முச்சந்தி

தீர்க்கப்படாத காஷ்மீர் பிணக்கு: மீளும் இந்திய – பாகிஸ்தான் முறுகல்!… ஐங்கரன் விக்கினேஸ்வரா

(காஷ்மீர் காஷ்மீரிகளுக்கு மட்டுமே சொந்தம் என்பதே அங்கு வாழும் மக்களின் அடிப்படை உரிமைக் குரலாக இருக்கிறது. காலங்கடந்தும் தீராத பதில் தான் ஒன்று தான். அதுவே காஷ்மீர் இந்தியாவுக்கும் இல்லை, பாகிஸ்தானுக்கும் இல்லை. வரலாற்று உண்மையாக இருவருக்கும் சொந்தமில்லை, காஷ்மீர் காஷ்மீரிகளுக்கு மட்டுமே சொந்தம் என்பதே யதார்த்தமாகிறது)
தெற்கு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த 22/4/25 செவ்வாய்க்கிழமை அன்று நடந்த கொடூர தாக்குதலில் சுமார் 25 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர்.
பஹல்காமில் கொடூர தாக்குதல்:
சுற்றுலா தலமாக விளங்கும் பஹல்காமில் நடந்த தாக்குதல் பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அண்மைய ஆண்டுகளில் பொது மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இது மிகப் பெரிய கொடுமை என ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கு காடுகள், தெளிவான நீர் நிறைந்த ஏரிகள், பரந்த புல்வெளிகளுக்கு பெயர்பெற்ற இந்த பகுதிக்கு கால்நடையாகவோ அல்லது குதிரை மூலமாகவோ மட்டுமே செல்ல முடியும். இங்கு சென்ற சுற்றுலாப் பயணிகளை நெருக்கமாக நிறுத்தி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட இந்த கொடிய தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) பொறுப்பேற்றுள்ளது.
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இந்த தருணத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது ஒரு திட்டமிட்ட தாக்குதலாகவும் கருதப்படுகிறது.
இந்தியா ராணுவ நடவடிக்கை ?
இந்த தாக்குதலை யார் செய்தார்கள் என்பதை இந்தியா தீர்மானித்த பிறகு, பதிலடி நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனாலும் எதிர்வரும் வாரங்களில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ராணுவ நடவடிக்கை எடுக்கக் கூடும் என்று பாகிஸ்தான் முன்னணி பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.
இந்தியா ராணுவ நடவடிக்கை மே மாதத்தின் கடைசி வாரத்தில் எடுக்க அறுபது சதவீத வாய்ப்பு உள்ளது என்றும் மற்றொரு ஊடகவியலாளர் குறிப்பிட்டுள்ளார்.
காஷ்மீர் சகோதரர்களின் போராட்டத்தை மறக்க முடியாது என ஒரு வாரத்திற்கு முன்பு பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஜெனரல் முனீர் தெரிவித்த கருத்து வெளியானதன் பின்னர் இந்த கோர நிகழ்வு நடந்துள்ளது.
காஷ்மீர் காஷ்மீரிகளுக்கே !
காஷ்மீர் காஷ்மீரிகளுக்கு மட்டுமே சொந்தம் என்பதே அங்கு வாழும் மக்களின் அடிப்படை உரிமைக் குரலாக இருக்கிறது. காலங்கடந்தும் தீராத பதில் தான் ஒன்று தான். அதுவே காஷ்மீர் இந்தியாவுக்கும் இல்லை, பாகிஸ்தானுக்கும் இல்லை. வரலாற்று உண்மையாக இருவருக்கும் சொந்தமில்லை, காஷ்மீர் காஷ்மீரிகளுக்கு மட்டுமே சொந்தம் என்பதே யதார்த்தமாகிறது.
வரலாற்று ரீதியில் இந்தியா சுதந்திரம் அடைந்ததும் இந்திய நிலப்பரப்பில் அடங்கி இருந்த சமஸ்தனங்கள் இந்தியாவோடும், பாகிஸ்தான் நிலப்பரப்பில் அமைந்த சமஸ்தானங்கள் பாகிஸ்தானோடும் இணைந்தன.
புவியியல் ரீதியாக இரண்டில் இருந்தும் ஒதுங்கி இருந்த காஷ்மீர் தனி நாடாகவே இருந்து விட்டது. மக்கள் தொகையில் பெரும்பாலானோர் முஸ்லீம்களாகவும் மன்னர் இந்துவாகவும் இருந்தும் கூட எந்தப் பிணக்கும் அங்கு பாரிய அளவில் அக்காலத்தில் ஏற்படவில்லை.
பாகிஸ்தான் பேராசைப்பட்டது போல காஷ்மீர மக்கள் முஸ்லீம்கள் என்பதால் தாங்கள் படையெடுத்துச் சென்றால் நம்மை ஆதரிப்பார்கள் என்று தப்பு கணக்கு போட்டு பாகிஸ்தான் உள்ளே நுழைய நாட்டைக் காக்க மன்னர் ராம்சிங் இந்திய ராணுவத்தின் உதவியை நாடினார்.
காஷ்மீரின் தொடர் பிணக்கு :
1947 பிரிவினையின் போது பாகிஸ்தான் ஆக்கிரமித்த பகுதியை பாகிஸ்தான் எடுத்துக் கொள்ள , இந்தியப் படைகள் நுழைந்த பிறகு மிஞ்சிய பகுதிகளை இந்தியா இணைத்துக் கொண்டது. அன்று பிடித்தது அந்த நிலப்பரப்பிற்கும் காஷ்மீர் மக்களுக்கும் தீராத வலி.
