மூத்த ஊடகவியலாளர் பாரதி காலமானார்

ஞாயிறு தினக்குரல், தினக்குரல் ஒன்லைன் ஆகியவற்றின் முன்னாள் பிரதம ஆசிரியரும் வீரகேசரி வடபிராந்தியப்பதிப்பின் ஆசிரியருமான மூத்த பத்திரிக்கையாளர் இராசநாயகம் பாரதி தனது 63 ஆவது வயதில் காலமானார்.
தினக்குரல் முன்னாள் உதவியாசிரியரான தேவகியின் துணைவரான பாரதி ஒரு பிள்ளையின் தந்தையுமாவார்.
யாழ்ப்பாணம் திருநெல்வேலியைப் பிறப்பிடமாகக் கொண்ட பாரதி 1980 களில் ஈழமுரசு பத்திரிகையின் ஆசிரிய பீடத்தில் பணியாற்றியதுடன் அதன் பின்னர் முரசொலி பத்திரிகை ஆசிரிய பீடத்திலும் பணியாற்றிய நிலையில் கொழும்பை வதிவிடமாக்கிக் கொண்டதுடன் வீரகேசரி பத்திரிக்கையின் ஆசிரிய பீடத்தில் உதவியாசிரியராகப் பணியாற்றினார்.
இந்நிலையில் 1997ஆம் ஆண்டு தினக்குரல் பத்திரிகை தோற்றம் பெறவே அதில் தன்னை இணைத்துக்கொண்ட பாரதி ஞாயிறு தினக்குரல் பத்திரிகையின் பிரதம ஆசிரியராக 2021 ஆம் ஆண்டு வரை பணிபுரிந்ததுடன் தினக்குரல் ஒன்லைன் ஆசிரியராகவும் இருந்தார்.
இந்நிலையில் மீண்டும் தனது மண்ணுக்குத் திரும்பிய பாரதி ஈழநாடு பத்திரிகையின் பிரதம ஆசிரியராக பணியாற்றியதுடன் தற்போது வீரகேசரியின் வடபிராந்திய பதிப்பின் ஆசிரியராகப் பணிபுரிந்த வேளையிலேயே காலமானார்.
ஞாயிறு தினக்குரல் பத்திரிகையில் ஆர். பாரதி,அபிமன்யு , பார்த்தீபன் [அவரின் மகனின் பெயர்]ஆகிய பெயர்களில் பல்வேறு கட்டுரைகளை எழுதி வந்ததுடன் சர்வதேச ஊடகங்களுக்கும் அரசியல் கருத்துக்களையும் செவ்விகளையும் வழங்கி வந்தார். பல மாவட்டங்களிலும் நடத்தப்பட்ட ஊடகப் பயிற்சிப் பட்டறைகளிலும் வளவாளராக பயிற்சிகளை வழங்கியுள்ளார்.
அதுமட்டுமன்றி தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஸ்தாபக உறுப்பினரான பாரதி பின்னர் அதன் தலைவராகவும் செயலாளராகவும் இருந்துள்ளார்.
பாரதியின் பூதவுடல் தற்போது யாழ் திருநெல்வேலியில் உள்ள அவரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
![]()