இலங்கை

அமைச்சரை இதுவரை விசாரிக்காதது ஏன்?; நாமல் எம்.பி. கேள்வி 

சிவப்பு நிற ஸ்டிக்கர் கொண்ட 323 கொள்கலன்கள் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்டமை தொடர்பில் துறைமுக அபிவிருத்தி அமைச்சர், பிரதி அமைச்சரோ ஏன் இதுவரையில் விசாரணைக்குட்படுத்தவில்லை?ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு விவகாரத்தில் ஜனாதிபதியின் செயலாளரோ, நீதியமைச்சரோ அல்லது நீதியமைச்சின் செயலாளரோ ஏன் பொறுப்புக்கூறவில்லை.என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பி.யான நாமல் ராஜபக்ஸ கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச் ) சட்டத்தின் கீழ் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானியின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பிய அவர் மேலும் பேசுகையில்,

கடந்த 16 ஆண்டுகளாக உப்பு இறக்குமதி செய்யப்படவில்லை என்பதை அரசாங்கம் தெரிந்து கொள்ள வேண்டும். மோசடி செய்வதற்காக தான் அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதாக என்று கடந்த காலங்களில் குற்றம்சாட்டினீர்கள்

இன்று அரிசி, தேங்காய், உப்பு என்று அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் இறக்குமதி செய்யப்படுகின்றன .நீந்கள் முன்னர் குற்றம்சாட்டியதைப் போன்று மோசடி செய்வதற்காகவா அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன?

அரச நிர்வாகத்தில் இடம்பெறும் தவறுகள் மற்றும் குறைகளை அரச அதிகாரிகள் மீது சுமத்தி விட்டு தப்பித்துக் கொள்ளும் புதிய கலா சாரத்தை இந்த அரசாங்கம்ஆரம்பித்துள்ளது . சிவப்பு நிற ஸ்டிக்கர் கொண்ட323 கொள்கலன்கள் விடுவிப்பு விவகாரத்திலும் இந்த பிரச்சினை தோற்றம் பெற்றது. பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களில் என்னவிருந்தது என்பது எவருக்கும் தெரியாது.

பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட கொள்கலன்களில் என்னவிருந்தது என்பதை அறிவோம், அந்த கொள்கலன்கள் எங்குள்ளது என்று கடந்த காலங்களில் இந்த அரசாங்கத்தில் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் குறிப்பிட்டார்கள். ஆனால் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு இந்த கொள்கலன்கள் விடுவிப்பு தவறு என்று அறிக்கை சமர்ப்பித்ததும், அரச அதிகாரிகள் மீது பழி சுமத்துகிறார்கள்.அரசாங்கத்தின் தவறுகளுக்கு அரச அதிகாரிகள் பலிக்கடாவாக்கப்படும் நிலைமை காணப்படுகிறது.

ஜனாதிபதி பொதுமன்னிப்பு விவகாரத்திலும் இவ்வாறான நிலைமையே உள்ளது . ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் பிரகாரமே குறித்த கைதி விடுவிக்கப்பட்டாரே தவிர, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தின் பொதுமன்னிப்பில் அல்ல என்பதை குறிப்பிட்டுக் கொள்ள வேண்டும்.ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு விவகாரத்தில் ஜனாதிபதியின் செயலாளரோ, நீதியமைச்சரோ அல்லது நீதியமைச்சின் செயலாளரோ பொறுப்புக்கூறவில்லை.ஆனால் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் சிறையில் உள்ளார்.

பரிசோதனையின்றி நிற ஸ்டிக்கர் கொண்ட 323 கொள்கலன்கள் தொடர்பில் முறைப்பாடளித்துள்ளதாக குறிப்பிட்டீர்கள்.அந்த விசாரணைகளின் முன்னேற்றம் என்ன ? துறைமுக அமைச்சர் மற்றும் துறைமுக பிரதி அமைச்சர் இந்த கொள்கலன்கள் விடுவிப்பு பற்றி தமக்கு தெரியும் என்று ஆரம்பத்தில் குறிப்பிட்டார்கள்.ஆனால் இதுவரையில் அவர்கள் விசாரணைக்குட்படுத்தப்படவில்லை. ஆனால் இவ்விடயம் பற்றி பாராளுமன்றத்தில் பேசிய தயாசிறி ஜயசேகர மற்றும் அர்ச்சுனா ஆகியோர் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டார்கள்.

கொள்கலன்கள் விடுவிப்பு முறைகேடானது என்று ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு அறிக்கை சமர்ப்பித்துள்ள நிலையில், அடுக்கத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் அரசாங்கம் அமைதி காக்கிறது என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button