1940களின் இறுதியில் காஷ்மீரை இந்தியாவோடு இணைத்த போது நேரு அப்போது சில உரிமைகளை அரசியல் சாசனப் பிரிவிலேயே எழுதிக் குடுத்தார். ஆனால் அவைகள் தான் தற்போது நீக்கப்பட்டு இருக்கின்றன.
இந்தியாவும், பாகிஸ்தானும் சுதந்திரம் பெற்றது முதல் தீர்க்கப்படாத பிரச்சினையாக காஷ்மீர் விவகாரம் இருந்து வருகிறது. நிலப்பகுதிகள் ஆக்கிரமிப்பு, அதனைத் தொடர்ந்து போர் அல்லது ராணுவ நடவடிக்கை நடைபெறுவதும் காஷ்மீரில் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த விவகாரத்துக்காக இந்தியாவும், பாகிஸ்தானும் ஐ.நா.வரை சென்று குரல் எழுப்பிய வரலாறும் தொடர்ந்து நடந்து வந்துள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு :
1947-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பாகிஸ்தான் பழங்குடி மக்களைக் கொண்ட படை காஷ்மீருக்குள் நுழைந்தது. தற்போதைய பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை வளைத்தது. பாகிஸ்தான் ராணுவம் பின்புலத்தில் இருந்து செயல்பட்டது.
வேறு வழியில்லாத சூழலில் மன்னர் ஹரி சிங், இந்தியாவிடம் ராணுவ உதவி கோரினார். காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க அவர் சம்மதித்தார். அப்போது பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் மன்னர் ஹரி சிங் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
காஷ்மீர் இந்தியாவுடன் இணைய ஒப்புக்கொண்டது. அதன் பாதுகாப்புக்கு இந்தியா முழு பொறுப்பேற்றது. இருப்பினும் பாகிஸ்தான் காஷ்மீரின் குறிப்பிட்ட பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டதால் நேரு, ஐ.நா.விடம் முறையிட்டார்.
இதனைத் தொடர்ந்து ஐ.நா. சபையின் தீர்மானத்தின்படி பாகிஸ்தான் படைகளும் தங்கள் பகுதிக்குள் இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போதைய நிலையில் கட்டுப்பாட்டுக் கோடு உருவாக்கப்பட்டது. இன்றவுளவும் அதுவே காஷ்மீரின் பாகிஸ்தானுடனான தார்மீக எல்லையாக இருந்து வருகிறது.
1962 இந்தியா – பாக். போர்:
இந்தக் காரணத்தை முன்வைத்தே இரு நாடுகள் இடையே போர்களும் நடந்துள்ளன. 1962ம் ஆண்டு முதல் இந்தியா – பாக். போர் மூன்று தடவைகள் நடந்துள்ளது.
1989-ம் ஆண்டுக்குப் பிறகு காஷ்மீரில் தீவிரவாதம் புதிய வடிவத்தை எடுத்தது. காஷ்மீர் தீவிரவாதமும், அதனைத் தூண்டிவிடும் பாகிஸ்தானும் இன்றளவும் இந்தியாவுக்குப் பெரிய தலைவலியாக இருந்து வருவதாக மத்திய அரசு குற்றஞ்சாட்டி வருகிறது.
அரசியல் ரீதியாக காஷ்மீர் பல துண்டுகளாகி விட்டன. தேசிய மாநாட்டுக் கட்சி மட்டுமின்றி மக்கள் ஜனநாயக கட்சியும் காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்களின் கட்சியாக விளங்குகிறது. பாஜகவும், காங்கிரஸும் ஜம்மு பகுதியை பிரதிநிதித்துவப் படுத்த மத முரண்பாட்டை பயன்படுத்துவதுடன், அரசியல் மட்டுமின்றி பிரிவினைவாதம், தீவிரவாதம் என பல வடிவங்களைக் கொண்ட சிக்கல் நிறைந்த பிரச்சினையாக காஷ்மீர் உருவெடுத்துள்ளது.
காஷ்மீர் காஷ்மீரிகளுக்கு சொந்தம் !
ஆயினும் காஷ்மீரிகள் பல்லாண்டுகளாக தொடரும் அடக்குமுறைகளின் மத்தியிலும், இன்னமும் தங்கள் சுய அடையாளத்தை இழக்கவில்லை. அவர்களைப் பொறுத்த அளவில் அவர்கள் இந்தியரும் அல்ல! பாக்கிஸ்தானியரும் அல்ல! காஷ்மீரிகள்!! இந்த இரு நாட்டிற்கும் சொந்தமில்லை, காஷ்மீர் காஷ்மீரிகளுக்கு மட்டுமே சொந்தம் என்பதே உண்மை.
காலங்கடந்தும் தீராத பதில் தான் ஒன்று தான். அதுவே இந்தியாவுக்கா அன்றில் இல்லை பாக்கிஸ்தானுக்கோ இல்லை. வரலாற்று உண்மையாக இருவருக்கும் சொந்தமில்லை, காஷ்மீர் காஷ்மீரிகளுக்கு மட்டுமே சொந்தம் என்பதே யதார்த்தமாகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button