முச்சந்தி

உள்ளூராட்சி அதிகாரசபைத் தேர்தல் – 2025; கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் வேண்டுகோள்

தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் –
தலைவர், கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு

கட்சி மற்றும் தனிநபர் நலனாலும், பதவிமோகத்தாலும் ஏற்கெனவே குழம்பிப் போயுள்ள தமிழர்களுடைய அரசியல் பொதுவெளியில் அண்மையில் கூட்டுச் சேர்ந்துள்ள தமிழ் அரசியல் கட்சிகளும் தனித்து விடப்பட்ட தமிழ் அரசியல் கட்சிகளும், தமிழர் பலவீனத்தில் தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகள் தாமே எனும் கட்சிகளும் எதிர்வரும் உள்ளூராட்சி அதிகாரசபைத் தேர்தலில் ‘வாக்குமீன்’ பிடிப்பதற்காக வலைகளுடனும் அத்தாங்குகளுடனும் காத்துநிற்கின்றன.

கடந்த காலங்களில் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய அனைத்து அரசியல் கட்சிகளும் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினையை முன்வைத்து தேர்தல் தேவைகளுக்காகச் சுலோகங்களாலும் – கற்பனாவாதக் கோரிக்கைகளாலும் – கோசங்களாலும்- ஆர்ப்பாட்டங்களாலும்- பேரணிகளாலும் – கட்சிகளின் மாநாட்டுத் தீர்மானங்களாலும் – பாராளுமன்ற உரைகளினாலும் – பத்திரிகை அறிக்கைகளாலும் – ஊடகச் சந்திப்புக்களாலும், 13ஆவது திருத்தத்தின் முழுமையானதும் முறையானதுமான அமுலாக்கத்தைக்கூடச் செய்துகொள்ள முடியாத வெற்று வேட்டு அரசியலையே செய்து வந்திருக்கின்றன.

இதற்குக் காரணம், தமிழர் பிரச்சினையை அறிவுபூர்வமானதும் நடைமுறைச் சாத்தியமுமான உபாயங்களுடன் அணுகப்படுவதற்கான சரியான தலைமைத்துவங்கள் சமூக அடிமட்டத்திலிருந்து உருவாகாததினாலாகும். இந்தத் தலைமைத்துவங்களைத் தேர்ந்தெடுப்பதில் இந்தத் தேர்தல் முக்கியமான பங்கினை வகிக்கின்றது.

எனவே, வடக்குக் கிழக்குத் தமிழ் மக்களுக்கு இன்று தேவை கடந்த 75 வருடகால அரசியல் மனப்போக்கிலிருந்தும் அணுகுமுறையிலிருந்தும் முற்றாக விடுபட்டதொரு ‘மாற்று அரசியல்’ ஆகும்.

இந்த ‘மாற்று அரசியல்;’ கட்சி மற்றும் தனிநபர் நலன், தலைமைத்துவ விசுவாசம் (தனி நபர் வழிபாடு), பதவி மோகம் என்பவற்றுக்கப்பால் உண்மையும் நேர்மையும் வெளிப்படைத் தன்மையும் முழுக்க முழுக்க மக்கள் நலன்களை மட்டுமே நோக்கமாகக் கொண்டமைதல் அவசியம்.

இந்த ‘மாற்று அரசியல்’உள்ளூர் அதிகார சபை மட்டத்திலிருந்து கட்டியெழுப்பப்பட வேண்டும். அதற்கு எதிர்வரும் உள்ளூராட்சி அதிகாரசபைத் தேர்தலைப் பரீட்சார்த்தக்களமாகப் பயன்படுத்த வடக்குக் கிழக்குத் தமிழர்கள் தயாராக வேண்டும்.

இதன் அடிப்படையில், வடக்குக் கிழக்குத் தமிழ் மக்கள் அவாவி நிற்கும் மாற்று அரசியலுக்குத் தயாராவதற்கான மார்க்கம் உள்ளூர் அதிகாரசபைகளின் நிர்வாகத்தை ஒரு தனிப்பட்ட கட்சியிடம் ஒப்படைப்பதை நோக்கமாகக் கொண்டு வாக்களிக்காமல் கட்சி மற்றும் தனிநபர் நலன், தலைமைத்துவ விசுவாசம், பதவி மோகம் என்பவற்றுக்கப்பால், உண்மையும் நேர்மையும் வெளிப்படைத் தன்மையும் முழுக்க முழுக்க மக்கள் நலன்களை மட்டுமே இலக்காகக் கொண்டு உழைக்கக் கூடிய வேட்பாளர்களைத் தெரிவு செய்து அவ்வாறான மக்கள் சேவகர்களிடம் (அத்தகையோர் எந்தக் கட்சியில் போட்டியிட்டாலும் அல்லது சுயேச்சைக் குழுக்களில் இருந்தாலும்) நிர்வாகத்தை ஒப்படைப்பதை நோக்கமாகக் கொண்டு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றோம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button