இலங்கை

சிந்துஜா,வேனுஜா ஆகியோரின் மரணத்திற்கு நீதி கோரி போராட்டம் – பல மாதங்களுக்கு பின்னர் மூவர் கைது

மன்னார் பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற மகப்பேற்று சிகிச்சைகளின் போது மரணமடைந்த சிந்துஜா மற்றும் பட்டி தோட்டத்தை சேர்ந்த வேணுஜா மற்றும் அவரின் சிசுவின் மரணத்திற்கு நீதி கோரி இடம்பெற்ற போராட்டத்தில் பொதுமக்கள் சார்பாக முன்னின்று போராடியவர்கள் மூவர் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(8) மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பாக சட்ட விரோதமாக பொது மக்களை ஒன்று கூட்டியமை மற்றும் பொது சொத்துக்களை சேதப்படுத்தியமை உள்ளிட்ட பல பிரிவுகளில் சம்பந்தப்பட்ட மூன்று இளைஞர்களும் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன்பாக பொது அழைப்பின் பெயரில் ஒன்று கூடிய பொதுமக்கள் மன்னார் பொது வைத்தியசாலையில் இடம் பெறும் பல்வேறு சீர்கேடுகளுக்கு எதிராக அமைதியான போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இந்த நிலையில் போராட்டக்காரர்களின் கோரிக்கை தொடர்பில் பல்வேறு வாக்குறுதிகளை அதிகாரிகளால் வழங்கப்பட்ட போதிலும் அதை ஏற்க மறுத்த சில போராட்டக்காரர்களால் போராட்டம் வன்முறையாக மாற்றம் அடைந்தது.

இந்த நிலையில் வீதிகளை மறித்தும் டயர்களை கொளுத்தியும் போராட்டகாரர்கள் சிலர் தங்கள் எதிர்ப்புக்களை தெரிவித்த நிலை போராட்டத்தில் சில விசமிகள் புகுந்து பொலிஸார் மீதும் வைத்தியசாலை மீதும் கல் வீச்சுக்களை மேற்கொண்டு போராட்டத்தை திசை திருப்பி இருந்தனர்.

இவ்வாறான நிலையில் போராட்டம் இறுதியில் சுமுகமான நிலையில் நிறைவடைந்த போதிலும் மக்கள் சார்பாக போராட்டத்தில் கலந்து கொண்ட மூவரை பல மாதங்கள் கழித்து மன்னார் பொலிஸார் இன்றைய தினம் (8) கைது செய்துள்ளனர்.

சிந்துஜா மற்றும் வேணுஜா வின் மரணம் தொடர்பில் விசாரணைகள் இதுவரை முடிவுறுத் தப்படாத நிலையில் அவர்களுக்கு, அவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்காத நிலையில் அவர்கள் சார்பாக போராடிய மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது ,

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button