பலதும் பத்தும்

ஆக்சியம் 04 விண்கலத் திட்டம் பல தடைகளைத் தாண்டி மீண்டும் பயணம்!

இந்தியாவின் சுபான்ஷு சுக்லா உள்பட 4 விண்வெளி வீரர்களுடன் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு (ஜூன் 25) புறப்பட திட்டமிடப்பட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.

பல காரணங்களால் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 பேரின் விண்வெளி பயணம் பல தடவைகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் நாளை மீண்டும் அந்தப் பயணம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரோ, நாசா மற்றும் ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனங்களின் கூட்டு முயற்சியாக , சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை அனுப்பும் ஆக்சியம்-4 விண்கலம் கடந்த 11 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட இருந்தது. அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் மூலம் ஏவப்படவிருந்த இந்த பயணம், கடந்த 11ம் தேதி மாலை 5.30 மணிக்குப் புறப்படுவதாக திட்டமிடப்பட்டிருந்தது.

தனியார் மனித விண்வெளிப் பயணத்தில், இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த மிஷன் கமாண்டர் பெக்கி விட்சன், ஹங்கேரியைச் சேர்ந்த விண்வெளி நிபுணர் திபோர் கபு, போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி என மொத்தம் நான்கு விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்திற்குச் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும் மோசமான வானிலை மற்றும் ஆக்ஸிஜன் கசிவு காரணமாக விண்வெளி பயணம் தொடர்ந்து 6 ஆவது முறையாக ஒத்திவைக்கப்பட்டு ஆக்ஸியம் 4 திட்டம் செயல்படுத்தப்படும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே ஆக்சியம் 04 விண்வெளிப் பயணம் மீண்டும் நாளை புறப்படவுள்ளதாக நாசா அறிவித்துள்ளது. இந்த ஆக்ஸியம்-4 திட்டத்தின் மூலம் 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு இந்திய குடிமகன் விண்வெளிக்குச் செல்கிறார். அவரது இந்தப் பயணம் இஸ்ரோவின் விண்வெளி உயிரியல் மற்றும் விண்வெளி விவசாய ஆராய்ச்சிக்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button