் பொய் கூறுகின்றார்கள்.தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று குறிப்பிட்டார்கள்.அரசு என்ற வகையில் அது குறித்து எவ்வாறு விசாரிக்காமல் இருக்க முடியும்?தாங்கள் கூறுவதில் உண்மை இருந்தால் விசாரணைகளுக்கு செல்ல இவர்கள் ஏன் அச்சமடைய வேண்டும்?. பாராளுமன்ற சிறப்புரிமையில் இருந்துக் கொண்டு எது வேண்டுமானாலும் கூற முடியுமா?பொய்களையும் கூற முடியுமா?

323 கொள்கலன்கள் விடுவிப்புக்கு நான் அனுமதி வழங்கியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை முற்றாக நிராகரிக்கிறேன்.கடந்த ஜனவரி மாத காலப்பகுதியில் இந்த கொள்கலன்கள் மேல் மாகாண ஆளுநருடையது என்று அனைவரும் குறிப்பிட்டார்கள். பாராளுமன்றத்திலும் அதைக்கூறி கூச்சலிட்டார்கள். இந்த குற்றச்சாட்டுக்கு எதிராக ஆளுநர் நடவடிக்கை எடுத்ததன் பின்னர் தற்போது அவ்வாறு குறிப்பிடவில்லை என்று கூறுகின்றார்கள்.

5மாதங்களுக்கு பின்னர் இந்த கொள்கலன்களை நான் விடுவித்ததாக குறிப்பிட்டார்கள். நான் விடுவித்திருந்தால் நீதிமன்றத்துக்கு செல்லுங்கள், வழக்குத் தாக்கல் செய்யுங்கள்.அரச நிதியை மோசடி செய்து நாங்கள் அரசியலுக்கு வரவில்லை.இந்த பாரதூரமான குற்றச்சாட்டை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.கொள்கலன்களை விடுவிக்கும் அதிகாரம் எனக்கு கிடையாது, அமைச்சர் என்ற வகையில் எனக்கு உரித்தாக்கப்பட்டுள்ள அதிகாரங்களையும் நான் பயன்படுத்துவதில்லை. பரிசோதனைகளின்றி கொள்கலன்களை விடுவிப்பதற்கு எனக்கு எவ்வித அவசியமும் கிடையாது.

323 கொள்கலன்களில் பிரபாகரனின் ஆயுதங்கள் தான் இருந்ததாக பாராளுமன்ற சிறப்புரிமையில் இருந்து கொண்டு தைரியமாக கூறினார்கள் இது உண்மையானால் ஏன் குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலமளிக்க அச்சமடைய வேண்டும்?ஒன்று பொய்கூறினோம் என்று ஏற்றுக்கொள்ளுங்கள் அல்லது விசாரணைகளுக்கு செல்லுங்கள் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button